Chennai City Gangsters Review: சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்.. வைபவின் வங்கி கொள்ளை படம் வொர்த்தா?
சென்னை: நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான 'அமரன்' படத்தை இயக்கிய ராஜேஷ்வரின் மகனான விக்ரம் ராஜேஷ்வர் தனது நண்பரான அருண் கேசவ் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர். வைபவ், அதுல்யா ரவி, சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்தர், ஆந்தராஜ், லிவிங்ஸ்டன், ஹுசைனி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் பிக் பாஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படமும் இன்றூ வெளியானது.
இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படமாக உருவாகியுள்ளது. ஆனால், படம் 2 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய படமாக இருந்தாலும், ரசிகர்களை சிரிக்க வைக்க முடியாமல் ரொம்பவே தடுமாறுவது தான் படத்தின் பிரச்னையே.

சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படமும் இதே போல வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படம் எந்தளவுக்கு மாறுபட்டு இருக்கிறது, எதெல்லாம் பிளஸ், எதெல்லாம் மைனஸ் என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் கதை: லிவிங்ஸ்டனை ஒரு அபாயக் கட்டத்தில் இருந்து காப்பாற்றும் வைபவையும் மணிகண்டன் ராஜேஷையும் சொந்த மகனாகவே பாவித்து தனது பீட்சா கடையில் வேலைக்கு வைத்து வளர்க்கிறார். ஹூசைனி தனது வீட்டில் கொள்ளைப் போனது போல செட்டப் செய்து, இன்சூரன்ஸ் பணத்தை ஆட்டையைப் போட நினைக்கிறார். அந்த ஹெய்ஸ்ட்டுக்கு வைபவ் மற்றும் மணிகண்டனை அனுப்பி வைக்கிறார் லிவிங்ஸ்டன். ஆனால், அவர்கள் கைப்பற்றும் பணம் தொலைந்து போகிறது. அதற்காக ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரின் கேங்குடன் இணைந்துக் கொண்டு வங்கி ஒன்றை கொள்ளையடிக்க முயல்கின்றனர்.
அந்த பழைய கேங்ஸ்டர்கள் ஆளுக்கொரு பிரச்னையை உடலில் வைத்துக் கொண்டிருக்க, கடைசியில், அந்த வங்கிக் கொள்ளை என்ன ஆனது இறுதியில் கிளைமேக்ஸ் எப்படி முடிந்தது என்பது தான் இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: வைபவ் மற்றும் சுனில் ரெட்டி இந்த ஆண்டு வெளியான பெருசு படத்தில் சிறப்பாக நடித்து நல்லாவே ஸ்கோர் செய்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு இந்த படம் பெரியளவுக்கு வரவேற்பை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். ஏகப்பட்ட காமெடி நடிகர்களை வைத்துக் கொண்டும் இயக்குநர்கள் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்களை வீணடித்திருப்பது தான் ரொம்பவே மனவேதனையை தருகிறது.

பிளஸ்: வைபவ், லிவிங்ஸ்டன், அதுல்யா ரவி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஓரளவுக்கு தாங்கிப் பிடித்து நடித்துள்ளனர். படத்தின் நீளம் குறைவாக இருப்பது பெரிய பிளஸ் ஆகவே பார்க்கப்படுகிறது. இமான் பின்னணி இசை மற்றும் சில பாடல்கள் ஆறுதல் பரிசாகவே உள்ளது.
மைனஸ்: ஆனந்த்ராஜ், சுனில் ரெட்டி, மொட்டை ராஜேந்தர், ஜான் விஜய் என நல்ல நடிகர்களை வைத்துக் கொண்டு அதிகளவில் காமெடி காட்சிகளை வொர்க்கவுட் செய்து இந்த வங்கி கொள்ளை படத்தை ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக கொடுத்திருந்தாலே படம் வெற்றிப் பெற்றிருக்கும். ஆனால், அறிமுக இயக்குநர்கள் அதனை தவறவிட்டு விட்டனர். அடுத்த முறை இன்னமும் சிறப்பாக பணியாற்றினால் வெற்றி உறுதி.


Click it and Unblock the Notifications











