Bottle Radha Review: பாட்டல் ராதா விமர்சனம்.. குடி குடியைக் கெடுக்கும்.. குரு சோமசுந்தரம் சம்பவம்!
நடிகர்கள்: குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், பாரி இளவழகன்
இசை: ஷான் ரோல்டன்
இயக்கம்: தினகரன் சிவலிங்கம்
சென்னை: பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று வெளியான நிலையில், படத்தை பற்றிய விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
டைட்டிலை பார்த்தாலே இதுவொரு "குடி குடியைக் கெடுக்கும்" படம் என்பதை கணிக்க முடிந்துவிடும். ஆனால், அதை எந்தளவுக்கு ரசிகர்களை கவரும்படியும் உண்மைக்கு நெருக்கமாக கொடுத்து குடிபோதை குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பது பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி சமூக விழிப்புணர்வை பாடம் நடத்தாமல் படமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் தினகரன் சிவலிங்கம்.

ராதாமணி கதாபாத்திரத்தில் பாட்டல் ராதாவாக அச்சு அசல் குடிகாரன் தோற்றுவிடுவான் என்பது போல தனது நடிப்பால் சிறப்பான சம்பவத்தை குரு சோமசுந்தரம் செய்துள்ளார். திரைப்படமாக பாட்டல் ராதா படத்தில் என்ன என்ன நிறைகள் மற்றும் என்ன என்ன குறைகள் உள்ளன என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
பாட்டல் ராதா கதை: டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கும் ராதாமணி (குரு சோமசுந்தரம்) குடிக்கு அடிமையாக உள்ளார். வேலை பார்க்கச் செல்லும் போது கூட குடித்துவிட்டு அவர் செல்வதால் குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன. அவரது மனைவியாக சஞ்சனா நடராஜன் தனக்கே உரிய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கண்கலங்க வைக்கிறார். ஒருகட்டத்தில் ராதாமணியை மறுவாழ்வு மையத்தில் அடைக்க அங்கிருந்து எப்படி வெளியே வருகிறார். குடிப்பழக்கத்தை விட்டு திருந்துகிறாரா? குடும்பத்துடன் மீண்டும் சேர்கிறாரா? கிளைமேக்ஸில் இயக்குநர் சொல்ல வரும் கருத்து என படம் பக்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.

படம் எப்படி இருக்கு?: ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க வரும் இடத்திலேயே குரு சோமசுந்தரம் ஸ்கோர் செய்திருப்பார். ஜோக்கர், மின்னல் முரளி என அவர் நடித்தாலே அந்த படங்களில் அவர்தான் ஹைலைட். பாட்டல் ராதா படத்தில் ஹீரோவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் தனது உடல்மொழியால் குரு சோமசுந்தரத்தை மறக்கச் செய்து ராதாமணியாக வாழ்ந்துக் காட்டியுள்ளார். அவர் காமெடி செய்யும் போது சிரிக்கவும், அவர் கஷ்டப்படும் போது கவலைப்படவும் வைத்து கிளாப்ஸை அள்ளுகிறார் மனுஷன். அவருக்கு இணையான நடிப்பை சஞ்சனா நடராஜன் அவரது மனைவியாக நடித்து வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபத்தில் கணவனை அடிக்கும் இடம் தியேட்டரே தெறிக்குது. ஜமா படத்தில் நடித்த பாரி இளவழகன் இந்த படத்தில் மொடா குடிகாரனாக நடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார். மறுவாழ்வு மையத்தில் நடக்கும் கூத்துகள் எல்லாம் அடிபொலி.
பிளஸ்: ஷான் ரோல்டனின் இசை தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இயக்குநர் தினகரன் சிவலிங்கம் அழுத்தமான திரைக்கதையை பாடம் நடத்தி ரசிகர்களை கஷ்டப்படுத்தாமல் ஜாலியாக கதை போகிற போக்கில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துக்களை அடுக்குவதும் குடியால் குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்படும். மனைவி யாரிடம் எல்லாம் அசிங்கப்பட வேண்டியிருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் எப்படி சீரழியும் என அனைத்து விஷயங்களையும் ஆழமாக எடுத்துக்காட்டியுள்ளார்.

மைனஸ்: மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படத்தின் போக்கில் அதெல்லாம் பெரிய மைனஸாக தெரியவில்லை. ஆங்காங்கே மேக்கிங்கில் சிறு குறைகள் தெரிந்தாலும், சமூக அக்கறையுடன் வெளியாகவுள்ள இந்த பாட்டல் ராதா நிச்சயம் மக்களின் மனங்களை வருடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











