twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மதுரை- தேனி: வழி ஆண்டிப்பட்டி'- விமர்சனம்

    |

    Srithika in Madurai To Theni
    நடிகர்கள்: அரவிந்த் வினோத், ஸ்ரித்திகா, சிங்கமுத்து, முத்துக்காளை, நெல்லை சிவா

    இசை: ஜேவி

    இயக்கம்: ரதிபாலா

    தயாரிப்பு: கே விமல், எஸ் ஜானகி சோனைமுத்து

    பிஆர்ஓ: சக்திவேல்

    தலைப்பே சொல்லிவிடும் இது என்ன மாதிரி கதை என்பதை... ஒரு பஸ் மதுரையிலிருந்து கிளம்பி தேனி போவதற்குள் நாயகனும் நாயகியும் காதலில் விழுவதும் அதைத் தொடர்ந்து வரும் மோதல்களிலிருந்து எழுவதும்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை.

    மதுரையில் ஒரு விபத்தில் சிக்கும் நாயகி ஸ்ரித்திகாவைக் காப்பாற்றுகிறார் இளம் வாத்தியாரான ஹீரோ அரவிந்த் வினோத். தனது ஊரான தேனிக்குப் போக ஒரு பஸ்ஸில் ஸ்ரித்திகா ஏற, அதே பஸ்ஸில் ஹீரோவும் ஏற ஜில்லென்ற பயணம் ஆரம்பிக்கிறது.

    பார்வைகளின் சங்கமம், தொடர்ந்து வரும் சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொடர்ந்து இதயத்தின் சங்கமமாக முடிகிறது. ஸ்ரித்திகா பஸ்ஸை விட்டிறங்கி வீட்டுக்குப் போகும்போது, அரவிந்தும் அவர் பின்னாலேயே அவர் வீட்டுக்குப் போய் பெண் கேட்க, காதல் கலவரமாக வெடிக்கிறது.

    இந்த விவகாரம் ஊர்ப் பஞ்சாயத்துக்குப் போக, அதில் என்ன தீர்ப்பு சொல்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

    சின்ன கதைதான். ஆனால் அதைச் சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முயற்சி காரணமாக காட்சிகள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

    படம் பார்ப்பவர்கள் ரொம்ப சுலபத்தில் தங்களை அந்தந்த கேரக்டர்களோடு பொருத்திப் பார்க்கும் அளவுக்கு யதார்த்தமான பாத்திரங்களைப் படைத்ததில் அட பரவாயில்லையே என சொல்ல வைக்கிறார் இயக்குநர் ரதிபாலா. இவருக்கு இது முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் முயற்சித்தால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    அரவிந்த் வினோத் கச்சிதமாகச் செய்துள்ளார். காதல் காட்சிகளில் நல்ல இயல்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

    ஸ்ரித்திகா அச்சு அசலான மதுரைப் பெண்ணாக வந்து மனதில் இடம் பிடிக்கிறார்.

    செல்வம், ராஜ்குமார், சிங்கமுத்து ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதால் நேரம் போவகதே தெரியாத ஒரு பயணமாக மாறிவிடுகிறது இந்த மதுரை - தேனி ரூட். இதில் பிரதான பங்கு வசனங்களுக்கு உள்ளதையும் மறுக்க முடியாது.

    படத்தின் முக்கியக் குறை, ஸ்ரித்திகா வரச் சொல்லாமலேயே அவர் பின்னால் போய் பெண் கேட்கும் ஹீரோவின் மிகையான செய்கை.

    பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் படத்துக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. குகனின் ஒளிப்பதிவு ஓகே.

    முன்னே பின்னே தெரியாத ஊரில், பழக்கமில்லாத மனிதர்களுடன் பயணப்படுவதுபோல படம் ஆரம்பித்தாலும், பயணம் முடியும்போது, பரவால்லப்பா... சரியான நேரத்துக்கு பத்திரமா கொண்டுவந்து சேத்துட்டாங்களே என்று சொல்லுமளவு செய்திருக்கிறார்கள். புதியவர்களின் முயற்சி. ஆரோக்கியமாகவும் தெரிகிறது.

    வரவேற்கலாமே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X