முதலமைச்சரான விஜய்.. செமயாக கல்லா கட்டும் ஜனநாயகன்.. பின்ன சி.எம் படம்னா சும்மாவா?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் இணையத்தில் லீக்காகி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இப்போது விஜய்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். எனவே கூடிய விரைவில் ஜனநாயகன் கோலாகலமாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் ஜனநாயகன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அரசியல் பிரவேசத்தை அறிவித்திருந்த விஜய் ஹெ.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார். எனவே அப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக படமானது ரிலீஸாகவில்லை. கேவிஎன் நிறுவனம் தரப்பு நீதிமன்றத்துக்கெல்லாம் சென்று பார்த்தது. ஆனால் அங்கே எதுவும் சாதகமாக அமையாததால் மீண்டும் சென்சாருக்கு அனுப்பியது படக்குழு.

இணையத்தில் லீக்கான படம்: ஆனால் மறு தணிக்கையிலும் அலுவலர்கள் இழுத்தடிக்க விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட வேதனைக்கு சென்றார்கள். ஒருகட்டத்தில் ஜனநாயகன் என்ற படத்தையே அவர்கள் மறக்க சென்றபோதுதான்; முழு படமும் இணையத்தில் லீக்காகி அடுத்தக்கட்ட அதிர்ச்சியை கொடுத்தது. யார் அப்படி ஒரு துணிகர செயலை செய்திருப்பார் என்று எக்கச்சக்க பேர் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தார்கள். பலரும் படத்தின் எடிட்டர் மீது விரலை நீட்ட; எடிட்டர் சங்கம் முன்வந்து அதெல்லாம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தது.
முதலமைச்சர் விஜய்: நிலைமை இப்படி இருக்கையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். அவர் ஆட்சியமைப்பதற்கு திமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்தார்கள். மேலும் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலும் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் விஜய்யின் தவெக ஆட்சிக்கு தங்களது ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக வெற்றி பெற்றிருக்கிறது.
ஜனநாயகன் நிலைமை: இதற்கிடையே ஜனநாயகன் திரைப்படம் சந்தித்த தொடர் பிரச்னைகள், அழுத்தங்கள் காரணமாக அந்தப் படத்தின் ஓடிடி வியாபாரம், விநியோகம் உள்ளிட்டவைகளில் எல்லாம் பெரிய அடி வாங்கியது. கண்டிப்பாக இதனால் கேவிஎன் நிறுவனத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலைமையும் உருவானது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் வென்று முதலமைச்சராகிவிட்டார். எனவே படமும் ரிலீஸாகக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
சூடுபிடிக்கும் வியாபாரம்: இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து புதிய தகவல்கள் வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றன. அதாவது விஜய் இப்போது முதலமைச்சராகிவிட்டதால்; ஜனநாயகன் படத்துக்கு செம டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி இதுதான் கடைசி படம் என்பதால் அதனை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவுகிறதாம். ஏற்கனவே 120 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த ஓடிடி உரிமம் அண்மையில்தான் ரத்து செய்யப்பட்டது. இப்போது புதிய ஒப்பந்தம் போட போட்டிகள் நிலவுவதாகவும்; 120 கோடி ரூபாய்க்கு மேல் ஓடிடி உரிமம் விற்பனையாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
