For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு வாட்ஸ்அப் வீடியோவை அனுப்பிட்டு பிரபுதேவா படும்பாடு இருக்கிறதே.... சார்லி சாப்ளின் 2 விமர்சனம்!

  |
  Charlie Chaplin 2 Audience opinion

  Rating:
  2.0/5
  Star Cast: பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு, அதாஹ் ஷர்மா, தேவ் கில்
  Director: சக்தி சிதம்பரம்
  சென்னை : ஒரு வாட்ஸ்அப் வீடியோவால் பிரபுதேவா அனுபவிக்கும் அவஸ்த்தைகளே சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தின் மையக்கரு.

  "வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பெயர் வெச்சானாம் ஒருத்தன்".... இந்த வசனத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கும் இந்த படத்திற்கு என்ன சம்மந்தம் என்பதை பிறகு சொல்கிறேன்.

  Charlie chaplin 2 movie review

  படத்தில் கதை எல்லாம் இல்லை. திரைக்கதைப்படி, ஆன்லைன் திருமண தரகரான பிரபுதேவாவுக்கு, சமூக ஆர்வலர் (?) நிக்கி கல்ராணி மீது ஒரு தலைகாதல். ஆனால் இன்னும் 15 நாட்களில் இறக்கப் போகும் இதய நோயாளியான தனது தோழியை (கோலிசோடா சீதா) தான் பிரபுதேவா காதலிக்கிறார் என தவறாக புரிந்துகொள்கிறார்கள் நிக்கியும், அவரது தந்தை பிரபுவும். ஒருகட்டத்தில் பிரபுதேவா தன்னை தான் காதலிக்கிறார் என நிக்கிக்கு தெரியவர, அவரும் காதலில் விழுகிறார். இதற்கு பிரபுவும், பிரபுதேவாவின் லூசுக்குடும்பமும் (அவங்களே அப்படி தான் இண்ட்ரோ தராங்க) ஒத்துக்கொள்கிறது.

  ஒரு நல்ல நாளில் கல்யாணம் நடப்பதற்கு நிச்சயமாகிறது. அப்போது திரைக்கதையில் டிவிஸ்ட் ஏற்படுத்துவதற்காக துபாயில் இருந்து இறக்குமதியாகிறார் பிரபுதேவாவின் நண்பர் விவேக் பிரசன்னா. நிக்கி பற்றிய கசமுசா சமாச்சாரம் பிரபுதேவாவிற்கு தெரியவர, நிக்கியையும், அவரது குடும்பத்தையும் கழுவிக்கழுவி ஊற்றி ஒரு வீடியோவை வாட்ஸ்அப் செய்கிறார் பிரபுதேவா. நிக்கி மீது தவறில்லை என்பது தெரியவருகிறது. அந்த வாட்ஸ்அப் மெசேஜ் நிக்கிக்கு போய் சேர்ந்ததா? பிரபுதேவா, நிக்கி திருமணம் என்ன ஆனது என்பது தான் மீதுப்படம்.

  Charlie chaplin 2 movie review

  பழைய காலத்து கதையில், வாட்ஸ்அப், பேஸ்புக், இண்டர்நெட் போன்ற விஷயங்களை இணைத்து, அப்டேட்டட் வெர்ஷனாக தரமுயன்றிருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். ஆனால் பெரும்பாலான காட்சிகள் பழைய பொட்டி கம்ப்யூட்டராக அலுப்பையே தருகின்றன.

  சார்லி சாப்ளின் முதல் பாகத்தை போலவே இதையும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக எடுக்க நினைத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். ஆனால் அந்த அளவுக்கு ரசிக்கக்கூடிய காமெடிக் காட்சிகள் படத்தில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய குறை.

  உடலமைப்பும், துறுதுறுப்பும் 17 வருடங்களுக்கு முந்தைய அதே பிரபுதேவாவை ஞாபகப்படுத்துகிறது. முகத்தில் மட்டுமே வயது தெரிகிறது. தன்னால் முயன்றவரை படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் மனிதர்.

  Charlie chaplin 2 movie review

  வளர்ந்து வரும் நாயகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நிக்கி கல்ராணிக்கு, இந்த படத்தின் மூலம் டாப் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படம் முழுவதும் வருகிறார். தனது கடமையை சரியாக செய்திருக்கிறார்.

  15 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், தியேட்டரில் சிரிப்பு சப்தம் கேட்பதற்கு காரணமாக விளங்குகிறார் புல்லட் புஷ்பராஜாக நடித்திருக்கும் ரவி மரியா. 'என்ன சீன்னுன்னே தெரியா பெர்பார்ம் பண்ற ஒரே ஆள் நான் தான்டா' என்று அவர் சொல்லும் இடத்தில் தியேட்டரே சிரிக்கிறது.

  மற்றபடி ஆதாசர்மா, பிரபு, டி.சிவா, விவேக் பிரசன்னா, அரவிந்த ஆகாஷ், கிரேன் மனோகர், சாம்ஸ், காவ்யா, அமீத் மற்றும் பலர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சில இடங்களில் மட்டும் தான் சிரிக்க முடிகிறது.

  Charlie chaplin 2 movie review

  படத்தில் ரசிக்கும்படியாக அமைந்திருப்பது அம்ரிஷ் இசையில் வரும் பாடல்கள். சின்ன மச்சான் பாட்டை, அந்த விஷுவலுடன் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது. அதேபோல் மற்றப் பாடல்களும் தரமாக இருக்கின்றன. ஆனால் பின்னணி இசை பாடல்கள் அளவுக்கு இல்லை.

  பாடல் காட்சிகள் உள்பட முழு படத்தையும் கலர்புல்லாக தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன். சசிகுமாரின் படத்தொகுப்பிலும் எந்த குறையும் இல்லை. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இன்னும் நிறைய அப்பேட் ஆக வேண்டும் என்றே தோன்றுகிறது.

  வாட்ஸ்அப் மெசேஜ், புளூ டிக் போன்ற சின்ன விஷயங்களை வைத்துக்கொண்டு உருவாகியுள்ள பெரிய பட்ஜெட் படம் இது. ஆனால் அதற்கு தகுந்த சரக்கு படத்தில் இல்லை. நல்ல காமெடி நடிகர்ளை நடிக்க வைத்திருந்தால், ஒர்க்கவுட் ஆகியிருக்கும்.

  அப்புறம், "வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பெயர் வெச்சானாம் ஒருத்தன்" என முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அதற்கு அர்த்தம் படம் பார்க்கும் போது உங்களுக்கே புரியும்.

  English summary
  Actor Prabhudeva starring Charlie Chaplin 2 is a comedy filled entertainment movie, but fails to engage the audience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X