Amaran Review: அமரன் விமர்சனம்.. ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட்.. சிவகார்த்திகேயன் அடித்த சிக்ஸர்!
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவரை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்த கமல்ஹாசன் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து இப்படியொரு தரமான படத்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த தீபாவளிக்கு சரவெடியாகவும் கிளைமேக்ஸில் சாய் பல்லவி தோளில் சாய்ந்து தூங்கும் அந்த காட்சியில் கண்கலங்கவும் வைத்து விட்டார்.
சிவகார்த்திகேயனை வைத்து காமெடி படங்களைத் தாண்டி கதையம்சம் கொண்ட படங்களையும் கொடுக்க முடியும் என இயக்குநர்கள் புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவரும் ராணுவ வீரராக நடிக்க வேண்டுமென்றால் தனது உடல்மொழியையும் உழைப்பையும் எந்தளவுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டு அத்தனை உழைப்பையும் கொட்டி நடித்துள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜனை மட்டுமின்றி தாய் நாட்டுக்காக வீரமரணம் அடையும் ஒவ்வொரு ராணுவ வீரனையும் அவர்கள் செய்யும் தியாகத்தையும் 'அமரன்' படத்தின் மூலம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி காட்டி ராயல் சல்யூட் அடித்துள்ளார்.
அமரன் கதை: ஜம்மு காஷ்மீரில் 44வது ராஷ்ட்ரியா ரைஃபிள்ஸ் கம்பெனியில் மேஜராக இருந்த முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று தானும் உயிரிழந்தார். அவர் மரணத்திற்குப் பிறகு அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வாங்குவது உள்ளிட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்த அமரன். முகுந்த் வரதராஜனாகவே சிவகார்த்திகேயன் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அவரையே தூக்கிச் சாப்பிடும் வகையில் சாய் பல்லவி ரசிகர்களின் கண்களை குளமாக்கும் அளவுக்கு தனது நடிப்பால் அசத்தி விட்டார்.
படம் எப்படி இருக்கு?: அம்மாவுக்கு தனது மகன் முகுந்த் ராணுவத்தில் சேருவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதே போலத்தான் அவர் காதலிக்கும் இந்து ரெபேக்கா வர்கீஸ் குடும்பத்துக்கு மதப் பிரச்சனையை கடந்து அவர் ஒரு ராணுவ வீரர் என்பதால் தனது மகளை கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார் இந்துவின் அப்பா. அவரும் ராணுவத்தில் டாக்டராக இருந்த நிலையில், அந்த வேலையில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தே சம்மதம் தெரிவிக்கவில்லை. கல்லூரியில் ஃபேஷன் ஷோவுக்காக முகுந்திடம் பயிற்சி பெற வரும் ரெபேக்கா அவருடன் காதல் வலையில் விழுகிறார். காதல் மற்றும் தேசப்பற்று இரண்டையும் கலந்து இந்த படத்தை இயக்குநர் உருவாக்கிய விதம் சிறப்பு. ராணுவ வீரர்கள் மீது ஸ்டோன் பெல்ட்டிங் நடத்துபவர்கள் யார், காஷ்மீரில் எந்த பகுதிகளில் பிரச்சனை. பயங்கரவாதிகளின் நோக்கம் அவர்கள் இப்படி இருக்க என்ன காரணம், இந்த பிரச்சனையை பேசுபவர்கள் பேசி சரி செய்ய வேண்டும் என்கிற ஒற்றை வசனத்தின் மூலம் அரசியல் தலைவர்களை சாடியுள்ளார் இயக்குநர்.
பிளஸ்: ராணுவத்தின் மீது சிறு வயதிலேயே ஈர்ப்பு வரும் நிலையில், சிவகார்த்திகேயன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ராணுவ வீரராக மாறுகிறார். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ராணுவ வீரராக வரும் போர்ஷனை போலவே படம் நெடுகிலும் சிவகார்த்திகேயனின் உடல் உழைப்பு மற்றும் நடிப்பில் தெரியும் முன்னேற்றம் எல்லாம் பார்த்தால் துப்பாக்கி சரியான இடத்தில் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது. நடிகையர் திலகம் படத்தில் ஒரு துளி கண்ணீர் வேண்டுமென்றாலும் கொடுக்கிறேன் என சொல்வது போல சாய் பல்லவி ஒரு ஷாட்டில் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு நடித்துள்ள நடிப்பு எக்ஸ்ட்ராடினரி. அதிலும், இறுதிக்காட்சியில் அவர் அழாமல் ரசிகர்களை அழவைக்கும் இடங்கள் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் தான்.

சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் பேசும் இடங்கள் எல்லாம் முதல் பாதியில் ரசிகர்களை ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. ராணுவ உயரதிகாரியாக வரும் ராகுல் போஸ் (விஸ்வரூபம் வில்லன்) வேறலெவல். சிப்பாய் விக்ரமாக வரும் பாலிவுட் நடிகர் புவன் அரோரா கிளைமேக்ஸ் வரை கலக்குகிறார். இடைவேளை காட்சியில் அஸ்தாஃப் அலியை நெற்றிப் பொட்டில் சிவகார்த்திகேயன் சுடும் காட்சிக்கு தியேட்டரே கைதட்டுகிறது.
மைனஸ்: இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும், இந்திய ராணுவ வீரர்களை ஹீரோக்களாக காட்டும் விதம் குறித்த விமர்சனங்கள் எழலாம். ஆனால், நாட்டுக்காக எல்லையில் அவர்கள் செய்யும் தியாகத்திற்கு இதை விட ஒரு பெரிய நன்றி கடன் செலுத்த முடியாது என்கிற ரீதியில் படம் இருப்பதால், பெரிதாக குறை சொல்ல ஒன்றுமே இல்லை. காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேரும் காட்சிகளும் அதுகுறித்து சிவகார்த்திகேயன் சொல்லும் விஷயமும் சிறப்பு. சில இடங்களில் எடிட்டிங் ஜம்ப் கட் ஆகிறது. இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஆனால், படத்தின் பின்னணி இசை மற்றும் எமோஷனல் கனெக்ட் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் அமரன் படத்திற்கு சென்று பார்த்தால் அழாமல் வரமாட்டீர்கள்.. ஆனால், அது வொர்த்துதான்!


Click it and Unblock the Notifications











