For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெள்ளித்திரை- பட விமர்சனம்

  By Staff
  |

  Vellithirai movie still
  சினிமாவைப் பற்றி அல்லது சினிமாக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றிய படங்கள் தமிழ் ரசிகர்களுக்குப் புதிதல்ல. சர்வர் சுந்தரம் தொடங்கி சமீபத்திய மாயக்கண்ணாடி வரை எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. அவற்றில் இருந்த ஒரு பொதுவான விஷயம், ஒரு சாமானியனின் வாழ்க்கையை சினிமா எப்படி உயர்த்தியது என்ற கதை. ஆனால் வெள்ளித்திரையில் அப்படிப்பட்ட அம்சம் எதுவும் இல்லை.

  ஒரு திரைக் கலைஞனின் வாழ்க்கையை மக்களுக்கு ஒரு பாடமாகச் சொல்கிற கதையில் அர்த்தமிருக்கிறது, இலக்கிருக்கிறது. சர்வர் சுந்தரம், தாவணிக் கனவுகள், கல்லுக்குள் ஈரம்... இவற்றிலெல்லாம் ஒரு சாதாரண ரசிகனால் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும். காரணம் அவர்களில் ஒருவன் சினிமாவுக்குப் போய் ஜெயிக்கிற மாதிரியான கதைகள் அவை.

  எப்படியாவது ஹீரோவாகி ஜெயித்துவிட வேண்டும் எனத் துடிக்கும் ஒரு நடிகனுக்கும், அறிவுப்பூர்வமாக மாதிரி படமெடுத்து ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு இயக்குநருக்கும் நடக்கிற மோதல்கள்தான் வெள்ளித்திரை படத்தின் கதை.

  சினிமாவில் எப்படியாவது ஹீரோ வேடம் கட்டுவது என்ற உறுதியோடு 12 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருப்பவர் பிரகாஷ்ராஜ். ஒரு நாள் வாடகை பாக்கிக்காக அவரை துரத்திவிடுகிறார் வீட்டுக்குச் சொந்தக்காரர். அடைக்கலம் தேடி இயக்குநர் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் லட்சியவாதியான பிருத்விராஜிடம் வருகிறார்.

  பிருத்விராஜ் எழுதிவைத்த கதையைத் திருடிக் கொண்டுபோய் தயாரிப்பாளர் ஒருவரிடம் கொடுத்து கதாநாயகன் வாய்ப்பு பெற்று, அடுத்த இரண்டு சீன்களிலேயோ சூப்பர் ஸ்டாராகி விடுகிறார் பிரசன்னா.

  ஒரு கட்டத்தில், சினிமாவில் ஜெயிக்க எந்த சமரசத்துக்கும் தயங்கக் கூடாது என்ற தயாரிப்பாளரின் அறிவுரையை ஏற்று, தன் கதையைத் திருடிய பிரகாஷ்ராஜிடமே சரணடைகிறார் பிருத்வி. தான் நினைத்த மாதிரியான திரைப்படத்தை அவரால் எடுக்க முடிந்ததா என்பதே க்ளைமாக்ஸ்.

  பிரகாஷ்ராஜ்தான் நாயகன். அவரது ஆர்வத்துக்கு தீனி போடுகிற மாதிரியான வேடம்தான். ஆனால் ஏனோ அவரது பாத்திரம் மனதில் பதிய மறுக்கிறது.

  நாயகி கோபிகாவுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. சில காட்சிகளில் திட்டுத்திட்டாக வழியும் பவுடரோடு வந்து போகிறார். இன்னும் சில காட்சிகளில் பழைய சரோஜாதேவியை ஞாபகப்படுத்தும் அளவுக்கு பளிச் மேக்கப்.

  சரத்பாபு, சார்லி, பிரதாப் போத்தன், எம்.எஸ்.பாஸ்கர் நினைவில் நிற்கின்றனர்.

  ஜி.வி.பிரகாசின் இசையும் பாடல்களும் கடுப்பேற்றுகின்றன. இளம் வயதுதானே.. இன்னும் நிறையக் கற்றுக் கொண்டு நல்ல இசையைக் கொடுக்க முயற்சிக்கலாமே.

  எம்.வி.பன்னீர்செல்வம்- கே.வி.குகன் ஒளிப்பதிவு படத்தில் பெரிய ஆறுதல்.

  ஒரு வசனகர்த்தாவாக விஜி தேறிவிடுகிறார். விஜி இந்தப் படத்தில் குறை சொல்லியிருக்கும் மசாலா இயக்குநர்களின் படங்களில் ஒரு பாமரனால் தன்னை எளிதாக ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில்...?

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X