Chandramukhi 2 Review: ரா..ரா.. டபுள் சந்திரமுகியின் ஆட்டம்.. ஆனால்?.. சந்திரமுகி 2 விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு
இசை: கீரவாணி
இயக்கம்: பி. வாசு
நேரம்: 2 மணி நேரம் 51 நிமிடங்கள்
சென்னை: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் மிலாடி நபி விடுமுறையை டார்கெட் செய்து இன்று வெளியாகி உள்ளது.
காலாண்டு விடுமுறை என்பதால் ராகவா லாரன்ஸ் காம்பினேஷனில் வெளியாகி உள்ள சந்திரமுகி 2வை பார்க்கத் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று வெளியாகி உள்ள படங்களில் முதல் ஆப்ஷனாக இந்த படத்தை தேர்வு செய்து அதிக டிக்கெட்டுகள் வியாபாரம் ஆகியிருக்கு..

சந்திரமுகி முதல் பாகத்தை விட மிகவும் லெந்தான படமாக உருவாகி உள்ள சந்திரமுகி 2 முதல் பாகத்தை முந்தியதா? என்கிற விமர்சனத்தை எல்லாம் விட்டு விட்டு டிக்கெட் கொடுத்து நம்பிப் போன ரசிகர்களை என்டர்டெயின் செய்ததா? இல்லையா? என்கிற விமர்சனத்தை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
சந்திரமுகி 2 கதை: ரங்கநாயகி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமார் குடும்பத்தில் தொடர்ந்து அசம்பாவித சம்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த குடும்பத்துடன் வேட்டைய புரத்துக்கு வரும் ராதிகா சரத்குமார் தனது பெரிய குடும்பத்தினர் தங்க சந்திரமுகி பங்களாவுக்கு வருகின்றனர்.
அந்த பங்களாவில் உள்ள அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, ரியல் சந்திரமுகியே இந்த முறை இறங்கி வருவதும் அதனை அடக்க வேட்டையன் வருவதுமாக மனோதத்துவ கதையாக வெளியான சந்திரமுகி படத்தை பக்கா பேய் படமாக மாற்றி விட்டனர்.
படம் எப்படி இருக்கு?: ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு இடையே முதல் பாகத்தில் இடம்பெற்ற டபுள் மீனிங் காமெடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. ஆனால், அதே பாணியை ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவை வைத்து முயற்சித்து பி. வாசு தோற்றுத்தான் போயுள்ளார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

மாமன்னன் படத்தில் வடிவேலுவை அப்படி பார்த்து விட்டு மீண்டும் கஷ்டப்பட்டு காமெடி பண்ணுகிறாரே சிரிக்க முடியவில்லையே என ரசிகர்கள், இனிமேல் காமெடி படங்களை வடிவேலு பார்த்துத் தான் பண்ண வேண்டும் என்றே எண்ண வைக்கிறது சந்திரமுகி 2 படத்தின் காமெடி காட்சிகள்.
டபுள் சந்திரமுகி: சந்திரமுகி 2 என வெறுமனே டைட்டில் வைக்காமல் சந்திரமுகியையும் டபுளாக காட்டி மிரட்டியிருக்கிறார் பி. வாசு. காமெடியில் கோட்டை விட்டதை ஹாரரில் அள்ளி விட்டார்.
ரசிகர்கள் கிட்டத்தட்ட கெஸ் செய்த அதே நடிகை தான் சந்திரமுகியாக மாறுகிறார். ஆனால், இரண்டாம் பாதிக்கு மேல் ரியல் சந்திரமுகியான கங்கனா ரனாவத்தும் வேட்டையனும் வரும் காட்சிகள் மற்றும் அதன் சுவாரஸ்யத்தை பி. வாசு செதுக்கியிருக்கிறார்.

பிளஸ்: கங்கனா ரனாவத்தின் நடிப்பு மற்றும் ராகவா லாரன்ஸின் பிரசன்ஸ் தான் இந்த படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பி. வாசு சந்திரமுகி டைட்டில் வைத்து விட்டோம், சொதப்பி விடக் கூடாது என மெனக்கெட்டு ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் என்டர்டெயினர் படத்தை போராடியிருப்பது தெரிகிறது. லட்சுமி மேனன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மைனஸ்: கிரவாணியின் பிஜிஎம் மிரட்டிய அளவுக்கு ஒரு பாடலுமே படத்தில் கை கொடுக்கவில்லை. வடிவேலுவின் காமெடி டிராக் சொதப்பல், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் மற்றும் சந்திரமுகி படத்தின் பாதிப்பு என பல மைனஸ்கள் உள்ளன.
பார்க்கலாமா? வேண்டாமா?: இருந்தாலும், குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கும் படமாகவே நிறைவை தருகிறது சந்திரமுகி 2. காஞ்சனா சீரிஸில் இருந்து இனி சந்திரமுகி சீரிஸுக்கும் ராகவா லாரன்ஸ் வந்து விடுவார் என்றே தெரிகிறது. பாண்டியனாக பட்டையை கிளப்பி உள்ளார். இந்த வார விடுமுறையில் நிச்சயம் குழந்தைகளுடன் சென்று தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











