ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இதுதான்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அவருடன் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், அனகா, அதுல்யா என பலர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட கால ஹீரோவான ஆர்யாவுக்கு கடைசியாக சார்பட்டா பரம்பரை படம் ஹிட்டானது. அதுவும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆனது. தியேட்டரில் வெளியாகி அவரது படம் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே எப்படியாவது ஒரு தியேட்டரிக்கல் ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார். அதனையடுத்து இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருடன் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

நேற்று ரிலீஸான படம்: படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டி வைத்தது. அந்த ஹைப்போடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஓரளவுக்கு திருப்தி கொடுத்தது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் மொக்கையாக இல்லாமல் ஒரு படத்தை இயக்குநர் கொடுத்திருக்கிறார். ஆர்யாவின் உழைப்பு அபாரமாக இருக்கிறது என்றும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்தார்கள். அதேசமயம் கொஞ்சம் திரைக்கதையில் ஆங்காங்கே சொதப்பல்களும் தென்பட்டன.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், " முதல் பாதியை பொறுத்தவரை நிறைய கேரக்டர்கள் இருப்பதால் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள். என்ன நோக்கம் என்று காண்பிக்கிறார்கள். முதல் பாதி ஓரளவுக்கு ஓகேதான். இரண்டாவது பாதியில் எல்லாம் கதையில் சஸ்பென்ஸ் வைக்கிறேன், ட்விஸ்ட் வைக்கிறேன் பாரு என அளவுக்கு அதிகமாக வைத்து கதையையே குழப்பி வைத்திருக்கிறார்கள். தங்கை கேரக்டரை அறிமுகப்படுத்தும்போதே பல் இழித்துவிட்டது. கடைசியில் வைத்திருக்கும் ட்விஸ்ட் எல்லாம் தேவையே இல்லாதது.
இந்த மாதிரியான படங்களை பார்த்துவிட்டு வெளியே வரும்போது இந்தியாவுக்காக இராணுவ வீரர்கள், உளவாளிகள் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்கள் என தோன்றும். ஆனால் இவர்கள் நம் ஏஜென்ட்டுகளை டபுள் ஏஜெண்ட்டுக்களாக காண்பித்திருக்கிறார்கள். மேலும் ஏஜென்ட்டுகளை பார்த்து சிரிக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். ஹாலிவுட் படம் மாதிரி ஸ்பை திரில்லர் எடுக்க இவர்கள் கிளம்பியது தவறு இல்லை. அது ஈஸியான வழியும்கூட. ஹாலிவுட்டில் அது மாதிரி ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதை பார்த்து ஒரு கதையை எழுதியிருக்கலாம்.
குறைந்தது இரண்டு ஜெய்சங்கர் படங்களாவது பார்த்திருக்க வேண்டும். இதில் ஹீரோ, வில்லனுக்கு ஏன் குடும்ப பின்னணி. ஹீரோயிசம் என்கிற பெயரில் ஹீரோ செய்வதெல்லாம் அபத்தம். ஸ்பை த்ரில்லர் என்கிற ஆர்வக்கோளாறில் ஏதோ ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். திரைக்கதையில் சொதப்பிவிட்டார். பல க்ரிஞ்ச் சீன்கள் படத்தையே காலி செய்துவிட்டன. வயிறு முட்ட பொங்கலை தின்றுவிட்டு படத்தை பார்ப்பது மாதிரிதான் இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications
