Bumper Review: மதங்களை கடந்த மனிதம்.. வெற்றி, ஷிவானி நடித்த பம்பர் பட விமர்சனம் இதோ!
நடிகர்கள்: வெற்றி, ஷிவானி, ஹரிஷ் பெரடி, ஜிபி முத்து
இசை: கோவிந்த் வசந்தா
இயக்கம்: செல்வகுமார்
நேரம்: 2 மணி நேரம் 2 நிமிடங்கள்
சென்னை: இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஹரிஷ் பெரடி மற்றும் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பம்பர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
படத்தின் தலைப்பிலேயே பம்பர் என வைத்து, லாட்டரியில் பெரிய பம்பர் அடிக்கப் போகிறது. அதனால், ஏற்படும் விளைவுகள் தான் கதை என்பதை இயக்குநர் உணர்த்தி உள்ளார்.

8 தோட்டாக்கள், ஜீவி என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வெற்றிக்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
பம்பர் கதை: தூத்துக்குடியில் காசுக்காக காந்தி ஜெயந்தி அன்று கூட சாராயம் விற்கும் இளைஞனாக ஹீரோ வெற்றி புலிப்பாண்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி கதாபாத்திரத்தில் ஷிவானி நாராயணன் சிறப்பாக நடித்துள்ளார்.
அரசியல் தலைவர் ஒருவர் ஊரில் கொல்லப்பட அந்த கொலை பழி புலிப்பாண்டியின் மீது விழுகிறது. அதில் இருந்து தப்பிக்க, சபரி மலைக்கு மாலை போட்டு தப்பித்து செல்கிறார் புலிப்பாண்டி.
அங்கே வயதான இஸ்லாமியரான ஹரிஷ் பெரடியிடம் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்குகிறார். ஆனால், இந்த லாட்டரி டிக்கெட்டில் எனக்கு பம்பரா அடிக்கப் போகுது என அந்த டிக்கெட்டை அங்கேயே வீசிவிட்டு செல்கிறார்.

அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பம்பர் பரிசு விழுந்து விட அந்த விஷயத்தை தூத்துக்குடியில் உள்ள ஹீரோவுக்கு தெரிவிக்க நேர்மையான லாட்டரி டிக்கெட் வியாபாரி பயணிக்க, வழியில் ஏற்படும் பிரச்சனைகளும், அவரை தடுக்க நடக்கும் சதிகளும் இறுதியில் அந்த பம்பர் ஹீரோவுக்கு கிடைத்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு: பணத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யும் ஹீரோவாக நடித்துள்ளார் வெற்றி. அந்த கொலை பழி இவர் மீது விழுந்ததும் இவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது. நேர்மையாக இருந்தால், நமக்கு சேர வேண்டிய நல்லது வந்து சேரும் என்பது போல திரைக்கதையை இயக்குநர் செல்வகுமார் விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கொண்டு சென்றுள்ளார்.
மாமன்னன் படத்தில் வடிவேலுவின் வித்தியாசமான நடிப்பு பாராட்டுக்களை அள்ளி வரும் நிலையில், இதுவரை வில்லனாக நடித்து வந்த ஹரிஷ் பெரடி இந்த படத்தில் வயதான இஸ்லாமிய லாட்டரி டிக்கெட் விற்கும் நபராக வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜிபி முத்து ஆரம்பத்தில் சில காமெடி காட்சிகளில் தனக்கு கொடுத்த வேலையை செய்து செல்கிறார். ஷிவானி நாராயணன் இந்த படத்தில் ஹீரோயினாக ஷைன் ஆகி உள்ளார்.
பிளஸ்: லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசு விழும் கதையில் நேர்மை, மதங்களை கடந்த மனிதம் என ஏகப்பட்ட பாசிட்டிவான விஷயங்களை திரைக்கதையில் அழகாக கோர்த்து இயக்குநர் செல்வகுமார் கடைசி வரை தியேட்டருக்கு நம்பி வந்த ரசிகர்களை போரடிக்காமல் படத்தை கொண்டு சென்று பாஸ் ஆகி விட்டார்.
ஹீரோ வெற்றியின் நடிப்பு, ஹரிஷ் பெரடியின் நடிப்பு வில்லனாக நடித்துள்ள கவிதா பாரதியின் நடிப்பு, ஹரிஷ் பெரடியின் மகனாக நடித்துள்ளவரின் நடிப்பு, ஷிவானியின் நடிப்பு என அனைத்துமே கச்சிதம். இந்த படத்துக்கு பெரும் பலம் 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அசத்தலான இசை தான்.
மைனஸ்: நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் கதையில் திடீர் திடீரென வரும் சில கதாபாத்திரங்கள் படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருக்கிறது. இன்னமும் இந்த படத்தை ஃபைன் டியூன் செய்திருந்தால் இன்னமும் இந்த படம் பம்பர் ஹிட் அடித்திருக்கும்.
லோ பட்ஜெட் படமென்றாலும், தியேட்டரில் ரசிகர்களை உட்கார வைத்து பார்க்க வைக்கும் திரைக்கதைக்காக தாராளமாக ஒருமுறை பம்பர் படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











