Captain Miller Positives: கேப்டன் மில்லர் படத்தில் நிச்சயம் இதையெல்லாம் பாராட்டியே ஆக வேண்டும்!
சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் படத்தை கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த படம் முழுமையாக இல்லை என்றும் மூலக் கதை பெரிதாக ஈர்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
ராக்கி, சாணிக் காயிதம் படங்களிலும் அருண் மாதேஸ்வரனுக்கு இதே போல பாராட்டுக்களும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து தான் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள் குறித்தும் இந்த பொங்கல் பண்டிகைக்காக மட்டும் அல்ல படத்தை பார்க்க தக்க விஷயங்கள் இருக்கா இல்லையா என்பதை விரிவாக இங்கே அலசுவோம்.

தனுஷ் எனும் நடிப்பு அசுரன்: கேப்டன் மில்லர் படத்தை கட்டாயம் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். ஐமேக்ஸ் திரையரங்கில் பார்க்க முடிந்தாலும் தாராளமாக சென்று பாருங்கள். தனுஷின் அசுரத்தனமான நடிப்பு நிச்சயம் உங்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கும். அதிலும் அந்த ஆங்கிலேயரின் பட்டாளத்தில் வேலைக்குப் போகப் போகிறேன் என அண்ணனாக நடித்துள்ள சிவ ராஜ்குமாரிடம் பேசும் வசனம் மற்றும் பட்டாளத்தில் இணைந்து தன் நாட்டு மக்களை சுட முடியாமல் தவிக்கும் வேதனையை வெளிப்படுத்தி அவர் நடித்த நடிப்புக்கே தேசிய விருது கொடுக்கலாம்.
அருண் மாதேஸ்வரன் மேக்கிங்: இதுவரை குறைவான பட்ஜெட்டில் படங்களை இயக்கி வந்த அருண் மாதேஸ்வரனுக்கு இந்த முறை தனுஷ் நடிப்பில் பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் மேக்கிங்கில் அதிக கவனத்தை செலுத்தி 6 பகுதிகளாக படத்தை வித்தியாசமாக எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும், கோயில் கருவறைக்குள்ளும் மனிதராக பிறந்த அனைவரும் செல்லும் உரிமை வேண்டும் என்கிற முழக்கமும் ஆங்கிலேயர்கள் மட்டும் நம்மை அடிமைப்படுத்தவில்லை. அதிகார வெறி பிடித்த அனைவரும் அடிமைப்படுத்துகின்றனர் என்கிற விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியதற்கு நிச்சயம் பாராட்டுக்கள்.
சிவராஜ்குமார் ஸ்க்ரீன் பிரசன்ஸ்: கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் சில காட்சிகள் மட்டுமே வந்து செல்கிறார். ஆனால், அவர் வரும் காட்சிகளில் எல்லாமே ஒரு போராளியின் முகத்தை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தும் விதம் கை தட்ட வைக்கிறது. ஜெயிலர் படத்தில் கேங்ஸ்டர் லுக் கொடுத்தவரா இந்த படத்தில் டோட்டலாக ஆளே மாறி நிற்கிறார் என கேட்கத் தூண்டுகிறது.
நிவேதா சதீஷ்: இளங்கோ குமரவேல், நிவேதா சதீஷ் இருவரும் கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் நபர்களாக நடித்த விதம் ரொம்பவே அருமையாக உள்ளது. கடைசி வரை இருவரும் போட்டிப் போட்டு நடித்திருப்பதும் தனுஷை தாண்டி மற்றவர்களுக்கும் இந்த படத்தில் இயக்குநர் ஸ்கோப் கொடுத்திருப்பதும் பாராட்டுக்குரிய விஷயம் தான்.
ஜி.வி. பிரகாஷ் குமார்: ஒட்டுமொத்த கேப்டன் மில்லர் படத்தையும் தூக்கி நிறுத்துவது ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை தான். அந்த கோரனாரு பாடலும் கூஸ்பம்ப்ஸ் ரகம் தான். பிரியங்கா மோகனின் நடிப்பும் படத்தில் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிஸ் ஆன விஷயங்கள் கிளைமேக்ஸில் கச்சிதமாக முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











