Burqa Review: முஸ்லிம்களை இழிவுப்படுத்தியதா அல்லது உண்மையை பேசுகிறதா..? புர்கா பட விமர்சனம்!
புர்கா
நடிகர்கள் : கலையரசன், மிர்னா மேனன், ஜிஎம் குமார்
இயக்குநர் : சர்ஜுன் கே.எம்
ரன்னிங் டைம் : 1 மணி நேரம் 20 நிமிடம்
வெளியீடு : ஆஹா தமிழ் ஓடிடி
சென்னை: கலையரசன், மிர்னா மேனன், ஜிஎம் குமார் நடித்துள்ள புர்கா திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சர்ஜுன் கேஎம் இயக்கியுள்ள இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய பெண்களின் இத்தா என்ற சம்பிரதாயத்தை விமர்சிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், புர்கா படத்தின் முழுமையான தமிழ் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

புர்கா பட விமர்சனம்:திருமணமான ஒரே வாரத்தில் கணவரை இழந்த நஜ்மா இத்தா என்ற சம்பிரதாயத்தை கடைபிடித்து வருகிறார். அப்போது கத்திக் குத்து காயங்களுடன் வீட்டு வாசலில் மயங்கி கிடக்கும் சூர்யாவுக்கு, இத்தாவில் இருக்கும் நஜ்மா உதவ நேரிடுகிறது. ஊரில் கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு இருப்பதால், சூர்யாவை உடனே வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதிக்கிறாள் நஜ்மா.
அந்த ஒருநாளில் சூர்யாவுக்கும் நஜ்மாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் தான் புர்கா படத்தின் மொத்த கதையும். சூர்யாவாக கலையரசனும் நஜ்மாவாக மிர்னா மேனனும் நடித்துள்ளனர். ஒரேயொரு காட்சியில் ஜிஎம் குமார் வந்து போகிறார். கணவனை இழந்த முஸ்லிம் பெண்கள், 4 மாதங்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குர்ஆனில் இருக்கும் நெறிமுறை.
அதாவது அந்நிய ஆண்களின் பார்வையும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இத்தா இருக்கும் பெண் மறுமணம் செய்துகொள்ளும் போது அவளது குழந்தைக்கு யார் தந்தை என்பதை தெரிந்துகொள்வதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது அந்த காலகட்டத்தில் அப்பெண் கருத்தரிந்திருந்தால், கருவிலுள்ள அந்தக் குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இத்தா இருக்கும் பெண்ணின் வருமானம் தான் அவரது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் என்றால், இந்த இத்தா முறையில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு எதிரான உரையாடல்கள் தான் புர்கா படம் முழுவதும் நிரம்பியுள்ளது. இந்தப் படத்தில் இத்தா இருக்கும் பெண்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை என்ற கண்ணோட்டத்தில் சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தற்போதைய நவீன அறிவியல் உலகில் டிஎன்ஏ மூலம் குழந்தையின் தந்தை யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என கலையரசன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இது அறிவியல் ரீதியாக முழுமையாக கண்டறிய முடியாது எனவும் சொல்லப்படுகிறது.
அதேபோல், புர்கா, இத்தா என அடுத்தடுத்து பல அடுக்குகளில் சூர்யாவுக்கும் நஜ்மாவுக்கும் இடையேயான உரையாடல்கள் தொடருகின்றன. இதில் சில யதார்த்தமான உண்மைகள் இருந்தாலும், எதுவுமே அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை என்பதே உண்மை. கல்வி உரிமை கொடுக்கும் தந்தை, ஆடை சுதந்திரம் அளிக்கும் கணவன் என முற்போக்கான ஆண் பாத்திரங்கள் இருந்தும், படம் நெடுக அடிப்படைவாதம் குறித்து உரையாடுகின்றனர் சூர்யாவும் நஜ்மாவும்.
ஒருகட்டத்தில் சூர்யாவுக்கும் நஜ்மாவுக்கும் இடையே காதல் மலருமா என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துவிட்டு, அதிலும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் இயக்குநர். இஸ்லாமிய சமூகத்தில் மனம் திறந்த உரையாடல்கள் குறைவு தான் என்பதால், மொத்த படத்தையும் உரையாடல்கள் வழியே கடத்திச் சென்றது அயர்ச்சியைத் தருகிறது. அதேபோல், இப்படியான சிக்கலான கதைக்களங்களை வாழ்வியல் சார்ந்து இயக்கியிருக்க வேண்டும். அப்போது தான் இத்தா இருக்கும் பெண்களில் அடிப்படை பிரச்சினை குறித்தும் பேச முடியும்.

நஜ்மாவின் உரையாடல்களில் குழப்பமும் தவிப்பும் தான் பிராதானமாக இருந்ததே தவிர, அவரின் வலியை எங்கும் பதிவு செய்யவில்லை. அதேநேரம் நஜ்மாவின் நிலையில், இன்று இஸ்லாமிய பெண்கள் இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. ஆகமொத்தம் மிக முக்கியமான கதைக்களத்தை கையில் எடுத்துக்கொண்டு தான் பேச வந்ததை முழுமையாக பேசாமல் இயக்குநர் குழப்பத்தில் தடுமாறியுள்ளாரோ என யோசிக்க வைக்கிறது. பிளட் மணி படத்தை இயக்கிய சர்ஜுன் தான், புர்காவையும் இயக்கினாரா என சந்தேகிக்க வைத்துள்ளது.
பாலமுருகனின் ஒளிப்பதிவு முழுவதும் பச்சை நிறத்தில் எதோ குறியீடு போல உள்ளது. சிவாத்மிகாவின் இசை, பிரவீன் பாஸ்கர் எடிட்டிங் படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இஸ்லாமிய பெண்களின் அடிப்படை பிரச்சினை, வாழ்வாதாரம் குறித்து அந்த சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்களே சிறுகதைகள், நாவல்களில் எழுதியுள்ளனர் என்பதை இயக்குநர் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











