Label Review: லேபில் விமர்சனம்.. இது அருண்ராஜா காமராஜின் வடசென்னை.. கெத்துக் காட்டும் ஜெய்!
நடிகர்கள்: ஜெய், மாஸ்டர் மகேந்திரன், தன்யா ஹோப்
இசை: சாம் சி.எஸ்
இயக்கம்: அருண்ராஜா காமராஜ்
ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
சென்னை: தீபாவளிக்கு தியேட்டரில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் மற்றும் ரெய்டு உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ஓடிடி ரசிகர்களுக்கு ஜெய் நடித்துள்ள லேபில் வெப்சீரிஸ் நேற்று வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வடசென்னையை மையப்படுத்திய லேபில் வெப்சீரிஸின் முதல் மூன்று எபிசோடுகள் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

ஒரே மூச்சில் ரசிகர்கள் அதை பார்த்து பாராட்டி வருகின்றனர். அடுத்த 3 எபிசோடுகள் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிகிறது.
லேபில் கதை: முதல் காட்சியிலேயே படத்தின் மையத்தை அழகாக டைட்டில் போடுவதற்கு முன்பாக இயக்குநர் சொல்லி விடுகிறார். விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் திடீரென ஒருவரை ஸ்கெட்ச் போட்டு கொல்கின்றனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் எதுவும் தெரியாத சிறுவனையும் சேர்த்துக் கொண்டு போய் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கின்றனர்.
பின்னர், அவன் எதுவும் செய்யவில்லை என விடுவிக்கப்படும் நிலையில், படித்து வழக்கறிஞராகி தன்னை போல வளரும் இளைஞர்கள் அந்த லேபிலில் சிக்கி விடக் கூடாது என போராடுகிறார். வடசென்னையில் உள்ள வாலி நகர் எனும் ஏரியாவில் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அதில், அங்கம் வகிக்க வேண்டும் என்றால் பெரிய சம்பவம் செய்ய வேண்டும். மாஸ்டர் மகேந்திரன் தனது நண்பனுடன் சேர்ந்துக் கொண்டு கொலைகளை செய்து அந்த லேபில் கேங்கிற்குள் செல்ல ஆசைப்படுகிறார். மாஸ்டர் மகேந்திரன் சாதாரண இளைஞர் என நினைத்து ஜெய் அவரை வெளியே கொண்டு வர முயற்சிக்க அதன் விளைவாக ஜெய்க்கு நடக்கும் ஆபத்துக்களும் பிரச்சனைகளும் தான் இந்த லேபில் வெப்சீரிசின் கதை.
ராவான மேக்கிங்: கனா, நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் நடிகர் ஜெய், தன்யா ஹோப், மாஸ்டர் மகேந்திரனை வைத்து உருவாக்கி உள்ள இந்த வெப்சீரிஸ் செம ராவாகவும் வலி நிறைந்த ஒன்றாகவும் உருவாகி உள்ளது. வடசென்னை மக்களை தப்பாகவே பார்க்கக் கூடாது என்றும் அங்கேயும் படித்து, பல துறைகளில் மேலே வருபவர்கள் உள்ளனர் என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
நடிகர் ஜெய் இந்த படம் எந்தளவுக்கு இன்டென்ஸான படம் என்பதை புரிந்து தனது ஜாலியான நடிப்பை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு சின்சியராக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகள், ஸ்கெட்ச் போடுவது, கத்தியில் எடுத்து குத்துவது என அனைத்துமே தத்ரூபமாக படமாக்கப்பட்டு நெஞ்சை பதற வைக்கின்றன. நீதிபதியாக வேண்டும் என்கிற கனவில் இருக்கும் ஜெய்க்கு அவன் சிறு வயதில் சீர்திருத்த பள்ளிக்கு சென்ற விஷயத்தை பல வருடங்களுக்கு பிறகு கிண்டி அவனுக்கு செக் வைக்கும் இடங்கள் எல்லாம் நல்லவனா இருந்தாலும் நல்லது செய்ய நினைத்தாலும் இந்த ஊர் நம்மள வாழவிடாது என்பதை காட்சிகளா அற்புதமாக காட்டி உள்ளார் இயக்குநர்.
பிளஸ்: அருண்ராஜா காமாராஜின் வசனங்கள் மற்றும் காட்சிகள், திரைக்கதை மேக்கிங் மற்றும் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை, தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு என அனைத்துமே பிளஸ் ஆக உள்ளது. நடிகர்களில் ஜெய் மற்றும் மாஸ்டர் மகேந்திரன் அசத்தல். பாதாளமாக நடித்துள்ளவர் எல்லாம் வேறலெவல். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சரண்ராஜ் ஜெய்க்கு அப்பாவாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் இளவரசு, வழக்கறிஞராக லேபில் கேங்குக்கு உதவி செய்யும் சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவருமே நடிப்பில் மிரட்டுகின்றனர். அதிலும், பாதாளத்துக்கு ஸ்கெட்ச் போட்டு மகேந்திரன் கொல்லும் காட்சிகள் எல்லாம் டாப் கிளாஸ். அடுத்த எபிசோடு எப்போ வரும் என எதிர்பார்க்கும் அளவுக்கு வெப்சீரிஸ் தரமாக உள்ளது.
மைனஸ்: வடசென்னை பற்றிய வெப்சீரிஸ், ராவாக இருக்க வேண்டும் என ஓடிடி என்பதால் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அள்ளித் தெளித்துள்ளனர். குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் பார்க்க முடியாது. ஹீரோயின் தான்யா ஹோப்புக்கு முகத்தில் நடிப்பே வரவில்லை. அவருடைய கதாபாத்திரமும் வழக்கமாக இதுபோன்ற கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது ஒட்டவில்லை. ஆனாலும், மேக்கிங் மற்றும் கதை போகும் பரபரப்பில் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வெப்சீரிஸை ரசிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











