கச்சேரி ஆரம்பம்- பட விமர்சனம்

இசை: டி இமான்
இயக்கம்: திரைவண்ணன்
தயாரிப்பு: ஆர்.பி.சௌத்ரி
மீண்டும் ஒரு ரெண்டுங்கெட்டான் படம்... கூவத்தில் குளித்துக் கொண்டே அவ்வப்போது தலைமீது மினரல் வாட்டர் ஊற்றிக் கொள்வது மாதிரி, ஒரு வழக்கமான மசாலா திரைக்கதையில் ஆங்காங்கே ஹீரோயிசத்தைக் கிண்டலடிக்கிற ஸ்டைல்.
கதை... (கண்டிப்பா சொல்லித்தானே ஆகணும்!)
ஊருக்கெல்லாம் நல்லவரான ஹீரோ... அப்பாவிடம் கோபித்துக் கொண்டு பொட்டியைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு வருகிறார். லாரி விபத்தில் மாட்டிக் கொள்ளவிருந்த அவரை பூனம் பஜ்வா காப்பாற்றுகிறார்... ஆனால் அவரையே காதலித்து காப்பாற்ற வந்தவரை 'விபத்து'க்குள்ளாக்குகிறார் ஜீவா.
அந்தப் பெண்ணை வில்லன் சக்ரவர்த்தியும் காதலிக்கிறார். உங்க வீட்டு காதல் எங்க வீட்டுக் காதல் இல்லை... படு தீவிரமான காதல். தன் காதலியைப் பார்த்த ஒருவனின் பின்பகத்தில் இஸ்திரிப் பொட்டியை வைத்துத் தேய்த்து தண்டனை தருமளவு தீவிர காதல். இந்த காதலுக்காக ஹீரோவும் வில்லனும் மோதுகிறார்கள்...
முடிவு என்னவாக இருக்கும் என்பதை நூற்றுக்கணக்கான படங்களைப் பார்த்த உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?!.
கதையின் நாயகன் ஜீவாதான். ஆனால் மக்களை தியேட்டரில் இழுத்துப் பிடித்து நிறுத்தும் ஹீரோ என்றால் அது வடிவேலுதான். மனிதர் வந்து நின்றாலே அதிர்கிறது அரங்கம். இடைவேளைக்கு முன்பு வரை வடிவேலுவின் ராஜாங்கம்தான் படத்தில்.
இன்னும் அந்த 'சேட்டுப் பையன்' முகவெட்டு ஜீவாவை விட்டுப் போகவில்லை. ஆனாலும் ஒரு ஹீரோவாக சொன்ன வேலையை செய்துள்ளார் என்பது தெரிகிறது. தன் கேரக்டரை தானே கிண்டல் செய்து கொள்வது போல வரும் காட்சிகள் ரொம்ப ஓவர். அதற்கு ஏன் இந்தப் பாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்... வெறும் காமெடியனாகவே வந்து போகலாமே. 'தமிழ்ப் படம்' சிவா ரொம்பவே பாதித்துவிட்டார் போல!.
சோகமா சந்தோஷமா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு முகபாவத்தோடு படம் முழுக்க வருகிறார் பூனம் பஜ்வா. பாடல் காட்சிகளில், இருக்கிற சரக்கையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டவும் தயங்கவில்லை. தமிழ் சினிமாதானே.. பிழைச்சுக்குவார்!.
சக்ரவர்த்தியை வில்லனாக்கி வீணடித்திருக்கிறார்கள்.
இமானின் இசை வெறும் சத்தம்தான். பாடல் காட்சிகளில் வௌவால் பறக்கிறது... அத்தனை பழைய காட்சி அமைப்புகள்! ஒளிப்பதிவு சுமார்!.
வடிவேலு என்ற பக்கவாத்தியத்தை மட்டுமே வைத்து மெயின் கச்சேரியை ஒப்பேத்த முயற்சித்திருக்கிறார்கள். அது சொதப்பலில் முடிந்திருக்கிறது!


Click it and Unblock the Notifications











