பரத்தின் காளிதாஸ் 2 படம் எப்படி இருக்கு? பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் இதோ!
சென்னை: நடிகர் பரத் நடித்த காளிதாஸ் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் காளிதாஸ் இரண்டாம் பாகம் 8 ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்க, பரத், பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
காளிதாஸ் 2 திரைப்படத்தின் கதை என்னவென்றால் சங்கீதா வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை கடத்தப்பட்டு கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டராக வருகிறார் பரத். அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார் அஜய் கார்த்திக், அவர் மீது பரத்திற்கு சந்தேகம் வருகிறது. இப்படியாக ஒவ்வொருத்தர் மீதும் சந்தேகம் வர, கடைசியில் இவரா கொலை செய்தார் என நாம் யோசிக்கும் வகையில் காளிதாஸ் 2 திரைப்படத்தின் கதை முடிகிறது.

படத்தின் கதை: காளிதாஸ் 2 படம் அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இயக்குநர் ஸ்ரீ செந்தில் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். படத்தின் கதாநாயகனான பரத், நல்ல திறமையுடன், அழகாகவும் சண்டைக் காட்சிகளில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக திறம்பட நடித்து இருக்கிறார். அவருக்கு ஏன் பட வாய்ப்பு இல்லை என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. பரத் போன்ற நல்ல நடிகர் ஏன் எப்படி வீணடிக்கப்பட்டு இருக்கிறார் என்கிற வருத்தம் எனக்குள் வருகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் பரத்திற்கு மீண்டும் பட வாய்ப்பு கிடைக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பயில்வான் விமர்சனம்: பவானி ஸ்ரீ உதவி கமிஷனராக வருகிறார், ஆனால், அவருக்கு நடிக்க வாய்ப்பு இருந்தும் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு இன்வெஸ்டிகேஷன் ஆபிஸர் எந்த அளவிற்கு துரு துருவென இருக்க வேண்டும். ஆனால் பவானி ஸ்ரீ கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்யாமல் விட்டுவிட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை சங்கீதா இந்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். படத்தினுடைய முக்கியமான டர்னிங் பாயிண்ட் சங்கீதா தான், அதை இப்போது சொல்லிவிட்டால் படத்தின் மீது உங்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து விடும். ஆனால் கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்து இருக்கிறார் சங்கீதா. காளிதாஸ் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்றாலும், முதல்பாகம் போல இரண்டாம் பாகமும் ரசிக்கும்படி உள்ளது. குடும்பத்துடன் பார்க்க தகுந்த இந்த படத்திற்கு பயில்வான் ரங்கநாதன் அளிக்கும் மதிப்பெண் 100க்கு 57 என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











