twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திர விழா - விமர்சனம்

    By Staff
    |

    Namitha  and Srikanth
    நடிப்பு: நமீதா, ஸ்ரீகாந்த், நாசர், விவேக், ஹேமமாலினி
    இயக்கம்: கே ராஜேஷ்வர்
    தயாரிப்பு: அசோக் கோட்வானி
    மக்கள் தொடர்பு: விகே சுந்தர்

    ஒரு ஆங்கிலப் படம் மற்றும் அதைக் காப்பியடித்து எடுக்கப்பட்ட இந்திப் படத்தின் அப்பட்டமான தழுவல், நமீதா நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்திர விழா (அல்லது 'நமீதா கவர்ச்சிக் கண்காட்சி!').

    இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கேஜேயின் (நாசர்) இளம் மனைவி காமினி (நமீதா). 23 தொழில்களை கைவசம் வைத்திருக்கும் ஜேகே 24-வதாக ஒரு டிவி சானல் துவங்கி அதை தன் மனைவியிடம் ஒப்படைக்கிறார். அவருக்குக் கீழ் பணியாற்றும் தலைமை நிர்வாகியாக சந்தோஷ் சீனிவாசன் (ஸ்ரீகாந்த்). சானல் வளர்ச்சிக்காக அவர் தரும் புராஜக்டை நிராகரித்து அவமானப்படுத்துகிறார் காமினி. காரணம் கேட்ட சந்தோஷை தனியாக வந்து சந்திக்குமாறு கூறுகிறார். காரணம் இருவருக்குமிடையே உள்ள பழைய உறவு.

    இந்த இடத்தில் சந்தோஷின் ப்ளாஷ்பேக் விரிகிறது. மாடல் வாய்ப்புக்காக போராடும் காமினிக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார் அன்றைய முன்னணி விளம்பர நிறுவனத்தின் பொறுப்பாளராக இருக்கும் சந்தோஷ். அத்தோடு, காமினியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளவும் விரும்புகிறார். ஆனால் தன் உடலை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் மிகப் பெரிய உயரத்துக்கு போக ஆசைப்படும் காமினிக்கு சந்தோஷின் இந்த மிடில் கிளாஸ் சிந்தனை பிடிக்கவில்லை. சந்தோஷை உதறிவிட்டு பெரிய பணக்காரருக்கு குறிவைத்து வீழ்த்துகிறார்.

    அதற்குப் பின் காமினியை தன் வாழ்க்கையிலிருந்து உதறிய சந்தோஷ் ஹேமமாலினியை மணந்து வேறு வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். இந்த சானலின் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார், அதன் முதலாளி தன் பழைய காதலி என்பதை அறியாமல்.

    ஆனால் ஜேகேவின் மனைவியான பிறகும் காமினிக்கு சந்தோஷ் மீதான காமம் மட்டும் குறையவே இல்லை. ஆரம்பத்தில் காமினியின் காமத் தூண்டுதலில் தன்னை இழக்கும் சந்தோஷ், மனைவியின் ஞாபகம் வர, விலகி வீட்டுக்குச் செல்கிறார். ஆனால் சந்தோஷ் கிடைக்காத ஆத்திரத்தில் அவரைப் பழிவாங்க, ராஜினாமா கடிதம் தருமாறு துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார் காமினி. உண்மை புரியாமல் ஜேகேவும் மனைவி சொல்படி சந்தோஷை மிரட்டுகிறார்.

    இதற்குப் பணியாமல் தன் வக்கீல் நண்பர் ஒப்பிலாமணி (விவேக்) உதவியுடன் கோர்ட்டுக்குப் போகிறார் சந்தோஷ். வழக்கில் வென்றாரா என்பது மீதிக் கதை.

    நமீதாவின் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் இது என்பது அவர் ஹெலிகாப்டரிலிருந்து இம்சை பண்ணும் காஸ்ட்யூமில் வந்து இறங்கும் போதே புரிந்துவிடுகிறது.

    அவரும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்துள்ளார். எப்போது அவிழ்ந்து விழுந்து ஏடாகூடம் ஆகிவிடுமோ என்று பதறும் அளவுக்குதான் பல காட்சிகளில் நமீதா உடையணிந்து வருகிறார்.

    மிடில்கிளாஸ் மனப்பாங்குடன் பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

    படத்தின் மிகப்பெரிய ஆறுதல் விவேக்கின் நகைச்சுவை. அவர் வரும் காட்சிகளில் ஒரே சிரிப்பலை. குறிப்பாக அவருக்கும் ராதா ரவிக்கும் இடையே ஏற்படும் அந்த நீதி மன்ற உரசல் ரசிக்க வைக்கிறது.

    ஒய்ஜி மகேந்திரன் மகா எரிச்சல். அவரது சகிக்க முடியாத உடல் மொழியும், உச்சரிப்பும் இருக்கையில் நெளிய வைக்கின்றன.

    நாசர் தனது பாத்திரத்தை குறைவின்றிச் செய்துள்ளார்.

    கோர்ட்டில் விவாதம் நடக்கும் போதே இடையில் கட் பண்ணி ஒரு கவர்ச்சிப் பாடலை நுழைத்திருப்பது என்ன வகை உத்தி என்று புரியவில்லை. அதோ போல, கோர்ட்டில் நாசர் துப்பாக்கியைத் தூக்க, எங்கோ மருத்துவமனையிலிருக்கும் விவேக், வீல் சேரிலேயே வந்து காப்பாற்றுவதெல்லாம் பக்கா சினிமாத்தனம்.

    மற்றபடி காட்சியமைப்பு, ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக நிறைய மாறியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர்.

    இந்தப் படம் நமீதா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்திர விழாவாக இருக்கும்... மற்றவர்களுக்கு?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X