twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்டி வீரன் விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    3.0/5
    Star Cast: அதர்வா, ஆனந்தி, லால்
    Director: சற்குணம்

    நடிகர்கள்: அதர்வா, ஆனந்தி, லால், போஸ் வெங்கட்

    ஒளிப்பதிவு: பிஜி முத்தையா

    இசை: அருணகிரி, சபேஷ் - முரளி

    தயாரிப்பு: பாலா

    இயக்கம் : சற்குணம்

    தண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன்.

    Chandi Veeran Review

    காவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரனும் கவுன்சிலர் லாலும்.

    இந்தப் பிரச்சினைக்காக இரு கிராமத்தினருக்குமிடையே நடந்த சண்டையில் நெடுங்காட்டைச் சேர்ந்த கொல்லப்படுகிறார் போஸ் வெங்கட். அவரது மகன் அதர்வா சிங்கப்பூருக்குப் போய், விசா முடிந்தும் தங்கியிருந்த குற்றத்துக்காக தண்டனை பெற்று ஊர் திரும்புகிறார். வயல்பாடி மக்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவ முயல்கிறார்.

    இதனிடையே லாலின் மகள் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் காதல் ஏற்பட, இதைத் தெரிந்து அதர்வாவை எச்சரிக்கிறார் லால். கேட்க மறுக்கும் அதர்வாவை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார்.

    Chandi Veeran Review

    இந்த நேரத்தில்தான், நெடுங்காடு கிராம தலைவர் ரவிச்சந்திரன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இதற்கு காரணம் வயல்பாடியைச் சேர்ந்தவர்தான் என்று கூறி, அந்த ஊரையே பழிவாங்க நெடுங்காடு மக்களை ஆயுதங்களுடன் திரட்டுகிறார் லால். அந்தக் கலவரத்தில் அதர்வாவையும் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார்.

    இதைத் தெரிந்து கொண்ட அதர்வா, அந்த பெரும் கலவரத்தைத் தடுக்க முயற்சிக்கிறார். அதில் எப்படி வெற்றி காண்கிறார்? ஆனந்தியைக் கைப்பிடித்தாரா? வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா? என்பது மீதிக் கதை.

    இரண்டு மணி நேரத்துக்குள் முடிகிற மாதிரி பரபரவென ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் சற்குணம். முதல் பாதியில் கலகலப்பும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்புமாகப் போகிறது கதை. ஆனால் களவாணி மாதிரியோ, வாகை சூடவோ போலோ இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார்.

    Chandi Veeran Review

    நாயகன் அதர்வா, கிராமத்து இளைஞனாக கவர்ந்தாலும், அவரது உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    தோற்றம், நடிப்பில் நெடுங்காட்டுப் பெண்ணாகவே தெரிகிறார் ஆனந்தி. மிகை ஏதும் இல்லாத நடிப்பு.

    மில்லுக்காரராக வரும் லால் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராக வரும் ரவிச்சந்திரன், அதர்வாவின் நண்பர்கள், நெடுங்காடு கிராமவாசிகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    சபேஷ் முரளியின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்களும் கேட்கும்படி உள்ளன.

    நெலாவுல தண்ணி இருக்கான்னு
    ராக்கெட்டு அனுப்புறோம்
    பூமியில குடிநீர விலைபோட்டு விக்கிறோம்

    Chandi Veeran Review

    என்ற வரிகள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது.

    இன்றைய கிராமங்கள், அதன் மனிதர்கள், பிரச்சினைகளைப் பதிவு செய்த விதத்துக்காக சண்டி வீரனைப் பார்க்கலாம்.

    English summary
    Sargunam's latest release Chandi Veeran is a village based movie comes with a good message, and impressed in bits and pieces.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X