அடேங்கப்பா...சூறாவளில இருந்து மீண்டு வந்த எஃபெக்ட்...ரசிகர்களை மிரள வைத்த அகண்டா
ஐதராபாத் : சூறாவளியாய் சுழன்று அடித்து, ரசிகர்களை மிரள வைத்துள்ளார் பாலகிருஷ்ணா. இவர் நடித்த அகண்டா படத்தை பார்த்து விட்டு, இந்த படத்தை ஏன் அதுக்குள்ள ஓடிடி.,யில் ரிலீஸ் செய்தார்கள் என நிச்சயமாக யாராலும் கேட்காமல் இருக்க முடியாது.
Recommended Video
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து லேட்டஸ்டாக வெளிவந்துள்ள படம் அகண்டா. 2021ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. பாலகிருஷ்ணா,பிரக்யா ஜெய்ஸ்வால் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் தான் தியேட்டரில் ரிலீசாகி 50 நாட்களை நிறைவு செய்தது. ஜனவரி 20ம் தேதி வரை இந்த படம் தியேட்டரில் ரூ.190 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.60 முதல் 70 கோடி மட்டுமே.
ஓடிடி.,க்கு வந்த அகண்டா
இந்நிலையில் அகண்டா படம் நேற்று பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. கொரோனா, ஓமைக்ரான் பரவல் காரணமாக பலர் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க தவறி இருப்பார்களோ என்னவோ, அதனால் தான் நேற்று படம் ரிலீசானது முதல் சோஷியல் மீடியாவில் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். பாலகிருஷ்ணாவின் மிரட்டலான மாஸ் ஆக்ஷன் காட்சிகளை பார்த்து விட்டு, ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
பிரம்மாண்டமாக ஆக்ஷன்
போயபட்டி ஸ்ரீனு இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். துவாரகா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் மிரட்டி உள்ளார். இவருடன் ஜெகபதி பாபு, ஸ்ரீகாந்த் பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். வழக்கமான பழைய கதை தான் என்றாலும் அதை முழுக்க முழுக்க மாஸ் கலந்து பிரம்மாண்டமாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற் போல் இசையும் காதை கிழிக்கிறது.
இதுதான் கதை
அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சட்ட விரோத குவாரிகள் நடத்தி, இயற்கையை அழித்து வரும் வில்லன். அதே சமயம் பணக்கார பெரிய குடும்பத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகள். அவர்களில் ஒருவரை பிறந்த உடனேயே அகோரிகள் எடுத்துச் சென்று சிவன் கோயிலில் வைத்து வளர்க்கிறார்கள். குடும்பத்தில் வளரும் மற்றொரு பிள்ளை, வளர்ந்து ஊரார் போற்றும் வகையில் அனைவரும் உதவி செய்து, ஊரே மதிக்கும் பெரிய மனிதராக வாழ்கிறார். அந்த ஊருக்கு புதிதாக வரும் கலெக்டர் அவர் மீது காதல் கொண்டு, திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
செகண்ட் ஆஃபில் வரும் அகண்டா
மர்ம நோயால் ஹீரோவின் குழந்தை உள்ளிட்ட ஊரில் பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் சட்ட விரோதமாக கனிம வளங்கள் தோண்டப்படுவது தான் என தெரிகிறது. இதை ஹீரோ எதிர்க்க, அவர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார் வில்லன். கலெக்டரான ஹீரோயின் மற்றும் அவர்களின் குழந்தையை கொள்ள துரத்துகிறார்கள். அவர்கள் அகோரிகளிடம் வளரும், கடவுளின் அவதாரமாக போற்றப்படும் அகண்டாவிடம் சரணமடைகிறார்கள். தன்னிடம் உள்ள தெய்வ சக்தியை கொண்டு வில்லன்களிடம் இருந்து எப்படி எல்லாம் ஹீரோ குடும்பத்தை அகண்டா காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.
எப்படிடா எடுக்குறீங்க இப்படி படத்தை
ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் முழு நீள ஆக்ஷன் படத்தை வழங்கி இருக்கிறார்கள். ஃபஸ்ட் ஆஃப் பார்ப்பவர்களுக்கு, 15 பாட்ஷா, 21 பாகுபலி, 45 கேஜிஎஃப் கலந்து பார்த்த ஃபீல் ஏற்படுகிறது. அந்த அளவிற்கு ஆக்ஷன், கிராஃபிக்ஸ் என மிரட்டி இருக்கிறார்கள். அதிலும் தெய்வீக சக்தி கொண்ட அகண்டாவாக வரும் பாலகிருஷ்ணா, சக்கரத்தை சுழற்றி வில்லன் கும்பலை பறக்க விடும் காட்சியில் கிராஃபிக்சில் அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டனர். சூறாவளியால் சுழன்றடிக்கும் பாலகிருஷ்ணாவின் மாஸ், மிரட்டுகிறது. கடைசியில் எப்போதெல்லாம் நல்லதுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் நான் வருவேன் என சொல்லி அகண்டா செல்வது ஃபைனல் டச்சாக உள்ளது. அகண்டா 2 வருமா என அனைவரையும் கேட்க வைத்துள்ளது.
முதல் நாளில் இத்தனை பார்வைகளா
ஃபஸ்ட் ஆஃபில் முரளி கிருஷ்ணாவாகவும், செகண்ட் ஆஃபில் அகண்டாவாகவும் அனல் தெறிக்க விட்டுள்ளார் பாலகிருஷ்ணா. ஹாட்ஸ்டாரில் ரிலீசான முதல் நாளே அகண்டா படத்தை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். ஓடிடியில் தெலுங்கு படம் ஒன்று அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்றால் அது அகண்டா படம் மட்டும் தான். இனி வரும் நாட்களில் பல படங்களின் ஓடிடி சாதனையை அகண்டா முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











