Andhagan Review: அந்தகன் விமர்சனம்.. தூள் கிளப்பிய டாப் ஸ்டார் பிரசாந்த்.. கார்த்தி, சிம்ரன் செம!
நடிகர்கள்: பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: தியாகராஜன
சென்னை: நடிகர் பிரசாந்தின் கம்பேக் படம் காலதாமதமான நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு வராது என்கிற பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், தனது மகனுக்காக சிறப்பான கதையின் ரீமேக் ரைட்ஸை வாங்கியது மட்டுமின்றி அந்த படத்திற்கு எந்தளவுக்கு நியாயம் செய்ய வேண்டுமோ கதை, திரைக்கதை மற்றும் மேக்கிங் என அனைத்திலும் அசத்தியிருப்பது இயக்குநர் தியாகராஜன் தான்.
90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகனாக வலம் வந்த பிரசாந்த் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், இந்தியில் 2018ம் ஆண்டு வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் மூலம் அவருக்கு நல்லதொரு கம்பேக் கிடைக்கும் என அவருடைய அப்பா எதிர்பார்த்ததை போலவே இந்த படம் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தகன் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
அந்தகன் கதை: அந்தாதூன் படத்தை பார்த்தவர்களுக்கு படத்தின் கதை மற்றும் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் என எல்லாமே தெரிந்து இருக்கும். ஆனால், படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பாய்லர் இல்லாத கதையாக அந்தகன் கதையை சொல்ல வேண்டும் என்றால், கண் தெரியாதவர் போல நடிக்கும் கிரிஷ் (பிரசாந்த்) நவரச நடிகர் கார்த்திக்கை அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் சிம்ரன் கொலை செய்வதை பார்த்து விட அதற்கு மேல் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா? இல்லையா? அவருடைய லட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
நடிகர்கள் தான் பலமே: பிரசாந்த்துக்கு இணையாக சிம்ரன், கார்த்தி, சமுத்திரகனி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு என நடிகர்களை படத்தில் கொண்டு வந்த இடத்திலேயே இயக்குநர் தியாகராஜன் பாதி வேலையை முடித்து விட்டார் என்று சொல்லலாம். ஏற்கனவே அந்தாதூன் கதை இருக்கிறது. இந்த நடிகர்களை வைத்து அதை சரியாக படம் பிடித்தாலே படம் நல்லா வந்து விடும் என்கிற நம்பிக்கையில் எடுத்த முயற்சி நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
படம் எப்படி இருக்கு?: கண் தெரியாத நபராக நடித்து அனுதாபத்தை பெற்று எப்படியாவது லண்டனுக்கு சென்று பியானோ கலைஞராக மாற வேண்டும் என நினைக்கும் பிரசாந்துக்கு ஒரு விபத்து மூலம் பிரியா ஆனந்த் தோழியாக மாறுகிறார். அவருடைய பாரில் பிரசாந்த் பியானோ வாசிக்க நவரச நாயகனாகவே படத்தில் வரும் நடிகர் கார்த்திக் தனது திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரசாந்தை இசையமைக்க வீட்டுக்கு வரச் சொல்கிறார். கார்த்திக்கின் வீட்டுக்குச் செல்லும் பிரசாந்துக்கு அங்கே சிம்ரன் மற்றும் போலீஸ் அதிகாரியான சமுத்திரகனியால் கார்த்திக் கொல்லப்பட்டுக் கிடப்பதை பார்த்து ஷாக் ஆகிறார்.
இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்க நினைத்து காவல் நிலையம் செல்ல அங்கே இன்ஸ்பெக்டராக சமுத்திரகனி இருக்க பிரசாந்துக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. பிரசாந்துக்கு கண் தெரியுமா? தெரியாதா? என சமுத்திரகனியும் சிம்ரனும் சோதனை செய்கின்றனர். பிரசாந்துக்கு உண்மையிலேயே கண் தெரியாமல் போகும் வேலையை சிம்ரன் பார்த்து விடுகிறார். கண் தெரியாமல் போகும் பிரசாந்த் கிட்னி திருடும் கும்பலாக வரும் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி மற்றும் யோகி பாபுவிடம் மாட்டிக் கொள்ள கடைசியில் அந்த கும்பலிடம் எப்படி தப்பித்தார். சிம்ரனை பழி வாங்கினாரா? லண்டனுக்கு சென்றாரா? அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்ததா? என ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் படம் பரபரப்பாக உள்ளது.

பிளஸ்: இயக்குநர் தியாகராஜனின் இயக்கம் மற்றும் பிரசாந்த் மற்றும் சிம்ரனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் கார்த்தி வரும் காட்சிகள், சமுத்திரகனி மற்றும் வனிதா விஜயகுமார் உடனான காட்சிகள், கண் தெரியாத நபராக பிரசாந்த் நடிப்பது, கிட்னி திருடும் டாக்டராக வரும் கே.எஸ். ரவிக்குமார் கும்பலிடம் மாட்டிக் கொள்வது என அந்தாதூன் ரீமேக்கை கச்சிதமாக படமாக்கியுள்ளனர். முதல் பாதியில் சில இடங்களில் காமெடி காட்சிகளும் வொர்க்கவுட் ஆகியுள்ளன. பிரசாந்தின் சட்டை இல்லாத உடம்பை பார்த்தால் 50 வயதை கடந்தும் என்ன மனுஷன் இப்படி இருக்காரே என நினைக்கத் தூண்டுகிறது. சிம்ரனின் நடிப்பு ரொம்ப காலம் கழித்து வாலி படத்தில் பார்த்ததை போல மிரட்டலாக உள்ளது.
மைனஸ்: படத்தின் ஆரம்பத்தில் லேக் அடித்து விடும் என சில எடிட்கள் செய்யப்பட்டது ஜம்ப் கட் காட்சிகள் போலத் தெரிகின்றன. பாடல்கள் படத்திற்கு பலமாக அமையவில்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் படத்தை முடித்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்ததே தவிர பல இடங்களில் பல கேள்விகளுடன் படம் முடிவடைந்ததை போலவே அப்படியே முடிந்து விட்டது மைனஸ் ஆக தெரிந்தாலும், பிரசாந்துக்கு இது நிச்சயம் கம்பேக் படம் தான். நிச்சயம் போரடிக்காமல் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம். சில குறைகளை இன்னமும் சரி செய்திருந்தால் பிளாக்பஸ்டர் படமாகவே மாறியிருக்கும்.


Click it and Unblock the Notifications











