Anjaamai Review: விதார்த்தின் அஞ்சாமை படம் எப்படி இருக்கு.. விமர்சனம் இதோ!
சென்னை: நடிகர் விதார்த் நடிப்பில் இயக்குநர் எஸ் பி சுப்பராமன் இயக்கி இன்று தியேட்டரில் வெளியான திரைப்படம் அஞ்சாமை. இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த்,வாணி போஜன்,ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டு என்கிற கட்டாயத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள். இப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பூ வியாபாரியாக இருக்கிறார் விதார்த். இவரின் மகன் 10ம் வகுப்பில் மாநிலத்திலே முதல் இடத்தை பிடிக்கிறார். தனது மகன் நன்றாக படிப்பதால், மகனை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறார் விதார்த். இதற்காக நீட் பயிற்சிதேர்விற்கும் தனது மகனை கஷ்டப்பட்டு அனுப்புகிறார். இதனால் இவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக எப்படி பிரச்சனையை சந்திக்கிறது. நுழைவுத் தேர்வு நடத்தும் முறை மாணவர்களை எப்படி பாதிக்கிறது. இதனால், அவர்களின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனை தான் அஞ்சாமை படத்தின் கதை.

இயல்பான நடிப்பு: இதில், சர்க்கார் நிறைவான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார். இது படத்தின் முதல் பாதியில் பெரிய பலமாகவே மாறியுள்ளது. மகனின் வாழ்க்கைக்காக தனக்கு பிடித்த தொழிலைவிட்டு வருவது, தனது மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் ஒரு சராசரி அப்பாவாவாக நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார் விதார்த். படத்தின் மொத்த கதையை தனது தோளில் சுமந்துள்ளார். விதார்த்தின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள வாணி போஜன், தனது கதாபாத்திரம் உணர்ந்து நிறைவான நடிப்பை தந்துள்ளார்.
இரண்டாம் பாதி: படத்தின் மிகப்பெரிய பலமே முதல் பாதியில் தனது மகனுக்காக விதார்த் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளின் காலில் விழும் காட்சிதான். அந்த காட்சி ரசிகர்கள் ஒவ்வொருவரின் கண்களையும் குளம்போல் ஆக்குவதுடன் நம் நெஞ்சை உலுக்குகிறது. முதல் பாதியில் கவனம் செலுத்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் ரஹ்மானுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானதாக இருந்தாலும், தொடர்ந்து அதே போன்று காட்சி வருவதால் ரசிகர்களுக்கு போர் அடிப்பது போன்று தோன்றுகிறது. அந்த காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
குவியும் பாராட்டு: படத்தின் இறுதிக்காட்சி இன்றும் தமிழகம் நீட் தேர்வுடன் எவ்வாறு போராடுகிறது? என்பதை அப்படியே காட்டியுள்ளது. சமூக பொறுப்புள்ள கதைகளை படமாக்கும் இயக்குனர்களை எப்போதும் பாராட்ட வேண்டும். அது போன்ற படங்கள் மக்கள் மனதில் பதிந்துவிடும். மக்கள் அதை என்றுமே மறக்க மாட்டார்கள், அது போன்று இந்த படமும் இருக்கும்.சமூக அவலத்தை படமாக இயக்கிய இயக்குனர் சுப்புராமனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











