Romeo OTT: விஜய் ஆண்டனியை காதலனாக மாற்றிய ரோமியோ.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ரோமியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கிய இந்த படத்தில். விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான திரைப்படம் ரோமியோ. இப்படத்தின் போஸ்டரில் முதலிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது குடிப்பது மாதிரியான போஸில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் அமர்ந்து இருந்தனர். இந்த போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி, ஆண் குடிக்கிறார் என்றால் பெண்ணும் குடிக்கலாம். ஆண், பெண் இருவரும் சமம்தானே என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

ரோமியோ: இதையடுத்து இத்திரைப்படம் ஏப்ரல் 11ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அப்படத்தில், தன் குடும்பம் வாங்கிய கடனை அடைக்கவும், நல்ல நிலைமைக்கு வர மலேசியாவுக்கு வேலைக்கு சென்று நன்றாக சம்பாதித்துவிட்டு, அனைத்து கடன்களையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார் ஹீரோ விஜய் ஆண்டனி. குடும்ப பொறுப்பு இருந்ததால், இளம் பருவத்தில் வரக்கூடிய காதல் வாழ்க்கையை இவரால் வாழமுடியாமல் போனது. இதனால், காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
படத்தின் கதை: இந்த நேரத்தில் தான், மிருணாளினியை சந்திக்க விஜய் ஆண்டனிக்கு அவர் மீது காதல் வருகிறது. ஆனால் மிருணாளினியோ சினிமாவில் ஹீரோயினா வர வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் பொய் ஐடியில் வேலை செய்வதாக சொல்லிவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் விட்டில் தெரிந்து போக விஜய் ஆண்டனியுடன் திருமணம் நடக்கிறது. அப்பொழுது மிருணாளினி, விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். பின் தான் விஜய் ஆண்டனிக்கு மிருணாளினியின் சுயரூபம் வெளிப்படுகிறது. இதையடுத்து தனது மனைவிக்காக தயாரிப்பாளராக மாறுகிறார். இதில், கதாநாயகியாக மாறினாரா, இல்லையா? விஜய் ஆண்டனியும் அவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ் தேதி: திருமணமே பிடிக்காத மனைவியை திருமணத்திற்குப் பிறகு கணவர் ஒன்சைடாக எப்படி காதல் செய்து, கரெக்ட் செய்கிறார் என்ற கதைக் கருவை மையமாக வைத்து படத்தை அழகாக இயக்கி உள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மே 10ம் தேதி முதல் ஆஹா தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











