Asvins Review: டெக்னிக்கலாக மிரட்டும் அஸ்வின்ஸ்... படம் எப்படி இருக்குன்னு தெரியுமா..?
தயாரிப்பு : ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா
இயக்கம் : தருண் தேஜா
இசை : விஜய் சித்தார்த்
நடிப்பு : வசந்த் ரவி, விமலா ராமன்
ரன்னிங் டைம் : 1 மணி நேரம் 51 நிமிடம்
சென்னை: வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரித்துள்ள இந்தப் படத்தை தருண் தேஜா இயக்கியுள்ளார்.
தமிழில் முதன்முறையாக பிளாக் டூரிசம் என்ற திகிலான கதைக்களத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
வசந்த் ரவியுடன் விமலா ராமன் உள்ளிட்ட சிலர் நடித்துள்ள இந்தப் படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

திகிலில் உறைய வைக்கும் அஸ்வின்ஸ்: லண்டனில் உள்ள தீவு ஒன்றில் ஆடம்பரமான மேன்ஷன் உள்ளது. அதில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரியா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தகவல். அதோடு அவரது சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த மேன்ஷனில் இருக்கும் அமானுஷ்யங்கள் தான் செய்திகள் வெளியாகின்றன.
அதனால் இதுகுறித்து முழு விவரங்களை ஒரு வீடியோ படமாக எடுப்பதற்காக வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கின்றனர். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களும், அதன் பின்னணியும் தான் அஸ்வின்ஸ் படத்தின் முழு கதை. இதில் வரும் பிளாஷ்பேக்கில் புராணத்தில் உள்ள அஸ்வின் கடவுளர்கள் பற்றிய சிறு கதையும் பின்னணியாக இடம்பெறுகிறது.
முழுக்க ஹாரர் பின்னணியில் காட்சிக்கு காட்சி திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள அஸ்வின்ஸ், தியேட்டர் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கிறது. டெக்னிக்கலாக ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு படைப்பாக அஸ்வின்ஸ் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹீரோ வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அதேபோல் தன்னுடன் வந்தவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என தெரிந்துகொள்ளும் காட்சியில் ரசிகர்களையும் திகிலடைய செய்கிறார்.
வசந்த் ரவி தவிர சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். மேன்ஷனுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல், படம் முடிந்த பிறகும் ரசிகர்களின் காதுகளில் நிச்சயம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், தனது கேரக்டரை மொத்தமாக உள்வாங்கி நடித்துள்ளார். இறுதிக் காட்சியில் விமலா ராமனின் நடிப்பு ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கிறது.
வசந்த் ரவி, விமலா ராமன் குழுவினருக்குப் போட்டியாக அஸ்வின்ஸ் படத்தின் டெக்னிக்கல் டீமும் அசுரத்தனமாக உழைத்துள்ளது. புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் திகில் காட்சிகளும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் எனலாம். ஏ.எம். எட்வின் சகேவின் ஒளிப்பதிவு, விஜய் சித்தார்த்தின் பின்னணி இசை, சச்சின், ஹரி ஆகியோரின் சவுண்ட் மிக்ஸிங், வெங்கட் ராஜனின் எடிட்டிங் எல்லாம் ரசிகர்களுக்கு ரியலான திகில் அனுபவத்தை கொடுத்துள்ளது.
குறும்படமாக எடுத்த கதையை அஸ்வின்ஸ் என்ற டைட்டிலில் முழு நீளப் படமாக இயக்கி மிரட்டியுள்ளார் தருண் தேஜா. காட்சிகள் மட்டும் என்றில்லாமல் ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிகர்கள் கவனிக்கும் வகையில் படத்தில் வைத்துள்ளது அவரது தனிச் சிறப்பு. அஸ்வினர்கள் கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான திகில் திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தருண் தேஜாவுக்கு பாராட்டுகள். அஸ்வின்ஸ் எளிமையான திகில் கதையாக இருந்தாலும், அதனை சரியான விதத்தில் திரையில் கொண்டு வந்துள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











