Mrs and Mr Review: படம் முழுக்க ஓவர் கசமுசா.. மிஸஸ் & மிஸ்டர் படம் எப்படி இருக்கு?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில், வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா (வித்யா) என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராபர்ட் (அருண்) என்கிற ரோலில் நடித்துள்ளார். ஷகிலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இதில், திருமணம் வேண்டாம் என்கிற முடிவில், ராபர்ட் மற்றும் வனிதா இருவரும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் வனிதாவின் தோழிகள், குழந்தை என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று, குழந்தை தான் நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் என சொல்ல, வனிதாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் வருகிறது. ஆனால், ராபர்ட்டுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லாததால், படுக்கை அறையில் அதற்கு உடன்பட மறுக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதில், வனிதாவிற்கு குழந்தை பிறந்ததா.. இல்லையா.. என்பது தான் படத்தின் கதை.

மிஸஸ் அண்ட் மிஸ்டர்: 40 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் ஒரு பெண் தனது கணவனை எப்படி எல்லாம், உறவிற்கு அழைப்பார் என்பதை சொல்லும் வித்தியாசமான கதையாக இருந்தாலும். இந்த படத்தில் பல காட்சிகளில் ஓவர் கசமுசாவாக இருந்தது என்று சொல்லலாம். படத்தின் முதல் பாதி முழுக்க இரட்டை அர்த்த வசனம், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளாகவே இருந்தது. குறிப்பாக படத்தில் ஒரு காட்சியில் கணவருடன் உறவு வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என நினைக்கும் வனிதா 'விந்தணுவை' சேமிக்கும் காட்சி பலரை சீட்டில் நெளியவைத்தது எனலாம். படத்தின் கதை பாங்காக்கில் தான் நடக்கிறது என்றாலும், வனிதாவின் உடை, படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனமும் ஏதோ அடல்ட் படத்தை பார்ப்பது போல இருந்தது.
சிவராத்திரி: எது எப்படி இருந்தாலும், வனிதா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல நடித்துள்ளார். அதே போல ஷகிலா, பாத்திமா பாபு, ஆர்த்தி, கிரண் அனைவரும் ஒரே வயதுடையவர்கள் என்பதை பார்க்கும் போதே தெரிகிறது. இருந்தாலும், வனிதாவிற்கு ஷகிலா அம்மாவாகவும், பாத்திமா பாபு தோழியாக வருவதை ஏற்றுக்கொள்ளவே முடிவில்லை. ராபர்ட் மாஸ்டர் நடிக்க வரவில்லை என்றாலும், ஏதோ முயற்சி செய்து நடித்து இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவும் தனது இசையின் மீது நம்பிக்கை இல்லாமல், 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் வரும் 'ராத்திரி சிவராத்திரி' பாடலை போட்டு இருக்கிறார். அந்த பாடல் மட்டும் தான் கேட்கும்படி இருந்தது.
ஓவர் கசமுசா: இந்த படத்தை வனிதா இயக்காமல், வேறு யாரையாவது வைத்து இயக்கி, திரைக்கதை அமைந்து இருந்தால், இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல திரைப்படமாக இருந்து இருக்கும். ஆனால், வனிதா அதை செய்யவில்லை. இரண்டரை மணி நேர படத்தில், இந்த காட்சி, இந்த சீன் வசனம் நன்றாக இருந்தது என்று சொல்லும் அளவிற்கு படத்தில் எதுவுமே இல்லை, அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை கணவன் மனைவியாக இருந்தாலும் தியேட்டரில் அமர்ந்து பார்க்கவே முடியாது.


Click it and Unblock the Notifications











