Anora Review: பாலியல் தொழிலாளியை திருமணம் செய்யும் கோடீஸ்வரன்.. எல்லாமே 18 பிளஸ்.. 5 ஆஸ்கர் ஏன்?
நடிகர்கள்: மைக்கி மேடிசன், மார்க் ஐடல்ஸ்டைன்
இசை: மேத்யூ ஹெரான் ஸ்மித்
இயக்கம்: ஷான் பேக்கர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஷான் பேக்கர் இயக்கத்தில் மைக்கி மேடிசன், மார்க் ஐடல்ஸ்டைன், யூர்லி போரிசோவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் தான் அனோரா. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்திய ரசிகர்கள் காண வரும் மார்ச் 17ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை என மொத்தம் 5 விருதுகளை இந்த படம் வென்றது.
படத்தின் இயக்குநர் ஷான் பேக்கர் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங் என 3 ஆஸ்கர் விருதுகளை 97வது அகாடமி விருதுகள் விழா நிகழ்ச்சியில் வென்றார். தி சப்ஸ்டன்ஸ் படத்துக்காக சிறந்த நடிகை விருது டெமி மூருக்கு செல்லும் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை ஓவர்டேக் செய்துவிட்டு அனோராவாக நடித்த மைக்கி மேடிசன் ஆஸ்கர் விருதை வென்றார்.

ஆஸ்கர் விருது விழாவுக்குப் பிறகு உலகளவில் அனோரா படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

அனோரா கதை: செக்ஸ் வொர்க்கர் அனோராவை (மைக்கி மேடிசன்) கோடீஸ்வரனின் மகன் இவான் (மார்க் ஐடல்ஸ்டைன்) திருமணம் செய்துக் கொண்ட பின்னர் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது. ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரரின் மகனான கதையின் நாயகன் அமெரிக்காவில் படிப்பதற்காக வந்த இடத்தில் பணக்கார பசங்க செய்யும் அத்தனை அட்டகாசங்களையும் செய்கிறார். அப்படித்தான் பார் ஒன்றில் ஸ்ட்ரிப்பராக பணத்துக்காக வயது வித்தியாசமின்றி அனைவருடனும் படுக்கும் அனோராவை ஒருநாள் சந்திக்கிறான். அனோராவை அவனுக்கு பிடித்து விட தினமும் அவளுடன் நேரத்தை செலவிடுகிறான். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணமும் செய்துக் கொள்கின்றனர். ஆனால், கோடீஸ்வரனின் மகனான இவான் திருமணம் செய்துக் கொண்டது ஒரு பாலியல் தொழிலாளியை என்பதை அறிந்த அவனது அம்மா எதிர்ப்பு தெரிவிக்க கடைசியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: 5 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் என்றால் எப்படி இருக்கும் என்று பாருங்கள். தொழில்நுட்ப ரீதியாக அத்தனை அம்சங்களும் அட்டகாசமாக உள்ளது. அதைவிட நடிகர்களின் நடிப்பு குறிப்பாக அனோராவாக நடித்த மைக்கி மேடிசனின் நடிப்பு சிறப்பு. படம் முழுக்க அவர் ஹீரோவுடன் உடலுறவு கொள்ளும் காட்சிகள் அப்படியே 18 பிளஸ் ஆக உள்ளன. டெமி மூர் மற்றும் மார்கரேட் குவாலி இருவரும் தி சப்ஸ்டன்ஸ் படத்தில் மாற்றி மாற்றி நிர்வாணமாக காட்சி தந்தாலும் இருவரையும் ஓவர்டேக் செய்து இவருடைய பலான காட்சிகள் மூலமாக ஆஸ்கர் விருதையே தட்டித் தூக்கிவிட்டார். சமூகத்தில் பாலியல் தொழிலாளிகளை சக மனுஷியாக பார்ப்பது கிடையாது என்கிற பார்வையுடன் இயக்குநர் கிளைமேக்ஸை முடித்த விதத்தில் தான் இந்த படம் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது.

பிளஸ்: இளைஞர்களை கவரும் அத்தனை விஷயங்களும் படத்தில் திரைக்கதையாகவும் காட்சிகளாகவும் வைத்து இயக்குநர் ஷான் பேக்கர் இந்த காமெடி படத்தை சூப்பர் ஹிட் படமாகவும் ஆஸ்கர் விருதுகளை அள்ளும் படமாகவும் எடுத்துள்ளார். பணக்காரனை திருமணம் செய்துக் கொண்டால் பாலியல் தொழில் பண்ண வேண்டாம் என்றும் வாழ்நாள் முழுவதும் கோடீஸ்வரியாக வாழலாம் என பணத்தின் மீது நாட்டம் கொண்ட ஹீரோயின் கடைசியில் பணக்காரர்கள் தன்னை ஒரு கட்டத்தில் அம்போ என விட்டு விடுவார்கள் என்பதை புரிந்துக் கொண்ட பின்னர் அவருக்குள் எழும் அந்த மாற்றம் மைக்கி மேடிசன் நடிப்பு மூலமும் அவரை பிடிக்க வரும் அடியாள் கதாபாத்திரமான இகோர் கதாபாத்திரம் மூலமாக வைத்தது பெரிய பிளஸ்.
மைனஸ்: பணக்கார பையனை ஏழை பெண் காதலித்தால் குடும்பம் ஏற்காது என்கிற படங்கள் பல தமிழ் சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் அதிகளவில் பார்த்து இருக்கிறோம். பாலியல் தொழிலாளியை பணக்கார குடும்பம் ஏற்க மறுக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. கிளைமேக்ஸில் திடீரென ஏற்படும் ஹீரோயினின் மணமாற்றம் எல்லாம் அந்த தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் எந்தளவுக்கு சமூகத்தை புரிந்துக் கொண்டிருப்பார் என்கிற தெளிவு இல்லாமல் இருப்பது ஏன் என்கிற கேள்விகளையும் எழுப்பத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











