twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அலிபாபா-பட விமர்சனம்

    By Staff
    |

    Alibaba movie still
    நடிப்பு: கிருஷ்ணா, ஜனனி, பிரகாஷ் ராஜ், திலகன், ராதாரவி

    இசை: வித்யாசாகர்

    இயக்கம்: நீலன் கே சேகர்

    தயாரிப்பு: பட்டியல் சேகர்

    புது தயாரிப்பாளர் (பட்டியல் சேகர்), புது ஹீரோ (கிருஷ்ணா), புது ஹீரோயின் (ஜனனி), புது இயக்குநர் (நீலன் கே சேகர்)... இப்படி புதியவர்கள் இணைந்து முதல் முயற்சியிலேயே ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

    படத்தின் கதையில் சற்றே மலையாள நெடியடித்தாலும், முதல் படத்திலேயே முத்திரை பதித்ததற்காக இந்தப் புதியவர்களுக்கு பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்.

    பிரகாஷ்ராஜ், அவர் மகன் கிருஷ்ணா, அவரது நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரே தொழில் திருட்டு. குடும்பத்தோடு போய், ஒரு குடும்ப செட்டப்பில் சீன் போட்டு திருடுவது இவர்களது பாணி.

    ஒருமுறை ஜனனியின் ஸ்கூட்டரைத் திருடிவிடும் கிருஷ்ணா, அடுத்த நாள் அவரைப் பார்த்ததும், ஸ்கூட்டரை விட்டுவிட்டு எஸ்ஸாகிறார். எதிர்பாராதவிதமாக அவர் ஸ்கூட்டரை நிறுத்திய இடம் ஜனனியின் வீடு. இதனால் கிருஷ்ணாவை நல்லவர் என நினைத்து விடுகிறார் ஜனனி. அதற்குத் தோதாக சில சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. தமிழ் சினிமா விதிப்படி அடுத்த சீனில் லவ்வத் தொடங்குகிறார் ஜனனி.

    ஆனால் அவரது தோழியின் வீட்டுக்கே திருடப் போகும்போது மொத்தமாக மாட்டிக் கொள்கிறார்கள் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணா அன்ட் கோ.

    இந்த நேரம் பார்த்து மாநகர போலீஸ் கமிஷனரை யதேச்சையாகக் காப்பாற்றுகிறார் கிருஷ்ணா. அவர் திருடன் எனத் தெரிந்தும், தன் வீட்டுக்குக் கூட்டிப்போய் ஒரு வேளை சாப்பாடு போடுகிறார். அப்போது ஏற்படும் அனுபவம் அவரை திருட்டுத் தொழிலிலிருந்து திருந்தத் தூண்டுகிறது.

    ஆனால் அன்று இரவே அவர் தனது திருந்தும் முடிவை மாற்றிக் கொள்கிறார். காரணம் அவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் குவிந்தபடி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இந்தப் பணம் எப்படி வருகிறது எனத் தெரிந்து கொள்ளாமலேயே ஜாலியாக செலவழிக்கிறார்.

    அதன்பிறகுதான் தன்னை வைத்து சிலர் மிகப் பெரிய சதி வலை பின்னியிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.

    அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்த காட்சிகளுடன் சொல்லி அசத்தியிருக்கிறார் இயக்குநர்.

    கிருஷ்ணாவை ஒரு புதுமுகமாகவே பார்க்கத் தோன்றவில்லை. அத்தனை இயல்பு. அவரது கண்களில் தெரியும் ஒருவித ஈர்ப்புத் தன்மை அந்தக் கேரக்டருக்கே புதிய வலு சேர்க்கிறது.

    ஜனனிக்கு நடிக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல குடும்பப்பாங்கினியாகத் தெரிகிறார்.

    பிரகாஷ் ராஜ், திலகன், ராதாரவி ஆகிய மூன்று ஜாம்பவான்களையும் கையாண்ட விதத்தில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. அதேபோல போலீசாக வரும் பிஜு மேனன் அலட்டிக் கொள்ளாமல் அசத்துகிறார்.

    வித்யாசாகரின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. அதைப் படமாக்கியிருக்கும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

    ஆதாரங்களை உருவாக்க போலீசார் இப்படியெல்லாமா செய்வார்கள்? நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

    மற்றபடி காமிரா, எடிட்டிங் என அனைத்துத் துறைகளிலும் நல்ல கவனம் செலுத்தி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்!

    அலிபாபா- குட்லக்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X