twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேராண்மை - விமர்சனம்

    |

    Peranmai
    நடிப்பு: ஜெயம் ரவி, பொன்வண்ணன், வடிவேலு, ரோலண்ட் கிக்கிங்கர்
    இசை: வித்யாசாகர்
    ஒளிப்பதிவு: சதீஷ் குமார்
    தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல்
    இயக்கம்: எஸ்பி ஜனநாதன்

    கடல்புறத்து மக்கள், நகரத்தின் எச்சங்களாய் வீசியெறியப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள்... இப்படி சமூகத்தின் பல வகை மனிதர்களைப் படிப்பதில் தனக்குள்ள தீவிர ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன், பேராண்மை மூலம். இந்த முறை காடும் காடு சார்ந்த மனிதர்களையும் பற்றி முடிந்தவரை அழுத்தமான ஒரு பார்வையைப் பதிய வைக்க முயன்றுள்ளார்.

    இந்த முயற்சியில் அவர் அங்காங்கே இடறி இருப்பது உண்மையென்றாலும், இந்த மட்டிலாவது யோசிக்க தமிழ் திரையுலகில் ஒருவர் இருக்கிறார் என்பதே ஆறுதல்தான்.

    துருவன் (ஜெயம் ரவி) ஒரு பழங்குடி இளைஞர். கஷ்டப்பட்டு படித்து வன இலாகா அலுவலராக தான் பிறந்த காட்டிலேயே பணியாற்றுகிறார். அவருக்கு மேலதிகாரி சாதித் திமிர் பிடித்த பொன்வண்ணன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் துருவனின் சாதியைப் பழிப்பது இவரது பிரதான பொழுதுபோக்கு.

    இந்தக் காட்டுக்கு அருகில்தான் இந்திய அரசின் செயற்கைகோள் ஏவுதளம் உள்ளது.

    ஒரு நாள் சென்னையிலிருந்து என்சிசி பயிற்சிக்காக மாணவிகள் பட்டாளம் ஊர்வசி தலைமையில் அந்தக் காட்டுக்கு வருகிறது. அவர்களுக்கு ஜெயம் ரவிதான் பயிற்சியாளராக இருக்கிறார். ஆனால் மாணவிகள் அவரது இனத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு மட்டம் தட்டிப் பேசுகின்றனர்.

    ஒரு கட்டத்தில் இந்த மாணவிகளில் அடங்காத குதிரைகளான 5 பேரை மட்டும் ஜெயம் ரவியுடன் ஆள் நடமாட்டமில்லாத காட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புகிறார்கள்.

    அந்த காட்டுக்குள் நுழையும்போதுதான், பசுமைப் புரட்சிக்காக இந்திய அரசு ஏவ வைத்திருக்கும் செயற்கைக் கோளை சில அந்நிய சக்திகள் கடத்த முற்படுவதை அறிகிறார்கள்.

    உடனே ஜெயம் ரவி தலைமையில் அந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் 5 பெண்களும். முயற்சியில் ஜெயித்தார்களா என்பது மீதிப் படம்.

    வித்தியாசமான கதைக் களம், மனிதர்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

    எந்த அலுவலகமாக இருந்தாலும் அங்கே சாதிவெறியின் நீட்சி இருப்பதை பொட்டிலடித்த மாதிரி சொல்கின்றன பொன்வண்ணன் வரும் காட்சிகளும், அவரது வாயிலிருந்து விழும் வசனங்களும்.

    பழங்குடி மக்களின் வாழ்க்கை, அவர்களின் பாடுகளை இன்னும் கூட அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் முன்பே சொன்னதுபோல இந்த அளவு சொல்லவே இன்று தமிழ் சினிமாவில் ஆளில்லை என்பதுதான் உண்மையும்கூட.

    இந்தப் படம் ஒரு விதத்தில் ஜெயம் ரவியை முழுமையான நாயகனாக முன்னிலைப்படுத்துகிறது என்றால் மிகையல்ல. ஒவ்வொரு காட்சிக்கும் அபாரமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அதிலும் இரண்டாவது பாதியில் கலக்கியிருக்கிறார் மனிதர்.

    கோவணத்தோடு அவர் ஒரு காட்சியில் தோன்றியதில் ஒன்றும் பெரிய சாதனை இல்லைதான். ஆனால் ஒரு காட்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக, இந்த அளவு இறங்கி வரவும் தான் தயார் என்பதை ரவி உணர்த்தியிருக்கிறார். அது தொழிலில் சிரத்தையுள்ள ஒரு கலைஞனுக்குரிய அடையாளம்.

    அதேநேரம், மெஷின் கன்கள், நவீன ஆயுதங்களையெல்லாம் அவர் கையாளும் விதம் சிறுபிள்ளைத்தனமாகக் காட்டப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

    அந்நிய சக்தி எனக் காட்டப்படுபவர்கள் என்னவெல்லாம் யோசிப்பார்கள், அவர்களின் அடுத்த நகர்வு என்னவென்பதையெல்லாம் கூட ரவி துல்லியமாகக் கணிப்பதாகக் காட்டுவதெல்லாம், சினிமாத்தனம்.

    ரவியுடன் வரும் அந்த அடங்காப்பிடாரி பெண்கள் (மகா, தன்சிகா, வசுந்தரா, சரண்யா மற்றும் லயஸ்ரீ)சமயத்தில் அட்டகாசம் பண்ணுகிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் கடுப்பேற்றுகிறார்கள்.

    பொன்வண்ணன் பாத்திரத்தை வில்லன் அல்லது வக்கிரபுத்திக்காரன் என்ற கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல், இதெல்லாம் கலந்து இயல்பான மனிதராகவே காட்டியிருக்கிறார் ஜனநாதன்.

    ஊர்வசி கேரக்டர் பெரிதாக இம்ப்ரஸ் பண்ணவில்லை.

    வடிவேலுவை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும் சில காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார்.

    வில்லனாக வரும் ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கருக்கு பெரிய வேலையில்லை.

    வித்யா சாகரின் பின்னணி இசை ஓகே. பாடல்களைக் கேட்கும்போதே தெரிகிறது அவர் முழுமையாக அவுட் ஆஃப் பார்மில் இருப்பது!

    படத்தில் ஜனநாதனின் வலது கரமாகத் திகழ்பவர் ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார். போராண்மையை நல்ல அட்வென்சர் படமாக மாற்றியிருப்பதில் அவரது உழைப்பு இயக்குநருக்கு இணையானது.

    எடிட்டிங்கில் சற்று சொதப்பி இருக்கிறார்கள். குறிப்பாக அந்த ஐந்து பெண்களை மட்டும் காட்டுக்குள் அனுப்ப ஊர்வசி சொல்லும் காரணம். ஆனால் அதற்கு முந்தைய காட்சியில்தான் ஊர்வசி சொன்னதற்கு நேர்மாறாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் காட்டியிருப்பார் இயக்குநர். அதேபோல அந்த 5 பெண்களும் சட்டென்று தேசப்பற்றுள்ளவர்களாக மாறுவதும், பெரிய பெரிய நவீன ஆயுதங்களை இயக்க நிமிடத்தில் கற்றுக் கொள்வதும். இதையெல்லாம் இன்னும் கூட கோர்வையாக லாஜிக் இடிக்காமல் சொல்லியிருந்தால் ஒரு பர்ஃபெக்ட் அட்வென்ச்சராக வந்திருக்கும் பேராண்மை.

    அதேபோல வசனங்களில் இந்த அளவு 'பச்சை வாடை' அடிக்காமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் இயக்குநர்.

    இருந்தாலும், இன்றைய சூழலில் இந்த மாதிரி நல்ல முயற்சிகளை வரவேற்க வேண்டிய சூழலில் உள்ளது தமிழ் சினிமாவும் ரசிகர்களும். அது மெருகேற்றப்பட்ட இன்னும் சில நல்ல முயற்சிகளுக்கு வழிவகுக்கலாம் அல்லவா...

    ஏ, பி, சி என்று பேதம் பார்க்காமல் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X