Byri Review: பைரி விமர்சனம்.. மாரி படத்தை விட மாஸா இருக்கா? புறா பந்தயக் காட்சிகள் எப்படி?
நடிகர்கள்: சையத் மஜீத், மேக்னா எலன்
இசை: அருண் ராஜி
நேரம்: 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
இயக்கம்: ஜான் கிளாடி
சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்திலேயே புறா பந்தயத்தை மையமாக வைத்து படத்தை கமர்ஷியல் படமாக உருவாக்கி இருப்பார்கள். அந்த படத்தில் புறா பந்தயம் ஒரு போர்ஷனாக மட்டுமே வந்து செல்லும் நிலையில், ஆடுகளம் சேவல் சண்டை ரேஞ்சுக்கு புறா பந்தயத்தை ஒரு படமாக எடுத்தால் எப்படி இருக்குமோ அந்த வகையில் இயக்குநர் ஜான் கிளாடி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
நாகர்கோயில் வட்டார வழக்குடன் அந்த ஊரின் அழகையும் புறா பந்தயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் அவர்களின் சுக துக்கங்களை அப்படியே டாக்குமென்டரி பாணியில் படமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்த வாரம் வந்த படங்களிலேயே விமர்சன ரீதியாக பலரையும் கவர்ந்த பைரி திரைப்படம் தியேட்டருக்குச் சென்ற ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
பைரி கதை: நாகர்கோயிலில் வசிக்கும் ஹீரோ ராஜலிங்கம் (சையத் மஜீத்) அப்பா, தாத்தாவை போல புறா பந்தயத்தில் ஈடுபட வேண்டும் என புறா வளர்த்து வருகிறார். கல்லூரிக்கு சென்று படித்து மகன் முன்னேற வேண்டும் என அம்மா விஜி சேகர் நினைக்க மகனையும் அவனது நண்பராக வரும் அமல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் ஜான் கிளாடியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுதி உள்ளனர். புறா பந்தயத்தில் ஜெயிக்க நினைக்கும் ஹீரோவுக்கு சூழ்ச்சியால் வரும் ஒரு பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்த பைரி முதல் பாகத்தின் கதை. இரண்டாம் பாகமும் இந்த படத்திற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. பைரி என்றால் பந்தய புறாக்களை விரட்டும் பருந்தை குறிக்கும் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமுக நடிகர்கள் மிரட்டல்: இந்த படத்தில் ராஜலிங்கம் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் புதுமுக நடிகர் சையத் மஜீத். ரமேஷ் பண்ணையாராக அந்த ஏரியாவிலேயே புறா பந்தயத்தில் மாஸ் காட்டும் நபராக ரமேஷ் ஆறுமுகம் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரது புறா போல நம்முடைய புறாவும் வானில் அதிக நேரம் பறந்து வெற்றியடைய வேண்டும் என ஹீரோ முயற்சிப்பதும், அதற்கு தடையாக அம்மா இருப்பதும், நண்பனுக்கு உதவும் கதாபாத்திரத்தில் இயக்குநர் வித்தியாசமான நடிப்பை காட்டியும் ரசிகர்களை கவர்கின்றனர்.

பிளஸ்: மாரி படத்தில் புறா பந்தயத்தை காட்டினாலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் சேவல் பந்தயத்தை காட்டுவது போல டீட்டெய்லாக காட்டியிருக்க மாட்டார்கள். அந்த டீட்டெய்லை பிடித்து புறா பந்தயம் என்றால் என்ன? அது எப்படி நடக்கும்? புறா பந்தயத்தில் ஈடுபடுபவர்களின் மனநிலை எப்படி இருக்கும். அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என இயக்குநர் குறைந்த பட்ஜெட்டில் தரமாக கொடுக்க போட்டிருக்கும் உழைப்பு படத்துக்கு பெரிய பிளஸ். படத்திற்கு கூடுதல் பலமாக இசையமைப்பாளர் அருண் ராஜி புறா பறக்கும் சத்தத்தில் இருந்து பாடல்கள் வரை அனைத்தையுமே சரியாக கொடுத்து இருக்கிறார்.
மைனஸ்: அறிமுக நடிகர்கள் நடிப்பதால் தியேட்டருக்கு ரசிகர்களை அவர்களால் வரவழைக்க முடியாதது ஒரு மைனஸ் ஆக உள்ளது. ஆனால், படத்தை சிறப்பாகவே கொடுத்திருக்கின்றனர். ஆனால், எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சனையே படத்தின் கிளைமேக்ஸ் தான். இந்த படத்தை 2 பாகங்களாக கொடுக்க நினைத்த இயக்குநர் முதல் பாகத்தின் கிளைமேக்ஸை சரியாக முடிக்காமல் அப்படியே பாதியிலேயே படத்தை நிறுத்தியது போன்ற உணர்வு தான் படத்திற்கு பெரும் பலவீனமாக உள்ளது. ஆனால், புதிய முயற்சியாக இப்படியொரு படத்தை கொடுத்திருக்கும் துணிச்சலுக்காக படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











