ஓடிடியில் வெளியானது மழை பிடிக்காத மனிதன்.. தியேட்டரில்தான் பிடிக்கல இங்காவது பிடிக்குமா?
சென்னை: கோலிவுட்டின் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் ஆண்டனி நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவரது நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் மழை பிடிக்காத மனிதன் படம் வெளியானது. விஜய் மில்டன் இயக்கியிருந்த அந்தப் படம் எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது மழை பிடிக்காத மனிதன்.
சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து தன்னை ஒரு பிஸியான இசையமைப்பாளராக நிலைநிறுத்திக்கொண்டார். விஜய் உள்ளிட்டோரின் படங்களுக்கு இசையமைத்து வருடத்துக்கு ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே கோலிவுட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக அறிமுகம்: இசையமைப்பாளராக தனது பணியை சிறப்பாக செய்துகொண்டிருந்த விஜய் ஆண்டனிக்கு திடீரென நடிகராகும் ஆசை வந்தது. அதனையடுத்து நான் படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக நன்றாக நடிக்கிறாரே ஆண்டனி என்ற பெயரையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அடுத்ததாக நடித்த சலீம் படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. மேலும் விஜய் ஆண்டனிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
பிச்சைக்காரன்: நான், சலீம் படங்களுக்கு பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் பிச்சைக்காரன் படத்தில் நடித்தார் விஜய் ஆண்டனி. சசி இயக்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் விஜய் ஆண்டனியின் கரியரிலேயே அந்தப் படம்தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்பதை உறுதியாக சொல்லலாம். படத்தின் மேக்கிங்கும், எமோஷனலும், விஜய்யின் நடிப்பும் அபாரமாகவே இருந்தன.

மழை பிடிக்காத மனிதன்: அதனையடுத்து அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. பிச்சைக்காரன் 2வில் அவரே இயக்குநராகவும் களமிறங்கினார். ஆனால் அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலைமையில் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்தார் விஜய் ஆண்டனி. கோலிசோடா படத்தை இயக்கி நல்ல இயக்குநர் என்ற பெயர் பெற்ற மில்டன் இயக்குநர் என்பதால் இந்தப் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.
புலம்பிய விஜய் மில்டன்: ஆனால் எதிர்பார்த்தபடி படம் வெற்றியடையவில்லை. இதனால் இரண்டு விஜய்களுமே அப்செட் என்றே கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஒரு நிமிட காட்சியை தனக்கே தெரியாமல் சேர்த்துவிட்டார்கள். தோல்விக்கு முக்கிய காரணமே அதுதான் என்று விஜய் மில்டன் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அப்படி காட்சியை சேர்த்தவர் விஜய் ஆண்டனியாக இருப்பாரோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அது தான் இல்லை என்று விளக்கமளித்தார் ஆண்டனி.
ஓடிடியில் ரிலீஸ்: அதேசமயம் ஒரு இயக்குநருக்கு தெரியாமல் எப்படி காட்சியை சேர்க்க முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்பினர். இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மழை பிடிக்காத மனிதன் தியேட்டரிலிருந்து ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மழை பிடிக்காத மனிதன் படம் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டரில் யாருக்கும் பிடிக்காத இந்தப் படம் ஓடிடியிலாவது பிடிக்குமா என்று படக்குழுவினர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











