»   »  அழகிய தமிழ் மகன் - விமர்சனம்

அழகிய தமிழ் மகன் - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
நடிப்பு - விஜய், ஷ்ரியா, நமீதா, ஆசிஷ் வித்யார்த்தி.
இயக்கம் - பரதன்.
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.
தயாரிப்பு - ஸ்வர்கசித்ரா அப்பச்சன்.

விஜய் முதல் முறையாக 2 வேடங்களில் நடித்து வெளியான அழகிய தமிழ் மகன், விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்து விட்டது.

எந்தவித லாஜிக்கும் இல்லாமல் ஜாலியாக படம் பார்த்து என்ஜாய் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அழகிய தமிழ் மகன், அருமையான விருந்து.

விஜய் நடித்துள்ள வித்தியாசமான படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தில் சில புதிய விஷயங்களையும் விஜய் முயற்சித்துள்ளார். படு ஸ்மார்ட் ஆகத் தோன்றும் விஜய், ரசிகர்களுக்கு குஷியூட்டுகிறார்.

படம் முழுக்க அவர் செய்யும் காமெடியும், ஸ்டைல்களும் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமைந்துள்ளது. அறிமுக இயக்குநர் பரதன், முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். விஜய்யின் திறமை, பலம், செல்வாக்கு ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ப கதையை கொண்டு சென்றுள்ளார்.

படத்தில் விஜய்தான் ஹீரோ, ஆனால் வில்லனும் அவர்தான் என்று தெரிய வரும்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

கதை இதுதான்.

பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கும் விஜய் (குரு) ஒரு தடகள வீரர். செக்ஸ் பாம் ஷகீலாவின் வீட்டில் (நடிகையாகவே இப்படத்தில் ஷகீலா வருகிறார்) நண்பர்கள் சந்தானம், சத்யனுடன் குடியிருக்கிறார் குரு.

பெரும் பிசினஸ் புள்ளியான ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் அபிநயா (ஷ்ரியா). அபினயாவும், குருவும் தற்செயலாக சந்திக்கின்றனர். காதலில் விழுகின்றனர். இந்தக் காதலை இருவரது குடும்பம் கொஞ்சமும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் குருவுக்குள் ஒரு புதிய மாற்றம் ஏற்படுகிறது. வருங்காலத்தில் நடக்கப் போவதை முன் கூட்டியே அறியும் சக்தி கிடைக்கிறது. டாக்டர்களிடம் போய் கேட்கிறார். அதற்கு அவர்கள், எதிர்காலத்தை அறியும் ஈ.எஸ்.பி. சக்தி உங்களுக்கு உள்ளது என்கின்றனர்.

குருவுக்கும், அபினயாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. ஈஎஸ்பி சக்தி ஏற்படுத்தும் குழப்பத்தால், நிச்சயதார்த்தத்திற்கு முன்பு அபினயாவைப் பிரிந்து மும்பைக்குப் போகிறார் குரு.

அங்கு தன்னைப் போலவே இருக்கும் பிரசாத்தை (இவர் வில்லன் விஜய்)பார்க்கிறார். அவரை சந்திக்கும் முன்பு விபத்தில் சிக்கி காயமடைகிறார்.

இந்த நிலையில் பிரசாத், சென்னைக்கு வருகிறார். அவரைப் பார்ப்போர் குரு என்று நினைத்து விடுகின்றனர். படு ஜாலியான, கவலை இல்லாத மனிதனான பிரசாத், பணத்துக்காக எதையும் செய்யக் கூடிய குணமுடையவர்.

பிரசாத்தைப் பார்க்கும் அபினயா, அவரைக் குரு என்று நினைத்து விடுகிறார். தனது வீட்டுக்குக் கூட்டி வருகிறார்.

ஷ்ரியாவின் பணச் செழிப்பைப் பார்க்கும் பிரசாத், அதை அபகரிக்க, ஷ்ரியாவைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது. இந்த நிலையில் குரு சென்னைக்குப் பறந்து வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

படு லாவகமாக இந்த இரட்டை வேடக் கதையை கையாண்டுள்ளார் விஜய். டான்ஸ், காமெடி ஆகியவற்றில் வெளுத்துக் கட்டியுள்ளார். டைட்டில் பாடலில் நடனத்தில் அசத்தியுள்ளார்.

வில்லன் வேடத்திலும் விஜய் வித்தியாசம் காட்டி அசத்தியுள்ளார். படத்தின் பெரும் பலமே விஜய்தான்.

ஷ்ரியா இப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். கவர்ச்சி அதிகம் சிந்தாமல் நடிக்கவும் செய்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் பின்னியுள்ளார்.

நமீதாவைப் பற்றி சொல்வதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு பாடலில் கவர்ச்சி களேபரம் செய்து ரசிகர்களுக்கு சூடேற்றுகிறார்.

சந்தானத்தின் காமெடி படு ஜோர். பின்னிப் பெடலெடுத்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கேற்ற வகையில் பாடல்களுக்கு ட்யூன் போட்டு அசத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசையிலும் பிரமிக்க வைத்துள்ளார்.

மதுரைக்கு போகாதடி, நீ மர்லின் மன்ரோ ஆகிய பாடல்கள் தாளம் போட வைத்துள்ளன. குறிப்பாக மதுரைக்குப் போகாதடி சூப்பர் ஹிட் ஆகி விட்டது. நீ மர்லின் மன்ரோ பாட்டுக்கு நமீதா கவர்ச்சிக் குளியல் நடத்தியுள்ளார். பல இடங்களில் சென்சார்காரர்களின் கத்திரி புகுந்து விளையாடியுள்ளதைப் பார்க்க முடிகிறது.

ரீமிக்ஸ் ஆக இடம் பெற்றுள்ள சிவாஜியின் சூப்பர் ஹிட்டான பொன்மகள் வந்தால் ரசிக்கும்படி இல்லை.

படத்தின் கிளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தியேட்டரில் எழும் முனுமுனுப்பை பார்த்தாலே புரிகிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் படத்தில் பல ஜாலியான விஷயங்கள் உள்ளன. ஆங்காங்கு குறைகள் உள்ளன.

கதையில் பெரிய விசேஷம் எதுவும் இல்லை. படத்தின் நீளமும் ஒரு பின்னடைவாக இருக்கிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் ஓடுகிறது. படத்தின் முதல் பாதியில் பல காட்சிகளை இன்னும் நன்றாக செதுக்கியிருக்கலாம். சில இடங்களில் சொதப்பலாக இருக்கிறது. ஈ.எஸ்.பி. என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் ஆதாரப்பூர்வமான விஷயம் போல டைரக்டர் கையாண்டிருப்பது இடிக்கிறது.

ஆனால் விஜய் தனது நடிப்பால் அனைத்துக் குழப்பங்களையும் சமாளித்து விடுகிறார்.

அழகிய தமிழ் மகன் - அருமையான சினி மகன்!

Read more about: azhagiya tamil magan review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil