twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகர்சாமியின் குதிரை-பட விமர்சனம்

    By Shankar
    |

    நடிப்பு: அப்புக்குட்டி, பிரபாகரன், சரண்யா மோகன், அத்வைதா, அழகன் தமிழ்மணி, தேவராஜ்

    ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

    இசை: இளையராஜா

    கதை வசனம்: பாஸ்கர் சக்தி

    திரைக்கதை - இயக்கம்: சுசீந்திரன்

    தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்

    பிஆர்ஓ: நிகில்

    நல்ல சினிமா வேண்டும் வித்தியாசமான படம் வேண்டும் என ஓயாமல் புலம்பிக் கொண்டிருப்பவர்கள், அப்படியொரு படம் வரும்போது கண்டு கொள்ளாமல் போவதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

    சமீபத்தில் அப்படி வந்திருக்கிற நல்ல சினிமா அழகர்சாமியின் குதிரை. ஒரு மிக எளிய கிராமியக் கதையை எண்பதுகளின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

    நீண்ட காலமாக மழையின்றி, விவசாயம் பாதிக்கப்பட்டதால் கிராமக் கடவுள் அழகர்சாமிக்கு திருவிழா எடுக்க முடிவு செய்கின்றனர் மல்லையாபுரம் கிராமவாசிகள். அடுத்த நாளே திருடு போகிறது அழகர்சாமி ஊர்வலத்துக்காக தயார் செய்யப்பட்ட குதிரை வாகனம்.

    காணாமல் போன குதிரையைக் கண்டுபிடிக்க போலீஸில் புகார் செய்கிறார்கள் கிராமத்தினர்.

    இந்தக் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் வசிப்பவன் அழகர்சாமி (அப்புக்குட்டி). குதிரையில் பொதியேற்றிப் பிழைப்பு நடத்தும் அவனுக்கும் பக்கத்து ஊர் சரண்யா மோகனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அந்த நேரம் பார்த்து காணாமல் போனகிறது அவனது நிஜ குதிரை. குதிரை இல்லாததால் அவனது திருமணம் கேள்விக்குறியாகிறது.

    இந்த இரு குதிரைகளும் கிடைத்தனவா, அழகர்சாமி ஊர்வலமும், அழகர்சாமியின் திருமணமும் நடந்ததா என்பது மீதிக் கதை. இந்தக் கதைக்குள் மேல்சாதி இளைஞனுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்குமிடையிலான ஒரு மெல்லிய காதலையும் காட்டியிருக்கிறார்கள்.

    எண்பதுகளின் பின்னணியில் நடக்கும் கதை. ஆனால் அந்த காலகட்டத்தை எங்கும் வலிந்து சொல்லாமல், முதல்வர் எம்ஜிஆர் காலண்டர், பாண்டியன் பேருந்து என சில அடையாளங்கள் மூலமே புரிய வைத்திருக்கிறார் சுசீந்திரன்.

    காணாமல் போன கடவுளின் குதிரை வாகனத்தைக் கண்டுபிடிக்க மலையாள மாநிதிரீகனை வரச் சொல்வதும், அந்த மாந்திரீகன் மக்களின் அறியாமையைக் காசாக்குவதையும் காட்டியிருக்கும் விதத்தையும் விலாவாரியாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இந்தக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

    படத்துக்கு பெரும் பலமாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. மனதை நெகிழ வைக்கும் டைட்டில் இசையுடன் தொடங்கும் அவர் ராஜாங்கம் க்ளைமாக்ஸில் விஸ்வரூபம் எடுக்கிறது.

    அப்புக்குட்டி அறிமுகமாகும் காட்சிக்கு அவர் பிரயோகித்திருக்கும் இசை... வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. அதேபோல, அந்த சண்டைக் காட்சியின் ஆரம்பத்தில் மவுனத்தையும், போகப் போக இசையால் அந்தக் காட்சியின் உக்கிரத்தை உணர வைப்பதும் இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்.

    மூன்றே பாடல்கள். அவற்றில் 'பூவக் கேளு...' மிக அழகான மெலடி. 'குதிக்கிற குதிக்கிற குதிரைக் குட்டி...' ராஜா ஸ்பெஷல். துள்ள வைக்கிறது.

    கதையின் நாயகனாக வரும் அப்புக்குட்டி மிக தேர்ந்த நடிகராக தன்னைக் காட்டியுள்ளார். காணாமல் போன குதிரை கிடைத்த சந்தோஷத்தை அவர் காட்டும் விதமும், குதிரையைக் கொடுக்க கிராமத்தினர் மறுக்கும்போது சட்டென்று அவர் காட்டும் அழுகை கலந்த கோபமும்... ஒரு வெள்ளந்தியான மனிதனை கண்முன் நிறுத்துகிறது.

    பிரபா - அத்வைதா காதல் ஒரு மெல்லிய தென்றல் மாதிரி வந்துபோகிறது. க்ளைமாக்ஸில் இந்தக் காதலுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒரு கவிதை.

    சரண்யா மோகன் பாத்திரத்தை இன்னும் இயல்பாகக் காட்டியிருக்கலாம். அவரது தந்தையாக வரும் தேவராஜ் நான்கு காட்சிகள் என்றாலும் நிறைவாகச் செய்துள்ளார்.

    அழகன் தமிழ்மணிக்கு இதுகுறிப்பிடத்தக்க படம். அப்படியே கிராம பஞ்சாயத்து தலைவரைப் பார்க்கும் உணர்வைத் தருகிறார்.

    படத்தின் கதையே இயல்பான நகைச்சுவைதான் என்பதால், கூடுதலாக நகைச்சுவைக் காட்சிகளை இயக்குநர் சேர்க்கவில்லை போலிருக்கிறது. வசனங்களில் பளிச்சிடும் ஆர்ப்பாட்டமில்லாத நாத்திகம், பக்திமான்களையும் கூட ரசிக்க வைக்கும்!

    மிக இயல்பான, கதையை மீறாத ஒளிப்பதிவு தந்த தேனி ஈஸ்வரைப் பாராட்ட வேண்டும் (இது அவரது முதல்படம்!)

    இந்த அழகர்சாமியின் குதிரையில் சுகமான ஒரு ப்ளாஷ்பேக் சவாரி போக வைத்த சுசீந்திரன், நம்பிக்கை தரும் புதிய படைப்பாளிகள் வரிசையில் முதலிடம் பெறுகிறார்!

    வாழ்த்துக்கள்!

    English summary
    Suseendiran's Azhagarsamiyin Kudhirai's story line is simple and straightforward without any unnecessary twists and is set against a eighties rural milieu. There is something new in the plot and treatment along with Ilayaraja’s outstanding music score.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X