Leo Trailer Review: அந்த 1000 கோடியை எடுத்து வைங்க.. விஜய் வெறித்தனம்.. லியோ டிரெய்லர் விமர்சனம்!
சென்னை: தளபதி விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாறுமாறு படமாக லியோ படம் உருவாகி இருப்பது அதன் டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வைத்து டிரெய்லரையும் வெளியிட்டு இருந்தால் இந்நேரம் வேறலெவல் ஹைப்பாக இருந்திருக்கும்.
ஆனால், இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை லியோ டிரெய்லர் ரிலீஸுக்கு பிறகு அந்த படத்தின் ஹைப் இமயமலை அளவுக்கு எழுந்து நிற்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கொடுத்து விட்டோம் என அமைதியாகி விடாமல், தன்னை நம்பி படம் கொடுத்த தளபதிக்கு ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் என்று தான் தெரிகிறது. லியோ பட டிரெய்லரில் உள்ள பிளஸ், மைனஸ் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
லியோ டிரெய்லர் சொல்லும் கதை: பார்த்திபனாக மனைவி த்ரிஷா, மகன் மேத்யூ மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் விஜய்யை வில்லன் ஆண்டனி தாஸ் கூட்டம் ஈசல் போல தேடி வந்துக் கொண்டே இருக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கும் போது, இதற்கு மேல் ஓட முடியாது என்பதை புரிந்துக் கொண்டு தனது குடும்பத்தை காப்பாற்ற பார்த்திபன் விஸ்வரூபம் எடுத்து வில்லன்களை பொளந்து எடுக்கும் மரண சம்பவ கதை தான் லியோ என தெரிகிறது. லியோ தாஸ் பார்த்திபனாக வாழ்ந்து வருகிறாரா? அல்லது லியோ தாஸ் என இன்னொரு விஜய் இருக்கிறாரா? என்பது தான் ட்விஸ்ட் என தெரிகிறது.

டிரெய்லர் எப்படி இருக்கு?: இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் டிரெய்லர்களிலேயே மிரட்டலாகவும் ஹாலிவுட் தரத்தில் ஒரு அட்டகாசமான ஆக்ஷன் படத்திற்கான அனைத்து அம்சங்களும் கொண்ட ஃபயர் மோட் டிரெய்லராக தீபாவளி சரவெடியாக காட்சிக்கு காட்சி சும்மா தெறிக்கிறது. ஒரே ட்ரெய்லரில் படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களையும், அதற்கு மேல் தளபதியின் வெறித்தனத்தையும் எப்படி தான் எடிட்டர் எடிட் செய்தார் என்பதே வியப்பாக உள்ளது.

பிளஸ்: நடிகர் விஜய் பார்த்திபன் கதாபாத்திரத்திலும், லியோ தாஸ் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டியிருப்பது டிரெய்லரில் பக்காவாக தெரிகிறது. என் குடும்பத்தை ஏன் டா தொடுறீங்க என சொல்லி அடிக்கும் காட்சிகளும், எவனோ ஒரு டேஷ் என்னை மாதிரி இருக்கான்னு என்னை ஏன் டா துரத்துறீங்க என பேசும் வசனங்கள் எல்லாம் பட்டையை கிளப்புகிறது. ஆரம்பத்தில் சைக்கோ கில்லர் கதை, துணிச்சலான போலீஸ்காரர் என கெளதம் மேனனை காட்டுவது என அனைத்துமே நேர்த்தி. அதே போல அவன் ஊரை வேணா ஏமாத்தலாம் என்னை ஏமாத்த முடியாது என சஞ்சய் தத் பேசும் வசனம் எல்லாம் டபுள் ஆக்ஷனா? சிங்கிள் தானா? என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது.
மைனஸ்: அதிகமான ஆக்ஷன், ரத்தம், ஆபாச வார்த்தை உள்ளிட்டவை படத்திற்கு வெயிட்டேஜ் கொடுத்தாலும், ஓவர்டோஸ் ஆகிவிட்டால் அதுவே படத்திற்கு ஆபத்தையும் கொடுக்கலாம் என்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் செய்யப் போகும் மேஜிக்கை காண ஒட்டுமொத்த இந்திய சினிமாவே வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











