அரைத்த மாவையே அரைக்காமல்.. வித்தியாசமான சிந்தனை.. டீன்ஸ் படத்தை பாராட்டிய செய்யாறு பாலு!
சென்னை: வித்தியாச விரும்பியான பார்த்திபன் 13 சிறுவர்களை வைத்து அமானுஷ்யம், சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதிய இப்படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படத்தை பார்த்த சினிமா விமர்சகர் செய்யாறு பாலு படம் குறித்து வீடியோவில் பேசி உள்ளார்.
அதில், பார்த்திபன் என்றால் வித்தியாசம், வித்தியாசம் என்றால் பார்த்திபன் என்பதை நாம் மாற்றவே முடியாது. அப்படி வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டீன்ஸ். இந்தியன் 2 பெரும்பாலான தியேட்டரை ஆக்கிரமித்துள்ள இந்த நேரத்தில், பார்த்திபன் ஏன் இந்த படத்தை வெளியிட்டார். இந்த படம் குறித்து பல பேட்டிகள், பல தகவல்களை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார். அந்த படம் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான திரைப்படமாகத்தான் இருக்கிறது.

செய்யாறு பாலு: ஒரே பள்ளியில் படிக்கும் 13 குழந்தைகள், தங்களை பெரியவர்களாக நினைத்துக் கொள்கின்றனர். பள்ளியின் ஒரு தோழி தனது பாட்டி ஊரில் ஒரு பாழடைந்த கிணறு இருப்பதாகவும், அந்த கிணற்றில் ஒரு பூதம் இருக்கிறது. நான் கிணற்றுக்குள் கியற்றை போட்டு இழுக்கும் போது கயிறு மேலே வரவில்லை என்றால், உள்ளே பூதம் இருக்கிறது என்று அர்த்தம் என்று சொல்ல, இந்த கதை கேட்டு ஆர்வமான குழந்தைகள், பள்ளிக்கு கட் அடித்துவிட்டு அந்த ஊருக்கு செல்கின்றனர். அப்போது வழியில் போராட்டம் நடப்பதால், மாணவர்கள் வழியில் இறக்கிவிடப்படுகிறார்கள். இதனால், குழந்தைகள் காட்டுக்குள் செல்கின்றனர். இதன் பின் நடக்கும் அமானுஷ்யம்தான் இந்த படத்தின் கதை.
சயின்ஸ்பிக்சன் படம்: இந்த படத்தின் டிரைலரை பார்த்த போது இது த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று நினைத்தேன். படத்தை பார்க்கும் போது குழந்தைகளுக்கான படமாக கொண்டு சென்று, பின் பேய் படமாக மாற்றி படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு சயின்ஸ்பிக்சன் படமாக மாறுகிறது. பார்த்திபன் ஒரு வித்தியாசமான நபர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த படத்தில் நடித்த 13 குழந்தைகளும் தெரிந்த முகம் இல்லை, பார்த்திபன் ஒருவர் மட்டும் தான் நமக்கு தெரிந்த முகம்.
புது முயற்சி: கமல்ஹாசன் போலத்தான் பார்த்திபன், சில விஷயத்தை தனது திரைப்படத்தில் முன்கூட்டியே செய்துவிடுவார். அந்த நேரத்தில் அது எடுபடாமல் போகும், விமர்சனம் வரும், தோல்வித்திரைப்படமாகக்கூட இருக்கும். ஆனால் 10 வருடத்திற்கு பிறகு அந்த படத்தை பற்றி பேசுவார்கள், கொண்டாடுவார்கள். அது போல பார்த்திபனும் அரைத்த மாவையே அரைக்காமல் ஒரு புதிய முயற்சியை செய்து அதில் வெற்றி பெற்று இருக்கிறார் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











