காதலர் தினத்துக்கு கர்பமாகும் படம் வருது.. அது ஆம்பளை?.. He is Pregnant பார்க்க ரெடியா?
சென்னை: விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்துள்ள 'ஹி இஸ் பிரெக்னன்ட்' (He is Pregnant) என்ற புதிய வெப் சீரிஸ், மூவி ஸ்க்ரோல் யூடியூப் தளத்திற்காக SD. சோமு தேவ் தயாரிப்பில், ஷங்கர் நாகதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இத்தொடரில் ரஞ்சனா கதாநாயகியாகவும், தீபா சங்கர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது. இயக்குநர் ஷங்கர் நாகதேவன், இதற்கு முன் பல குறும்படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய 'அவள் பெயர் ஐட்டம்' என்ற குறும்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று யூடியூபிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 'ஹி இஸ் பிரெக்னன்ட்' வெப் தொடரை இயக்கியுள்ளார்.
இத்தொடரின் கதைக்கரு குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் பேசுகையில், "கர்ப்பம் தரிப்பதன் வலியையும், அனுபவத்தையும் ஆண்களால் உணர முடியாது. ஒருவேளை ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்ற விதமாக இந்த கதை உருவாகியுள்ளது. நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வே இக்கதையின் விதை" என்று தெரிவித்தார்.
மேலும், "கடவுள் ஒரு ஆணைப் படைக்கும்போது அவன் தலையெழுத்தை தப்பாக எழுதிவிட்டான் என்கிற கோணத்தில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறோம்" என்று ஷங்கர் நாகதேவன் குறிப்பிட்டார். இந்தக் கதையை டிஎஸ்கேவிடம் சொன்னபோது அவருக்கும் கதை பிடித்திருந்தது.
கதையை வெறும் காமெடியாக உருவாக்காமல் சற்று சீரியஸாக உருவாக்கியுள்ளதாக இயக்குநர் கூறினார். "கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே சீரியஸாக இருக்குமே தவிர, மற்றபடி இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைத் தொடர் தான்" என அவர் மேலும் விளக்கினார்.
"கர்ப்பமாவதைச் சுற்றி ஒரு அரசியல் உள்ளது. அதை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்பதே இதன் முயற்சி. பெண்களை கிண்டலடிப்பதோ, தவறாகச் சித்தரிப்பதோ அல்லது கர்ப்பத்தை வைத்து காமெடி செய்வதோ போன்று இல்லாமல், விஷயங்களைச் சீரியஸாகவே கையாண்டுள்ளோம்" என்று இயக்குநர் சங்கர் நாகதேவன் உறுதியளித்தார்.
ஆரம்பத்தில் இரண்டு மணி நேர படமாக உருவாக்கத் திட்டமிட்டதாகவும், சில காரணங்களால் இது ஐந்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டதாகவும் ஷங்கர் நாகதேவன் தெரிவித்தார்.
'ஹி இஸ் பிரெக்னன்ட்' வெப் சீரிஸ் மூவி ஸ்க்ரோல் யூடியூப் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று இதன் முதல் எபிசோட் வெளியாகும். அதனைத் தொடர்ந்து வாராவாரம் ஒரு எபிசோட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications