Anju Paisa Keni Review: குடும்பத்தையே காவு வாங்கும் கிணறு.. அஞ்சு பைசா கேணி மினி வெப்தொடர் விமர்சனம்
சென்னை: சினிமா பிரியர்களுக்குத் தீனி போடும் வகையில் தற்போதைய டிஜிட்டல் ட்ரெண்டில் புது வரவாக வந்து இருப்பதுதான் "வெர்டிகல் மைக்ரோ சீரிஸ்". மொபைல் திரைக்கு ஏற்ப, வெறும் ஒரு நிமிடத்திற்குள் ஒரு எபிசோடை முடித்து அடுத்த எபிசோடிற்குள் நம்மை அழைத்து சென்றுவிடும். அந்த வகையில், பாலு போஸ் இயக்கத்தில், தேனி முருகன் மற்றும் பலர் நடித்து, 'கதை ஷார்ட்ஸ்' ஆப்பில் வெளியாகியுள்ள "அஞ்சு பைசா கேணி" என்கிற 30 எபிசோட் கொண்ட மினி த்ரில்லர் தொடர் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
அஞ்சு பைசா கேணி: தண்ணீர் பஞ்சம் நிலவும் ஒரு கிராமம். மக்கள் குடி தண்ணீருக்காக இரண்டு ஊர் தள்ளி அலைந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். ஆனால், அதே கிராமத்தில் ஒரு கிணத்தில் தழும்பத் தழும்பத் தண்ணீர் இருந்தும் ஊர் மக்கள் ஒரு சொட்டு நீர் கூட எடுக்க அஞ்சும் ஒரு மர்மமான கிணறுதான் 'அஞ்சு பைசா கேணி'. அதற்கு காரணம், அந்த கிணற்றுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்திகளும், பரம்பரை சாபமும்தான்.

பேய் கிணறு: அந்த கிணற்றின் சொந்தக்காரரான குமரேசனுக்கு தனவள்ளி, வள்ளி என இரண்டு மனைவிகள். முதல் எபிசோடே, முதல் மனைவி தனவள்ளி அந்த கேணியின் மீது நின்று அழுதுகொண்டே உள்ளே விழுவதில் இருந்து தொடங்குகிறது. ஊர் மக்கள் அவளைக் காப்பாற்றினாலும், அன்று முதல் அர்த்தராத்திரியில் தனவள்ளி அலறுவதும் கத்துவதுமாக இருக்கிறாள்.
தனவள்ளியின் சாபம்: பூசாரியை வைத்து சாமியாடிப் பார்த்தபோது, அஞ்சு பைசா கேணியில் இருக்கும் பல பேய்கள் தனவள்ளி மீது ஏறியிருக்கிறது. இன்று ராத்திரி அவளை வெளியே விடக்கூடாது என்கிறார். பயந்துபோன கணவன் குமரேசன், தனவள்ளியை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுகிறான். எனக்கு ஒன்னும் இல்லை, பயமா இருக்கு கதவைத் திறங்க என்று தனவள்ளி கதறியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால், தனவள்ளி, தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொள்கிறாள். சாகும்போது, இந்த குடும்பத்துல ஒருத்தரையும் நான் உயிரோட விடமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டுத் துடிதுடித்து இறக்கிறாள்.

48 நாள் சடங்கு: விஷயம் கேள்விப்பட்டு ஓடிவரும் அவளது அண்ணன் ஜெயக்கொடி, இறுதிச்சடங்குகளைச் செய்கிறார். தனவள்ளி கெட்ட நேரத்தில் இறந்ததால், அடுத்த 48 நாட்களுக்கு இந்த குடும்பத்தில் யாரும் எந்த விசேஷத்திற்கும் போகக்கூடாது, கெட்டதுக்கும் போகக்கூடாது என்றார். இதோடு மட்டுமில்லாமல் தனவள்ளி போட்டோ முன்னால் ஏற்றிய விளக்கு 48 நாட்களுக்கு அணையவே கூடாது அப்படி அணைந்தால், குடும்பத்தில் அடுத்த உயிர் பலி வரும் என்கிறார் பூசாரி.
அமானுஷ்யக் கொலைகளா?: விளக்கு அணையாமல் குடும்பமே நடுநடுங்கிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போதே, விளக்கு அணைந்து குமரேசனின் தம்பி மூச்சுத்திணறி மர்மமான முறையில் இறக்கிறான். இப்படி அந்த குடும்பத்தில் அடுத்தடுத்து துர்மரணங்கள் நிகழ, பேயாக மாறிய தனவள்ளிதான் பழிவாங்குகிறாள் என்று ஊர் மக்கள் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைக்கிறார்கள். உண்மையிலேயே தொடர் மரணங்களுக்குப் பின்னால் இருப்பது பேயா? அல்லது பேயின் பெயரைப் பயன்படுத்தி யாரோ ஆடும் ஆட்டம்? அஞ்சு பைசா கேணியின் உண்மையான ரகசியம் என்ன? என்பதைத்தான் மீதமுள்ள எபிசோடுகள் விறுவிறுப்பாக செல்கிறது.
ஒரு நிமிட' மேஜிக்: ஒவ்வொரு எபிசோடும் ஒரு நிமிடத்தில் சட்டென்று முடிந்துவிடுவதால், அடுத்தடுத்த எபிசோடுகளைப் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. கிரைம், த்ரில்லர் மற்றும் பேய் கதைகளை விரும்பும் இந்த காலத்து இளசுகளுக்கு, இந்த 'மைக்ரோ சீரிஸ்' வடிவம் ஒரு புதுவிதமான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒரு அழகான கேணியை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் குறையாமல் 30 எபிசோடுகளையும் நச்சுனு செதுக்கியுள்ளார் இயக்குனர் பாலு போஸ்.


Click it and Unblock the Notifications