twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவா- பட விமர்சனம்

    By Staff
    |

    Piaa Bajpai
    நடிகர்கள்: பிரேம்ஜி, ஜெய், வைபவ், சம்பத், ஸ்னேகா, பியா
    இசை: யுவன் சங்கர் ராஜா
    ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
    இயக்கம்: வெங்கட் பிரபு
    தயாரிப்பு: சௌந்தர்யா ரஜினி

    இது என்ன மாதிரி படம்... படம்தானா அல்லது இவர்கள் கோவாவில் குடித்துவிட்டு கூத்தடித்த கண்றாவியை நாம் காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்று வெங்கட் பிரபு-பிரேம்ஜி- ஜெய் கூட்டணி சொல்ல வருகிறார்களா...

    இந்தக் கருமத்தைக் காட்டத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தார்களா?

    ஏன் இப்படி பொங்கறீங்க? என்று நீங்கள் கேட்பது புரிகிறது... மனம் வெதும்பி திட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் காசு கொடுத்து இந்தப் படத்தைப் பாருங்கள்...

    ரொம்ப சின்ன கதை... அல்லது கோவா போக சின்னதாக ஒரு காரணம் இந்தக் கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

    மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் உதவாக்கரைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரேம்ஜி அண்ட் கோ, தங்கள் கட்டுப்பாடு மிக்க கிராமத்திலிருந்து ஒரு வாரம் 'எஸ்' ஆக விரும்புகிறார்கள். மதுரைக்குப் போகும் அவர்களுக்கு பழைய நண்பனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    அவனோ, கோவாவில் டூரிஸ்டாக வேலை பார்த்து, அப்படியே ஒரு பாரின் ஃபிகரை உஷார் பண்ணி திருமணம் செய்து லண்டனில் செட்டிலாகப் போகும் தன் கதையை விலாவாரியாகச் சொல்ல, இதுதாண்டா சரியான ரூட்டு என்ற முடிவுக்கு வருகிறார்கள் பிரேம்ஜி அண்ட் கோ.

    கோவாவுக்குப் போகிறார்கள். பெண்களை மடக்குவதில் பிஎச்டியே பண்ணுமளவு சுற்றுகிறார்கள். இந்த கும்பலில் ஹோமோவாக திரியும் சம்பத்-அரவிந்த் ஆகாஷ் மற்றும் ஸ்னேகாவின் கிளைக்கதைகள் வேறு...

    தங்களது 'உன்னத லட்சிய'த்தை இந்த கூட்டம் எப்படி அடைந்தது என்பது மீதிக் கதை.

    முதல் அரை மணிநேரம் கிராமிய இசையும், கல கல காட்சிகளுமா... 'அட, வெங்கட் பிரபுவுக்கு ஹாட்ரிக் போல இருக்கே' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்த நிமிடமே, அந்த இமேஜ் குமிழ் டப்பென்று வெடித்துச் சிதறுகிறது.

    கோவா என்றால் பீச், அரை அல்லது முக்கால் நிர்வாணத்தில் பெண்கள், மூக்கு முட்ட குடிப்பது, பெண்களைக் கரெக்ட் பண்ணுவது, ஓரினச் சேர்க்கை வாழ்க்கை முறை... இதுதான் வெங்கட் பிரபுவுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.

    'அடுத்த கட்ட சினிமா' என்பதை ஆணும் ஆணும் கொள்ளும் உறவைக் காட்டுவதுதான் என்று தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ வெங்கட் பிரபு?.

    இந்த சமூகம் ஏற்கெனவே கலாச்சார அழிவின் விளிம்பில்தான் நிற்கிறது. அந்த விளிம்பிலிருந்து அதலபாதாளத்துக்கு தள்ளிவிடும் முயற்சிகளை ஜஸ்ட் லைக் தட் செய்துவரும் கூட்டத்தில் வெங்கட் பிரபுவும்- சௌந்தர்யாவும் சேருவார்கள் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.

    எந்தவித முன் யோசனையும் இல்லாமல், மனம் போன போக்கில் எடுத்துத் தள்ளிவிட்டு அதை அடுத்த கட்ட சினிமா அல்லது பொழுதுபோக்கு ரசனையின் மாறுபட்ட பரிமாணம் என்று சொல்லிக் கொள்வது மகா அருவருப்பையே தருகிறது.

    பிரேம்ஜி அமரன்தான் படத்தின் நாயகன். மற்றவர்கள் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான். என்ன கொடுமை இது? என்ற பி. வாசுவின் வசனத்தை இன்னும் எத்தனை படத்தில் ஜவ்வாக இழுக்கப் போகிறாரோ பிரேம்ஜி...

    பழைய ஹிட் பாடல்களை எப்போதோ ஒருமுறை உபயோகித்தால் சிலிர்க்கும்... அடிக்கடி அதே டெக்னிக்கை பயன்படுத்தினால் சலிக்கும். இது எப்போது வெங்கட் பிரபுவுக்கு புரியப் போகிறதோ?.

    ஸ்னேகாவா இது... நம்ப முடியவில்லை. அவ்வளவு மோசமாக சித்தரிப்பு.. உருவமும் சரி, நடிப்பும் சரி!

    பியா என்ற பெண்ணுக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வேலை இல்லை.

    ஒரு காட்சி கூட நன்றாக இல்லையா என்ற கேள்வி எழலாம்... இருக்கின்றன.. ஆனால் அவை சாக்கடையில் கிடக்கும் நெல்லிக்கனிகளைப் போல!

    யுவன் சங்கர் ராஜாவின் இசை பரவாயில்லை. குறிப்பாக கோவா தீம் மியூசிக். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு பாடல்கள் இல்லை.

    சென்னை 28 ஓகே... சரோஜா பரவாயில்லை... கோவா கேவலம்... 'நல்ல' கேரியர் கிராஃப் வெங்கட்!

    வாரிசுகள் எ(கெ)டுத்த இந்தப் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கும் சரி, பண்ணைப்புரத்து இசைக் குடும்பத்துக்கும் சரி... நல்ல பெயர் கிடைக்காது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X