விஜய் சேதுபதியின் புதிய படம்.. அடேங்கப்பா மகாராஜாவைவிட அதிக விலைக்கு போயிருக்காம்
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலக்கிவருபவர். முக்கியமாக ஹிந்தி மொழிக்கு இங்கிருந்து சென்று வெற்றி பெற்ற மிகச்சில நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் ட்ரெய்ன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து ஹீரோவாக மாறியவர் விஜய் சேதுபதி. வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். முக்கியமாக அவரது ஒளிவு மறைவு இல்லாத பேச்சு, எதார்த்தமான நடவடிக்கைகள் என அவரிடம் ஏராளமான விஷயங்களை ரசிகர்கள் ரசிப்பார்கள். அதிலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எந்தக் காலத்திலும் அடம் பிடிக்காமல் கதைக்கு தேவையாகவும்; தனக்கு ஸ்பேஸும் இருந்தால் எந்த ரோலாக இருந்தாலும் நடிப்பவர்.

வில்லன் விஜய் சேதுபதி: அந்தவகையில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லனாக கலக்கியவர். அதேபோல் ஹிந்தியில் ஜவான் படத்திலும் வில்லனாக மிரட்டினார். ஹிந்தியில் வில்லனாக மட்டுமின்றி ஃபர்ஸி வெப் சீரிஸில் முக்கியமான ரோலிலும், மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இங்கிருந்து ஹிந்திக்கு சென்று நடிப்பில் வென்று காட்டிய மிகச்சில நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஹிந்தி படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் விஜய் சேதுபதி ஹீரோ: விஜய் சேதுபதி வில்லனாக நடித்தாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தார்கள். அவர்களின் ஆசைப்படி அவர் இப்போது மீண்டும் கதாநாயகனாக மாறியிருக்கிறார். அதன்படி அவர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமான மகாராஜா படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த விடுதலை 2 படமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைத்தான் பெற்றது.

அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. எனவே ட்ரெய்ன் படத்தில் இந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மிஷ்கினும் நீண்ட காலம் கழித்து இயக்குநராக மீண்டும் களமிறங்கியிருக்கிறார். இதன் காரணமாகவும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி: இதற்கிடையே பசங்க, கடைக்குட்டி சிங்கம் என்று படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். முதலில் இந்தப் படத்தின் கதையை பாண்டிராஜ் ரவி மோகனிடம்தான் சொன்னதாகவும்; ஆனால் ரவியின் முன்னாள் மாமியார் சுஜாதாவின் அதீத தலையீடால் ரவியுடன் பாண்டிராஜால் பணியாற்ற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இந்தக் கதையை சேதுவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
புதிய தகவல்: படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 22 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும்; இது விஜய் சேதுபதியின் முந்தைய படமான மகாராஜாவைவிட அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் படத்தின் ஓடிடி உரிமம் 17 கோடி ரூபாய்க்கு விலை போனதாகவும் திரைத்துறையிலிருந்து குரல்கள் கேட்கின்றன.


Click it and Unblock the Notifications











