Adipurush Review: ராமாயணத்தை மாடர்னாக மாற்றிய ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
இசை: சஞ்சிதா பல்ஹாரா, அஜய் அதுல்
Adipurush Movie Review in Tamil (ஆதிபுருஷ் விமர்சனம்): இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடிப்பில் ராமாயணக் காவியத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது ஆதிபுருஷ் திரைப்படம்.
இயக்குநர் ஓம் ராவத் ராமாயணத்தின் யுத்த காண்டத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.

லங்கேஷ் எனும் ராவணாசுர கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைஃப் அலி கானின் இலங்கை மற்றும் அவரது படைகள் என அனைத்துமே மாடர்னாக மாற்றி 2கே கிட்ஸ்களை கவரும் நோக்கில் உருவாக்கி இருப்பது எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகியிருக்கு என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஆதிபுருஷ் கதை: ராமாயணக் கதை அனைவரும் அறிந்த ஒன்று தான். 2கே கிட்ஸ்களுக்கும் ராமாயணக் கதையை சொல்லித் தரும் விதமாக இந்த ஆதிபுருஷ் படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார்.
சின்னம்மா கைகேயிக்கு தனது அப்பா தசரதர் கொடுத்த வரத்தின் காரணமாக ராஜ்ஜியத்தை விட்டு 14 ஆண்டுகள் ராமர் என்கிற ராகவன் (பிரபாஸ்) தனது மனைவி சீதா என்கிற ஜானகி (க்ரித்தி சனோன்) மற்றும் தம்பி லக்ஷ்மணன் என்கிற சேஷுவுடன் வனவாசத்தில் உள்ளார்.
ஒரு நாள் பொய் மானை வைத்து ராகவனையும் சேஷுவையும் திசை திருப்பி விட்டு முனிவர் வேடத்தில் வந்து ஜானகியை ராவணன் (சைஃப் அலி கான்) கவர்ந்து செல்கிறார். அனுமனின் (தேவதத்தா நாகே) உதவியை நாடி வானரப்படையுடன் ராமர் பாலத்தைக் கட்டி இலங்கைக்கு சென்று ராவணனை வதம் செய்து சீதையை ராமர் எப்படி மீட்டு வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
ஆதிபுருஷ் விமர்சனம்: ராமராக பிரபாஸ் அட்டகாசமாக நடித்துள்ளார். அவரது உடல்மொழி, தோற்றம் எல்லாம் ஆரம்பத்தில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், படத்தில் கச்சிதமாகவே காட்சிகள் இடம்பெற்று பிரபாஸ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளனர்.

வில்லனாக நடித்துள்ள சைஃப் அலி கானின் தோற்றம், அவரது பத்து தல, வவ்வால் வாகனம் என எதையுமே மாற்றாமல் அப்படியே வைத்திருக்கின்றனர். மார்வெல் படங்களை பார்ப்பது போல அவரது சேனை மற்றும் இலங்கை அரண்மனை என அனைத்துமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் படத்தின் கிராபிக்ஸ் ஓகே ரகமாக இருந்தாலும், பல இடங்களில் இதைத்தான் 6 மாத காலமாக ஒட்ட வச்சீங்களா? என்றே கேட்கத் தோன்றுகிறது.
பிளஸ்: ஆதிபுருஷ் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடிப்பதே பிரபாஸ் போர்ஷன் தான். க்ரித்தி சனோன் சீதையாக ஆரம்பத்தில் ரம்யமாகவும், அதன் பிறகு அசோக வனத்தில் சோகமே உருவானவராகவும் உள்ளார்.
ராமருக்கும் லக்ஷ்மணருக்கும் சீதைக்கும் ஆதரவாக வரும் ஆஞ்சநேயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தேவதத்தா நாகே நடிப்பு சிறப்பு. ராவணன் சீதையை கடத்திச் செல்லும் போது ஜடாயு நடத்தும் அந்த சண்டைக் காட்சி செம ஹைலைட்.

மைனஸ்: ஆதிபுருஷ் முதல் பாதி இருந்த அளவுக்கு இரண்டாம் பாதி சூப்பராக இல்லை. மேலும், 500 கோடி பட்ஜெட் என கதை விட்டு விட்டு எடுத்துள்ள இந்த படத்தின் சிஜி சொல்லிக் கொள்ளும் படி தரமாக இல்லை. 6 மாத காலம் மீண்டும் சிஜி ஒர்க் பண்ணியிருப்பது சில இடங்கள் குறிப்பாக அந்த டிரைலருக்கு மட்டுமான வேலையாகவே பார்க்கப்படுகிறது.
கதையளவில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காட்சியளவில் பல இடங்களில் இது ராமாயணம் தானா? அல்லது வேறு ஏதாவது கதையா? என்றே எண்ணத் தோன்றுகிறது. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி இன்னமும் பிரம்மாண்டமாக இருந்திருக்கலாம். மாடர்னாக மாற்றி உள்ள ராமாயணக் கதை பெரியவர்களை நிச்சயம் கவராது என்றே தெரிகிறது. குழந்தைகளை கவரும் விதத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் நிறைந்திருக்கின்ற நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தான் இந்த படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











