For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மதிகெட்டான் சாலை - விமர்சனம்

  By Shankar
  |

  நடிப்பு: ஆதர்ஷ், திவ்யா நாகேஷ், சிங்கமுத்து, சந்தீப், தமிழ், கிருஷ்ணகுமார்

  இசை: ஸ்ரீகாந்த் தேவா

  ஒளிப்பதிவு: எஸ் தாஜ்

  மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

  இயக்கம்: ஜி பட்டுராஜன்

  தயாரிப்பு: ஜே என் எஸ், ஜே கலை

  நான்கு நண்பர்கள். நால்வரும் சின்ன வயதிலிருந்தே ஒரு ஆன்ட்டி வீட்டுக்கு சகஜமாக போய் வரும் அளவுக்கு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள்.

  ஆட்ன்டிக்கு ஒரு பெண். இந்தப் பெண்மீது காதல் வருகிறது நால்வரில் பிரதானமாகத் திகழும் ஆதர்ஷுக்கு.

  ஆனால் மற்ற மூன்று நண்பர்களும், 'ஆன்ட்டியின் பெண் நம்ம தங்கச்சி மாதிரிடா' என்று கூறி எதிர்க்க, உடனே அவர்களை கழட்டிவிடுகிறார். மீண்டும் ஆன்ட்டி வீட்டுக்கு வரமுடியாத அளவுக்கு ஒரு ட்ராமா பண்ணி நண்பர்களை விரட்டிவிடுகிறார் ஆதர்ஷ்.

  ஆனால் இந்தக் காதலைப் பற்றி தெரிய வந்ததும், தன் பெண்ணை விட்டே ஆதர்ஷை விரட்டுகிறார் ஆன்ட்டி. இதனால் கோபமடைந்த ஆதர்ஷ், ஒரு ரவுடி கும்பலில் சேர்ந்து, ஆன்ட்டியின் குடும்பத்துக்கு தன் கோபத்தைக் காட்ட முயல்கிறான். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு திருமணம் என்ற செய்தி கிடைக்கிறது. அடுத்து ஆதர்ஷ் எடுத்த முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.

  இயல்பான, அன்றாட செய்தித் தாள்களில் நாம் படிக்கும் சமாச்சாரம்தான் படத்தின் கதை. ஆனால் அதை இன்னும் அழுத்தமாக, மனதைத் தொடும் சம்பவங்களோடு சொல்லத் தவறியுள்ளார் இயக்குநர் பட்டுராஜன்.

  காதலியாக வரும் திவ்யா நாகேஷை ஒரு நாயகி என்ற ரேஞ்சுக்கு பார்க்க முடியவில்லை. ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கிறார், தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும்.

  ஹீரோவாக வரும் ஆதர்ஷ் சொன்ன வேலையை நன்றாகவே செய்துள்ளார் என்றாலும், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு என பலவற்றில் தனுஷை ஞாபகப்படுத்துகிறார்.

  டிப் டாப்பாக உடையணிந்த ஒருவர் தினசரி குறித்த நேரத்துக்கு வந்து ரவுடி கும்பல் தலைவனுக்கு வணக்கம் போட்டு, 'போய்வரேன்' என்று சொல்லிவிட்டுப் போகிறார். இதற்கான அர்த்தத்தை பின்னர் ஒரு 'அல்லக்கை' விளக்கிச் சொல்லும்போது, பகீர் என்கிறது. ஆனால் இப்படியும் சில சம்பவங்கள் நடந்திருப்பதை பழைய செய்தித்தாள்கள் புரிய வைத்தன!

  கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் எந்த ஒட்டுதலும் இல்லை... ஹீரோ காதலிப்பதை அந்தப் பெண் எந்தக் காட்சியிலும் புரிந்து கொண்டதாகவும் இல்லை. அப்படியிருக்கும்போது, இப்படியொரு க்ளைமாக்ஸ் வைத்ததை ஏற்க முடியவில்லை.

  டூயட் காட்சி வைக்க இயக்குநர் தேர்ந்தெடுக்கும் சூழல் மிக அமெச்சூர்த்தனம்.

  சிங்கமுத்து, அவர் மனைவி அனு சம்பந்தப்பட்ட காமெடி சிரிப்பலைகளைக் கிளப்புகிறது.

  எஸ் தாஜின் ஒளிப்பதிவு ஓகே. குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்திருப்பது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை. இரண்டு பாடல்கள் திரும்ப கேட்கும் ரகம்.

  பட்டுராஜனுக்கு சினிமா எடுக்கத் தெரிந்திருக்கிறது. ஹீரோ கூட ஓகேதான். ஆனால் நாயகி தேர்வு மற்றும் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை அவர் இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம்!

  English summary
  Mathikettan Salai is a love action film directed by new comer Patturajan, a former assistant of 'Renigunta' Panneerselvam. The film revolves around two lovers and how the hero react after failes in his love.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X