Theera Kadhal Review: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த படமாவது கை கொடுத்ததா? தீராக் காதல் விமர்சனம்!
நடிகர்கள்: ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா
இசை: சித்து குமார்
இயக்கம்: ரோகின் வெங்கடேஷன்
நேரம்: 2 மணி நேரம் 8 நிமிடங்கள்
சென்னை: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து 5 மாதத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள் வெளியாகி உள்ளன. எல்லா படங்களிலும் அவரது நடிப்பை கொஞ்சம் கூட குறை சொல்ல முடியவில்லை என்றாலும் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இந்நிலையில், மே 26ம் தேதி வெளியாகி உள்ள தீராக் காதல் திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஜெய்க்கும் இந்த படம் நிச்சயம் கை கொடுக்கும் என்றே தெரிகிறது.
இயக்குநர் ரோகின் வெங்கடேஷன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய், ஷிவதா நடித்துள்ள தீராக் காதல் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
தீராக் காதல் கதை:
கார்த்தியை விட்டுட்டு ஜெஸ்ஸி கல்யாணம் பண்ணிட்டுப் போனாலும், ராமை விட்டுட்டு ஜானு திருமணம் செய்துக் கொண்டு குழந்தையை பெற்றுக் கொண்டாலும் ஹீரோக்கள் அப்படியே பூவே உனக்காக விஜய் போல சிங்கிளாக இருப்பது போன்ற பல படங்கள் வந்துள்ளன.
காதலி பிரேக்கப் பண்ணிட்டுப் போனாலும், கடவுள் கொடுத்த வாழ்க்கையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்போமே என இருக்கும் நபர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் அடிப்பது போன்று முன்னாள் காதலியின் என்ட்ரி கொண்ட அழகி, சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் சென்னையில் இடம்பெற்ற பறவைக் கூட்டில் வாழும் மான்கள் படங்களில் இடம்பெற்ற அதே கதை தான் இந்த தீராக் காதல் கதையும்.
ஆனால், இதுபோன்ற கதைகளை எத்தனை முறை எடுத்தாலும், சுவாரஸ்யமாக எடுத்தால் போதும் டாடா படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்தது போல குவிந்து விடுவார்கள் என்கிற நோக்கத்திலேயே இந்த படத்தை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேஷன்.
படம் எப்படி இருக்கு?:
கவுதம் கதாபாத்திரத்தில் ஜெய் ராஜா ராணி படத்துக்கு பிறகு நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். ஆரண்யா கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரி கால காதலியாகவும், கணவனால் பாதிக்கப்பட்டு மீண்டும் பழைய காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற வெறியில் அவர் வீட்டுக்கு எதிரே குடி புகுவது மற்றும் மறைமுகமாக ஜெய்யை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல வில்லி போல செயல்படுவது என நடிப்பில் பட்டையைக் கிளப்பி உள்ளார்.
பாசமான மனைவியாகவும் நல்ல அம்மாவாகவும் வந்தனா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷிவதா தனக்கே உரிய பாணியில் நடிப்பில் தனித்துவம் காட்டுகிறார். கணவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்கிற அச்ச உணர்வில் அவர் நடித்துள்ள காட்சிகள் எல்லாம் வேறலெவல் அப்ளாஸ் அள்ளுகிறது.
பிளஸ்:
சிக்கலான காதல் கதை என்பதால், கொஞ்சம் டோஸ் கூடினாலும் கள்ளக் காதல் ரேஞ்சுக்கோ அல்லது எஸ்.ஏ. சந்திரசேகர் ஜெய்யை வைத்து இயக்கிய கேப்மாரி படம் போல இந்த படமும் கேவலமாக போயிருக்கும்.

ஆனால், தீராக் காதல் டைட்டிலுக்கு நீதி செய்யும் வகையில் உறவுகளையும், காதலையும், காட்சிகளையும் சரியான அளவில் வைத்து இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார். வாழ்க்கை குறித்த வசனங்களும் படத்தின் ஒளிப்பதிவும் பெரிய பிளஸ் ஆக உள்ளது. குழந்தையாக நடித்துள்ள வரித்தி விஷால் மற்றும் ஜெய்யின் நண்பராக வரும் லீ என்பவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
மைனஸ்:
இது போன்ற கதைகள் எப்படி ஆரம்பித்து எப்படி முடியும் என்கிற அதே பழைய டெம்பிளேட்டை கொண்டு ஒரே நேர்க்கோட்டில் பயணித்து இருப்பது, காதலை சொல்லும் படத்தின் பாடல்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதது. ஐஸ்வர்யா ராஜேஷை கொஞ்சம் வில்லியாக காட்டுவது போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும், தாராளமாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான். ஆனால், ஏற்கனவே எக்ஸ் லவ் இருந்தால் மனைவியுடன் படத்தை போய் பார்த்து விட்டு வரும்போது, எந்த பிளாஷ்பேக்கையும் சொல்லி மாவு கட்டு போடும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்!


Click it and Unblock the Notifications











