twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொம்மலாட்டம் – விமர்சனம்

    By Staff
    |

    Rukmini Vijayakumar
    நடிப்பு: நானா படேகர், அர்ஜூன், ருக்மணி, காஜல் அகர்வால், மணிவண்ணன், விவேக்

    இசை: ஹிமேஷ் ரேஷம்மியா, மாண்டி

    ஒளிப்பதிவு: கண்ணன், தனபால்

    கதை, திரைக்கதை, இயக்கம்:
    பாரதிராஜா

    தயாரிப்பு: பால் பாண்டியன்

    மண்வாசனைக் கதைகளுக்கும், மனதை நனைக்கும் காதல் படங்களுக்கும் மட்டுமல்ல... அதிர வைக்கும் த்ரில்லர்களுக்கும் 'அத்தாரிட்டி' இந்த மனிதர்.

    அவரால் ஒரு நிறம் மாறாத பூக்களையும் தரமுடியும், கருத்தம்மாவையும் படைக்க முடியும்... கைதியின் டைரியையும் அலட்டிக் கொள்ளாமல் எழுத முடியும்.

    மீண்டும் தனது அந்த பழைய பார்முடன் வெள்ளித் திரைக்குத் திரும்பியிருக்கிறார்...

    எந்த மாதிரிக் கதைக் களமாக இருந்தாலும் அதை செலுலாய்டில் வடிப்பதில் தான் ஒரு 'மாஸ்டர்' என்பதை இந்த 'மண்ணின் மைந்தன்' மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் பொம்மலாட்டம் மூலம்.

    பொம்மலாட்டத்தில் நிஜமாகவே வித்தியாசமான கதை, எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை!.

    ராணா ஒரு மதிப்புக்குரிய திரைப்பட இயக்குனர். தன் மனதுக்குச் சரியானதை, தயக்கமின்றி செய்யும் துணிச்சல்காரர். எதுவும் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கிற பர்ஃபெக்ஷனிஸ்ட். அதற்கு நேரெதிரான மனைவி, அதனால் கசந்த வாழ்க்கை...

    இன்னொரு பக்கம் அவர் புதிதாக எடுக்கும் படத்தின் நாயகி, மினரல் வாட்டர் இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என அடம்பிடிக்க, பேக்கப் சொல்லிவிட்டு, நல்ல நாயகியைத் தேடிப் போகிறார்.

    அப்போது கண்ணில் படுகிறார் திருஷ்ணா. வில்லாய் நெளியும் உடல், சொன்னதை கற்பூரமாய் செய்யும் லாவகம் என ராணா எதிர்பாத்த அதே பெண்... மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறது. ஆனால் மீடியா உள்பட யாருக்கும் நாயகியின் முகத்தைக் காட்ட மறுக்கிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்தும் தருணத்தில் திருஷ்ணா கொல்லப்படுகிறார்.

    இந்தக் கொலையின்ன் பின்னணி என்ன... கொலைகாரன் யார், கொலையில் ராணாவுக்கு தொடர்புண்டா.. போன்ற கேள்விகளுக்கு விடை கூறுகிறார் சிபிஐ அதிகாரி விவேக் வர்மா.

    கொலையாளி யார் என்ற விசாரணையில் அடுத்தடுத்து சுவாரஸ்ய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் விதம் அடடே சொல்ல வைக்கும் புதிய உத்தி. அதேபோல, கொலைக்கான பின்னணி குறித்த இயக்குநரின் சமூகப் பார்வை இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காதது.

    ராணாவாக வரும் நானா படேகருக்கு, மறுயோசனையின்றி இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினைத் தரலாம். இந்த மாதிரி 'க்ளாஸ்' நடிப்பை வேறு எந்த நடிகரிடமும் எதிர்பார்க்கவே முடியாது.

    வீட்டில் உள்ள ஒழுங்கீனங்களைக் கண்டு குமுறும் குடும்பத் தலைவனாக, செட்டில் நடிகைக்கு லாவகமாக காதல் பாடம் சொல்லித் தரும் இயக்குநராக, கொலை முடிச்சுகளில் சிக்கி நிம்மதி இழந்து தவிக்கும் குற்றவாளியாக... மனித நேயம் பொங்கும் நல்ல மனிதராக... இணையற்ற நடிப்பு!.

    அர்ஜூனுக்கு இதில் வழக்கமான ஆக்ஷனுக்கு வாய்ப்பில்லை. ஆனாலும் நிஜமான சிபிஐ அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். அலட்டிக் கொள்ளாத நடிப்பால்.

    திருஷ்ணாவாக வரும் ருக்மணி விஜயகுமாரின் உடல்மொழி இயல்பாக உள்ளது.

    இந்த க்ளைமாக்ஸை யூகிப்பவர்களுக்கு பரிசுப் போட்டியே வைத்திருக்கலாம். அத்தனை சுலபத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் பார்வையாளர் நடம் கடிப்பதைப் பார்க்க முடிகிறது.

    கண்ணனின் காமிராவும் மாண்டியின் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் ப்ளஸ்கள். ஹிமேஷ் இசையில் 'என்னானதோ'... பாடலில் மட்டும் பாரதிராஜா தெரிகிறார். மற்ற பாடல்களை உதவியாளர்களை விட்டு எடுத்துவிட்டார் போலிருக்கிறது...!

    படத்தின் முக்கியமான குறை இந்தியிலிருந்து டப் செய்யப்பட்டது அப்பட்டமாகத் தெரிவதுதான். இன்னொன்று அவர் கதாநாயகியைப் பொத்திப் பொத்தி வைக்கும் விதம். பெருவில் போய் படமெடுத்தாலே, ரகசிய காமிராவில் சுட்டு பத்திரிகைகளுக்கும் 'நெட்'டுக்கும் வழங்கும் இன்றைய டெக்னாலஜியில் இது சாத்தியமற்றது.

    அதேபோல, குற்றவாளி மீது அர்ஜூன் காட்டும் மனிதாபிமானம் நெகிழ்வூட்டுவதாக இருந்தாலும், நிஜத்தில் இதை அழுத்திவிட்டு மேலெழுந்து நிற்பது சட்டம்தானே...

    இப்படி சில குறைகள் இருந்தாலும் அவற்றை லென்ஸ் கொண்டு பெரிதுபடுத்திப் பார்க்காமல், தமிழ் ரசிகர்கள் நேசித்த ஒரு இயக்குநரிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல படம் வந்துள்ளதை பாராட்டுவதே, கலை வளர உதவும்!

    பொம்மலாட்டம்- நேர்த்தி!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X