Ant-Man and the Wasp: Quantumania Review: எறும்பு ஊர காங்கும் தேயும்.. ஆன்ட் மேன் விமர்சனம்!
நடிகர்கள்: பால் ராட், எவாஞ்சலின் லில்லி, ஜானதன் மேஜர்ஸ்
இசை: கிறிஸ்டோப் பெக்
இயக்கம்: பீட்டன் ரீட்
சென்னை: மார்வெல் திரைப்படங்கள் 5வது Phaseஐ ஆரம்பித்து இனி எல்லாமே மல்டிவெர்ஸ் மசால் வடை தான் என சுட ஆரம்பித்துள்ளனர். நூல் கண்டே வந்தாலும் ரசிகர்கள் அதனை தின்னத்தான் வேண்டும் என எடுத்து வருவது ஏன் தான் என புரியவில்லை.
சில ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களின் கதை ஏன் இன்னமும் காமிக்ஸ் தனம் மாறாமல் இருக்கிறது என்கிற கேள்வியைத்தான் இந்த ஆன்ட் மேன் திரைப்படமும் எழுப்புகிறது. மார்வெல் காமிக்ஸ் ஹிட் அடித்திருந்தாலும், படமாக வரும் போது பல இடங்களில் ஆன்ட் மேன் திரைப்படம் நம்முடைய பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.
லோகி வெப்சீரிஸில் பிரம்மாண்டமாக காட்டப்பட்ட காங் கதாபாத்திரம் இந்த படத்தில் காமெடி கதாபாத்திரமாக கிளைமேக்ஸில் மாறுவதை பார்த்து சிர்ப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை.. வாங்க ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப்: குவாண்டமேனியா முழு விமர்சனத்துக்குள் செல்வோம்..
அப்பா பொண்ணு பாசக் கதை தான்
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஆரம்பித்து ஆன்ட் மேன், அவதார் என எல்லா இடத்திலும் அதே அப்பா பொண்ணு பாசக் கதை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹாலிவுட் படங்களும் வர வர பாலிவுட் படங்களை போல தென்னிந்திய படங்களின் கதைகளை சுட்டு படம் பண்றாங்களோ என்கிற டவுட் ஹெவியாகவே கிளம்புகிறது. மகளின் ஆர்வக்கோளாறால் குவாண்டம் ரியலத்துக்குள் குடும்பமே சிக்கிக் கொள்ள, வில்லன் காங்கிடம் சிக்கும் மகளை ஆன்ட் மேன் தனது மனைவி வாஸ்ப் உடன் சேர்ந்து எப்படி மீட்டார் என்பது தான் இந்த படத்தின் கதை.
பால் ராட் பிரம்மாதம்
கேப்டன் அமெரிக்காவுடன் சேர்ந்து உலகத்தை காப்பாற்ற சண்டைப் போட்டாலும் சாதாரண மனிதனாக வாழும் ஆன்ட் மேன் ஹீரோ பால் ராடை சிலர் ஸ்பைடர் மேன் என நினைத்துக் கொண்டாலும், அதை பற்றிய கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறார். பெரிய ஆக்ஷன் பிளாக் மாட்டவில்லையே, வாழ்க்கை போரடிக்குதே நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மகள் கேஸி செய்யும் ஆர்வக்கோளாறான விஷயத்தால் ஆன்ட் மேன், வாஸ்ப் உள்பட ஒட்டுமொத்த குடும்பமும் குவாண்டம் ரியலத்துக்குள் சிக்குகிறது.
