For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2012 : ருத்ரம்- பட விமர்சனம்

  By Anwar
  |

  2012
  நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

  இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

  தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

  'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் 'ருத்ரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

  கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

  பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

  இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்... என்று போகிறது கதை.

  அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட்.

  நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமாத்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

  எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

  உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக் காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்... இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள்.

  படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது.

  அசத்தல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X