சம்பாதிச்சா போதுமா..நடிகர்களுக்கும் மரியாதை இருக்கு.. ஆபாசத்தின் உச்சம் ராணா நாயுடு..விளாசிய நடிகை!
சென்னை : ராணா நாயுடு வெப் தொடரில் நடித்ததற்காக வெங்கடேஷ் மற்றும் ராணா டகுபதியை கடுமையாக விளாசி உள்ளார் பிரபல நடிகை விஜயசாந்தி.
ரே டோனவேன் என்ற அமெரிக்க வெப் சீரிஸை தழுவி எடுக்கப்பட்ட வெப் தொடர் தான் ராணா நாயுடு.
வெங்கடேஷ், ராணா டகுபதி, சுசித்ரா பிள்ளை, சுர்வீன் சாவ்லா, கௌரவ் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராணா நாயுடு
இயக்குநர்கள் சுபர்ன் வர்மா மற்றும் கரன் அன்ஷுமான் இயக்கத்தில் உருவான இந்த இணைய தொடர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பத்து எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனம், கெட்டவார்த்தை என சகலமும் இடம் பெற்று பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ராணா நாயுடு கதை
இந்த வெப் தொடரில் ராணா டகுபதி பிக்ஸராக வேலை பார்க்கிறார் அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ராணாவின் தந்தை வெங்கடேஷ், நல்லெண்ண அடிப்படையில், 15 ஆண்டுகளிலேயே சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். அவர் தனது மகனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். ஆனால், அப்பா மீது கோபத்தில் இருக்கும் ராணா அவரை கொலை செய்ய சதி திட்டம் போடுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் வெப் தொடரின் மீதி கதை.

ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்
அழகான கதைக்களத்தை கொண்ட இந்த கதையில், அடல்ட் காட்சிகளை வைத்து பலரின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் இயக்குநர். அது மட்டுமில்லாமல் குடும்பபாங்கான கதைகளில் நடித்து பெயர் எடுத்த வெங்கடேஷ், இதுபோன்ற ஆபாச படத்தில் நடித்து தனது 30 வருட சினிமா வாழ்க்கையில் எடுத்த நற்பெயரை கெடுத்துக்கொண்டார் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

18+ காட்சிகள்
18+ அடல்ட் காட்சிகள் மோசமான கெட்ட வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி ட்ரோல் செய்ததால், ராணா டகுபதியும் தனது ட்விட்டரில், இந்த படத்தை தயவு செய்து குடும்பத்தோடு பார்க்காதீங்க என்று ஓப்பனாவே ட்வீட் போட்டு, மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

விளாசிய விஜயசாந்தி
இந்நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி ஓடிடியில் வெளியான ராணா நாயுடு வெப் தொடரின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார். அதில், ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை தேவை, ஓடிடியில் பெண்களுக்கு எதிராக காட்டப்படும் ஆபாசமான காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து படம் எடுக்க வேண்டும்.

சம்பாதிச்சா போதும்
ஓடிடியில் படம் வெளியாகும் பட்சத்தில் அதில் நடிக்கும் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கவனமாக இருக்க வேண்டும். சம்பாதிச்சா போதும் என்று இல்லாமல், நடிகர்கள் மீது ரசிகர்கள் வைத்து இருக்கும் பாசத்தையும் மரியாதையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி ராணா நாயுடு படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிகம் பார்க்கப்பட்ட தொடர்
கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ராணா நாயுடு, வெளியான முதல் வாரத்தில், 8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆபாசம், மோசம் என ஒரு சோஷியல் மீடியாவில் சிலர் ட்ரோல் செய்தாலும், ஒரு வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடராக ராணா நாயுடு உள்ளது.


Click it and Unblock the Notifications











