Bun Butter Jam Review: பன் பட்டர் ஜாம் விமர்சனம்.. பிக் பாஸ் ராஜு நடிப்பு எப்படி?.. சிரிக்க வைத்தாரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் ஹீரோவாக நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ராகவ் மிர்தாத் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஜுவுக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
ஜோ படத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவ்யா நந்தினி கதாபாத்திரத்திலும், இன்னொரு ஹீரோயின் ஆத்யா என்பவர் மதுமிதா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். விஜய் டிவி பப்பு, கேமியோ ரோலில் நடித்துள்ள விக்ராந்த், அம்மாக்களாக அலப்பறையை கிளப்பும் கதாபாத்திரங்களில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் தேவதர்ஷினி, அப்பாவாக சார்ளி என பக்காவான பேக்கேஜில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இன்றைய இளைஞர்களை கச்சிதமாக டார்கெட் செய்து காமெடி, காதல், கில்மா காட்சிகள் என கலந்துக்கட்டி உருவாக்கியுள்ள இந்த பன் பட்டர் ஜாம் திரைப்படம் எந்தளவுக்கு எந்த வகையான ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகும்? ஆகாதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
பன் பட்டர் ஜாம் கதை: பிக் பாஸ் ராஜு இந்த படத்தில் சந்துரு செந்தமிழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிளஸ் 2 முடித்து காலேஜுக்கு செல்லும் தங்கள் குழந்தைகள் யாரையாவது காதலித்து கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக, லலிதா (சரண்யா பொன்வண்ணன்) மற்றும் உமா (தேவதர்ஷினி) இருவரும் சேர்ந்து நம்ம பசங்களை ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வைத்து காதலிக்க வைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம். அவர்களை பொறுத்தவரையில், இது லவ் மேரேஜ், ஆனால், நமக்கு மட்டுமே இது அரேஞ்ச்ட் மேரேஜ் என தெரியும் என இரு அம்மாக்கள் போடும் பிளான் ஒர்க்கவுட் ஆனதா? இல்லையா? ராஜு அம்மா திட்டம் போட்டு வைக்கும் பெண்ணை காதலிக்காமல், இன்னொரு பெண்ணை காதலிக்க என்ன ஆகிறது என்பதை காமெடியுடன் கலந்துக் கட்டி சில மெசேஜ்களையும் தூவி உருவாக்கியுள்ள படம் தான் இந்த பன் பட்டர் ஜாம்.
ராஜு நடிப்பு எப்படி இருக்கு?: சும்மா சொல்லக் கூடாது, ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த நிலையில், ஹீரோவாக இந்த படத்தில் நடிக்க எந்த இடத்திலும் அவர் தயக்கமோ பயமோ காட்டவே இல்லை. கண்டிப்பாக கோலிவுட்டுக்கு இன்னொரு ஹீரோ மெட்டீரியல் என்றே தாராளமாக சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் அவரது காமெடி சென்ஸ் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆனதோ அதே போல இந்த படத்திலும் அவருடைய காமெடி சென்ஸுக்கு ரசிகர்கள் தியேட்டர்களில் சிரிக்கின்றனர். ராஜு படத்தை பார்த்து விட்டு ஜாலியாக சிரிக்கலா என்று செல்பவர்களை அவர் எந்த இடத்திலும் ஏமாற்றவே இல்லை.

பிளஸ்: ராஜு ஜெயமோகன், பாவ்யா மற்றும் ஆதியா என 3 லீடு கதாபாத்திரங்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி காம்போ, போதா குறைக்கு விஜய் டிவி பப்பு சிவகார்த்திகேயனை இமிட்டியேட் செய்வது போல செய்யும் சேட்டைகள், கூடுதல் கேமியோவாக விக்ராந்த் செல்வா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விதம் என அனைத்துமே படத்திற்கு பிளஸ் தான். நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. ஒளிப்பதிவாளர் பாபு குமார் இளைஞர்களை கவரும் வண்ணங்களை திரை முழுக்க தெளித்திருக்கிறார். ஜாலியான காமெடி படமாக இயக்குநர் ராகவ் மிர்தாஜ் இந்த பட்த்தை இயக்கி பாஸ் ஆகியுள்ளார்.
மைனஸ்: படம் முழுவதும் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள், கதை மற்றும் திரைக்கதையில் நிலவும் சொதப்பல்கள், பாவ்யாவின் கதாபாத்திரத்தை கொண்டு சென்ற விதம் என ஏகப்பட்ட மைனஸ்களும் அதிகளவிலேயே உள்ளன. லாஜிக் எல்லாம் பார்க்காமல் நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க ஒரு படமாக கண்டிப்பாக இந்த பன் பட்டர் ஜாம் இருக்கும். ஃபேமிலியாக பார்க்க நினைத்தால், இந்த பன் பட்டர் ஜவ்வாகவே இழுக்கும்.


Click it and Unblock the Notifications











