Mankatha Review: மங்காத்தா விமர்சனம்.. ரீ ரிலீஸிலும் மாஸ் காட்டும் அடங்காத அஜித் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்
சென்னை: அஜித்,த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கிளவுட் நயன் மூவீஸ் நிறுவனம் தயாரித்த படம் மங்காத்தா. படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. இப்படம் அஜித்தின் 50ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ரீ ரிலீஸ் இன்று அதாவது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதால், படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான அஜித், த்ரிஷாவை காதலிக்கிறார். அவர் த்ரிஷாவை காதலிக்க காரணமே த்ரிஷாவின் தந்தையான ஜெயப்பிரகாஷ் ஐபிஎல் பெட்டிங் மூலம் கணக்கில் வராத, பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூபாய் 500 கோடிகளை திருடுவதுதான் நோக்கமே. த்ரிஷாவின் தந்தையை நெருங்கும்போதுதான் தெரிகிறது, அவரிடம் வேலை பார்க்கும் வைபவ், அவரது நண்பர்களான மகத், பிரேம் ஜி, அஸ்வின் ககுமனு உள்ளிட்டோர் பணத்தை திருட திட்டமிடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார்.

அதன் பின்னர் அவர்களை தனது பிளானுக்கு பயன்படுத்திவிட்டு, அவர்களைக் கொல்ல திட்டம் போடுகிறார் அஜித். ஆனால் அதில் பிரேம் ஜி மற்றும் மகத் என இருவரும் அஜித் உள்ளிட்ட அனைவரையும் ஏமாற்றி விட்டு பணத்தைத் திருடிச் செல்கிறார்கள். இதற்கிடையில் த்ரிஷாவின் அப்பாவின் அடியாட்கள், இந்த சூதாட்டம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அர்ஜுன் உள்ளிட்டோர் கொடுக்கும் நெருக்கடிகள், இவற்றை எல்லாம் கடந்து பணத்தை அஜித் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது மீதிக்கதை. அஜித் இந்த படத்தில் கதாநாயகனா இல்லை வில்லனா என்று குழம்பிப் போகும் அளவுக்கு தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
திரைக்கதை: த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, அஞ்சலி என நான்கு நடிகைகளுக்குமே முக்கியமான காட்சிகள் கொடுத்துள்ளார் இயக்குநர். படத்தின் முதல் 10 நிமிடத்தில் சூடு பிடிக்கத் தொடங்கும் திரைக்கதை, அதன் பின்னர் கிளைமாக்ஸ் வரை அதே பரபரப்பு இருக்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தின் கிளாமாக்ஸில் வரும் டிவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட். ஆக்ஷன், நடனம், பைக் ரைட், கார் ரைட் என அஜித் கலக்கி உள்ளது அஜித் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சி. படத்தின் இடைவேளைக்கு முன்னர் வரும் காட்சி தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத காட்சி அமைப்பு.

திருப்தி: படம் முழுக்க அஜித் நிறைந்து வருவது போன்ற திரைக்கதை வடிவமைப்பு அருமை. ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் இருக்கும்போது, அதன் பின்னணி இசை, பாடல்கள், அஜித்தின் ஒவ்வொரு மாஸ் எண்ட்ரிக்கும் கொடுக்கப்பட்ட பின்னணி இசை என பார்த்து பார்த்து இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. மொத்தமாகவே படம் மிரட்டி விட்டுள்ளது. படத்தில் தொய்வு என்று சுட்டிக் காட்டும் அளவுக்கு காட்சி என்று எதுவும் இல்லை என்றே கூறலாம். படம் வெளியானபோதே மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. அந்த வகையில் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் தமிழ் சினிமாவின் ரீ ரிலீஸ் வரலாற்றில் அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், இலங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications










