அடேங்கப்பா.. பின்னி எடுத்துட்டாரே சேத்தன்.. 'அன்பே டயானா' படத்தை அலசி ஆராய்ந்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: பாரி இளவழகன் இயக்கி, நடித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைத்துள்ளார். படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படம் குறித்துப் பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயில்வான் சொன்ன ஒன்லைன்: படத்தில் ரோஜா மற்றும் சேத்தன் தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் ரோஜாவுக்கு ஜாதிப் பற்று மிகவும் அதிகம். அதற்கு மிக முக்கியக் காரணம், அவரது கணவர் சேத்தன் ஒரு குடிகாரனாக இருப்பதுதான். சேத்தன் ரயில்வேயில் வேலை செய்தபோதிலும், எப்போதும் குடித்துவிட்டு நண்பர்களுக்குச் செலவு செய்து, குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது தான். இதன் காரணமாக ரோஜா, இட்லிக்கு மாவு விற்று கஷ்டப்பட்டுத் தன் வீட்டை நிர்வகித்து, பிள்ளைகள் இருவரையும் படிக்க வைக்கிறார். இதனால் ரோஜா வீட்டில் ஒரு ஆளுமை மிக்க பெண்ணாக இருக்கிறார்.

படத்தின் கதை: ரோஜாவின் மகளுக்குத் திருமணமாகியும், அவர் வாழாவெட்டியாக வீட்டிலேயே இருக்கிறார். இன்னொரு பக்கம் மகன் பாரி இளவழகன், ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ரம்யா ரங்கநாதனைக் காதலிக்கிறார். இந்த வேறு மதக் காதல் ரோஜாவிற்குத் பிடிக்கவில்லை. ஆனால், இவர்களது காதலுக்குத் தந்தை சேத்தன் ஆதரவாக இருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண் என்பதால் ரம்யா அடிக்கடி சர்ச்சுக்கும், பாரி இளவழகன் கோவிலுக்கும் செல்வதால், இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருகிறது. இறுதியில் ரோஜாவின் எதிர்ப்பையும், தங்களுக்குள் இருக்கும் மதப் பிரச்சனையையும் மீறி இவர்களின் காதல் எப்படி வென்றது என்பதே 'அன்பே டயானா' படத்தின் கதை.

இயல்பான நடிப்பு: இந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன் கதையின் நாயகனாக நன்றாகவே நடித்திருக்கிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு நன்றாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் கதையோடு ஒட்டி யதார்த்தமாக நடித்திருந்தால் அது ரசிகர்களின் இதயத்திற்குள் போய் தைத்திருக்கும். அதேபோல, படத்தின் பல காட்சிகள் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளதால், கதை நம் மனதோடு ஒட்டவில்லை. படத்தின் நாயகி ரம்யா ரங்கநாதன் சுருட்டை முடி, வெள்றை நிறம், துருதுருப்பான பார்வை எனத் தனக்குக் கொடுத்த பாத்திரத்தில் மிக அருமையாக நடித்துள்ளார். அவருக்கு ஏற்றது போலப் பல காட்சிகளை அமைத்து, அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாரி.
சேத்தன் ஸ்கோர் செய்துவிட்டார்: ஆனால், இந்த படத்தில் எல்லாரையும் தாண்டி ஸ்கோர் செய்தது சேத்தன் தான். அடேங்கப்பா.. பின்னி எடுத்துவிட்டாரே என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு பிரமாதம். அவர் குடிக்காமல் இயல்பாகப் பேசுவதும், குடித்துவிட்டுப் பேசுவதும், திடீரென்று சாய்ந்து இறந்தது போல நடித்து ஏமாற்றுவதும் எனத் திரையில் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் சேத்தன் தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டே போகிறார். அவரை ஒரு நடிப்பு அரக்கன் என்றே சொல்லலாம். சேத்தனின் இந்த அசத்தலான நடிப்பிற்காகவே தாராளமாக அன்பே டயானா படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
