Vilangu Review: நடிகர் விமலுக்கு கம்பேக் கொடுக்குமா இந்த விலங்கு வெப்சீரிஸ்? அந்த பிரச்சனை இருக்கே?
நடிகர்கள்: விமல், இனியா, பாலசரவணன், முனிஸ்காந்த், RNR மனோகர் மற்றும் பலர்.
Recommended Video
இசை: அஜீஸ்
இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ்
OTT: ஜி5
ரேட்டிங்: 3/5.
சென்னை: நடிகர் விமல் வெப் தொடரில் அறிமுகமாகி உள்ள விலங்கு வெப்சீரிஸ் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஒரு நல்ல படத்திற்கான மேக்கிங்குடன் வெளியாகி உள்ள இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், கதை ரீதியாக ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்து காணப்படுவது இந்த வெப்தொடருக்கு பெரிய பலவீனமாக மாறியுள்ளது.
வெப்தொடரில் விமல்
களவாணி, வாகை சூடவா, மஞ்சப் பை படங்களுக்கு பிறகு நடிகர் விமலுக்கு நிச்சயம் இந்த விலங்கு வெப்தொடர் சினிமாவில் மீண்டும் விமல் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர்கள் சைலன்ட்டாக வசனம் பேசி நடித்தாலே அவர்களது நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது. இதற்கு சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
என்ன கதை
இன்ஸ்பெக்டர் காதுகுத்து நிகழ்ச்சியில் பிசியாக இருக்க எஸ்ஐ பரிதி தலையில் ஒரு கொலை கேஸ் வந்து விடிகிறது. திருச்சி அருகே உள்ள காட்டில் மர்மமான முறையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், ஒரு உடல் இருக்கும் தகவல் விமலுக்கு மர்ம போன் கால் மூலம் கிடைக்க, ஸ்பாட்டுக்கு செல்லும் அவர் அந்த சிக்கலில் எப்படி சிக்குகிறார்? அந்த விசாரணையை எப்படி நடத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கிறார். கடைசியில் வெற்றி பெற்றது போலீஸா? அல்லது கொலைகாரனா? என ஏகப்பட்ட பரபரப்பு நிறைந்த கிரைம் த்ரில்லர் கதை தான் விலங்கு.
பிரமாதமான நடிப்பு
மொத்தம் 7 எபிசோடுகளை கொண்ட இந்த விலங்கு வெப்தொடரில் பரிதி எனும் போலீஸ் அதிகாரியாக விமல் நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக ரேவதி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடித்துள்ளார். கருப்பு எனும் கதாபாத்திரத்தில் சக போலீஸ் அதிகாரியாக லத்தியை வைத்து வெளுத்து வாங்கும் வேடத்தில் பால சரவணன் மிரட்டி உள்ளார். மேலும், படத்தின் வில்லனான கிச்சா கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளி உள்ளது.
பிளஸ்
இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் கதை சொன்னதுமே ஓகே சொல்லி தனது நல்ல நடிப்பை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிப்படுத்திய நடிகர் விமல் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றே சொல்லலாம். அதே போல கடைசி வரை விமல் மட்டுமே கதையை கொண்டும் செல்கிறார். பால சரவணன் வித்தியாசமான நடிப்பில் கைதட்டல் பெறுகிறார். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, அஜீஸின் இசை மற்றும் வெப்தொடரில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே இந்த வெப் தொடரை ஒரு படம் போல நம் கண் முன் நிறுத்தியுள்ளதே மிகப்பெரிய பிளஸ் தான்.
மைனஸ் என்ன
அதே சமயம் இந்த விலங்கு வெப் தொடர் பக்காவான திரைக்கதை கொண்ட சூப்பரான வெப் தொடர் என்றும் சொல்ல விடாமல் கதையில் இருக்கும் ஒரு சில நெருடலான காட்சிகள் ஒட்டுமொத்த வெப்தொடரின் வேகத்தையும் குறைத்து விடுவது தான் மிகப்பெரிய மைனஸ். கிச்சாவின் கில்மா மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டியின் என்ட்ரி வரும் இடத்திலேயே கதை பேக் அடித்து விட்டது.
பெரிய ஓட்டை
தனது மனைவியை வைத்து மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதே தனது குழந்தைக்குத் தான் என கிச்சா பரிதியிடம் கெஞ்சும் இடங்களில் எல்லாம் எந்தவொரு ஃபீலிங்கும் நமக்கு வர மறுக்கிறது. மேலும், அத்தனை பெரிய மகளை பெற்ற தாய் எப்படி இப்படியொரு காரியத்தை செய்வாள் என்றும், அந்த ஏமாற்றுக் காட்சிகள் இடம்பெறும் போதெல்லாம் மகள் எங்கே போனாள் என்கிற கேள்விகளும் இயல்பாக எழத்தான் செய்கிறது. அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள காணாமல் போன அனைவரையும் நான் தான் கொன்றேன் எனக் கூறிவிட்டு, கடைசியில் அதை ஒட்டியதே நான் தான் அதனால், தான் சொன்னேன் என சொல்லும் இடத்திற்கு பிறகாவது வேறு ஒரு வில்லனை கதையில் கொண்டு வந்திருந்தால் இன்னமும் இந்த வெப்தொடர் சிறப்பாக இருந்திருக்கும் என தோன்றுகிறது.
இனியாவுக்கு அந்த ஒரு சீன் தான்
கர்ப்பவதியாக இருக்கும் இனியாவுக்கு கதையில் எந்த ஒரு பெரிய ரோலும் இல்லை. குளியலறையில் அப்படியொரு காட்சியில் நிற்கவும், பால் கொடுத்துவிட்டு நைட்டியை ஓப்பன் செய்து விட்டு வீட்டிற்குள் ஒருவன் உள்ளே நுழைந்து பெட்சீட் போர்த்தி விடும் வரை எதுவுமே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி எல்லாம் பார்த்தால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.
யார் ஏமாந்தது
சதுரங்க வேட்டை படத்திலேயே நான் நைஸாக பேசி உண்மையை வாங்குகிறேன் என சொல்லி போகும் போலீசாருக்கு நாயகன் கொடுக்கும் நச் பதிலடியிலேயே இந்த விலங்கு கதை முடிந்து விடுகிறது. விமல் தன்னை ஏமாற்றுகிறான் என தெரிந்தும், நான் அவனை ஏமாற்றி விட்டு என் குழந்தையை வளர்க்க வைத்து விட்டேன் என கிச்சா நினைத்து சிரிக்கும் காட்சியும் இந்த கதையில் உண்மையில் யார் ஏமாந்தார்கள் என்கிற கோணத்தை கிளப்புகிறது. நல்ல கதை என நினைத்து பார்த்த ரசிகர்கள் தான் கடைசியில் ஏமாந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