குவண்டம் ரியலம்
குவாண்டம் ரியலத்துக்குள் காங்கை சிக்க வைத்து விட்டு ஜானட் தப்பித்த நிலையில், அந்த இடத்திலேயே மிகப்பெரிய ஒரு ராஜாங்கத்தை காங் உருவாக்கி ஆட்சி செய்து வருகிறார். ஆன்ட் மேன் மகள் கொடுத்த சிக்னலை வைத்தே காங் அந்த குடும்பத்தை இந்த உலகத்துக்குள் கொண்டு வருகிறார். அங்கே மகளை பகடை காயாக மாற்றி ஆன்ட் மேன் மூலமாக தனக்கு வேண்டிய விஷயத்தை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து வெளியேற முயற்சிக்கிறார் காங். காங்கின் கோரிக்கையை ஏற்று பல உலகங்களை அழிக்க அவருக்கு உதவியாக ஆன்ட் மேன் இருந்தாரா? அல்லது அவரது மகளையும் உலகத்தையும் காப்பாற்றினாரா என்பது தான் ஆன்ட் மேன் குவாண்டமானியா படத்தின் கதை.
காமெடிக்கு பஞ்சமில்லை
கில்லர் மிஷன் மொடாக் (MODAK) எனும் மிஷின் பாதி மனிதன் பாதி கலந்து செய்த உருவமாக ஆன்ட் மேனின் பழைய எதிரி வருகிறார். கில்லர் மிஷினை பார்த்து பயம் வருவதற்கு பதில் உருளைக்கிழங்கு பாரு என்கிற குழந்தைகளுக்கு சோறு ஊட்டுகிற அனிமேஷன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. உடம்பில் இருக்கும் ஓட்டைகளை வைத்து ரப்பர் மனிதன் அந்த உலகத்தில் செய்யும் டபுள் மீனிங் காமெடி சிரிக்க வைக்கிறது. எறும்பா இருந்தாலும் இரும்பா இருக்கணும், குட்டியா இருந்தாலும் வெட்டியா இருக்கக் கூடாது போன்ற பஞ்ச் வசனங்களும் அடிக்கடி வந்து சிரிப்பலைகளை எழுப்புகின்றன.
பிளஸ்
நடிகர்களை பொறுத்தவரையில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் கலக்கி உள்ளனர். கேஸியாக நடித்துள்ள கேத்ரின் நியூட்டன், ஆன்ட் மேன் - பால் ராட், வாஸ்ப் - எவாஞ்சலின் லில்லி, ஜானட் - மிச்செல்லி பிஃபர், காங் - ஜானதன் மேஜர்ஸ் என அனைவருமே படத்திற்கு பலம் தான். அந்த குவாண்டத்திற்குள் பால் ராட் செல்லும் போது சிந்தனை சிதறல்களாக பல ஆன்ட் மேன்கள் உருவாகும் ஒரு காட்சிக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். படத்தில் புதுமையான விஷயமாகவும் ரசிகர்களையும் கவரும் விஷயமாகவும் அந்த காட்சி கவனம் ஈர்க்கிறது. கடைசியில் காங்கை காலி பண்ண வர அந்த எறும்புக் கூட்டம் சீனும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
மைனஸ்
காங் மற்றும் ஜானட் இருவரும் அந்த குவாண்டம் உலகத்திற்குள் சிக்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள், மகளை பிணையக் கைதியாக பிடித்து வைத்து விட்டு காங் ஹீரோவுடன் டீல் பேசும் காட்சி என பல படங்களில் பார்த்து பார்த்து சளித்துப் போன திரைக்கதை பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. அவதார் படங்கள் முதல் நம்ம ஊர் ஆர்ஆர்ஆர் படம் வரைக்கும் அசத்தல் சிஜியை பார்த்து விட்டு இந்த படத்தை பார்த்தால் விஷுவல் எஃபெக்ட்ஸ் ரொம்பவே சுமார் ரகமாக உள்ளது மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. கடைசியில் வரும் காங்கின் போஸ்ட் கிரெடிட் சீன் ஒரு காங் அட்டகாசத்தையே சமாளிக்க முடியவில்லை. என்னங்கடா இது ஒரு கோடி காங்கா.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட் என்றே கேட்க வைக்கிறது. குழந்தைகளுடன் சென்று பார்த்தால் ஒரு முறை படத்தை என்ஜாய் பண்ணலாம்! அடுத்த மார்வெல் படத்தில் சந்திக்கலாம்!


Click it and Unblock the Notifications











