Corona Dhavan Review: மலையாளத்தில் வெளியான கொரோனா தவான் விமர்சனம்... OTT ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட்
சென்னை: மலையாளத்தில் லுக்மான், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் நடிப்பில் நிதின் இயக்கியுள்ள திரைப்படம் கொரோனா தவான்.
ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான கொரோனா தவான், ஓடிடி ரசிகர்களிடமும் கவனம் பெற்றுள்ளது.
காமெடி ஜானரில் வெளியான கொரோனா தவான் படத்தின் தமிழ் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

கொரோனா தவான் தமிழ் விமர்சனம்
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மினிமம் பட்ஜெட் படங்களில் கொரோனா தவான் மிக முக்கியமானது. சிசி நிதின் இயக்கத்தில் லுக்மான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸான கொரோனா தவான், தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங்காகி வருகிறது.
கேரளாவின் திருச்சூர் அருகே இரண்டு கிராமங்களில் மது அருந்துவதை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். ஹீரோ வினு (லுக்மான்) தனது அக்காவின் திருமணத்தில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க முடிவெடுக்கிறார். இதனால் கேரள அரசின் 30 தவான் மது பாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைக்கிறார். திருமணத்திற்கு முந்தைய இரவு வினுவின் அக்கா காதலனுடன் ஓடிவிட, கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கும் பிறப்பிக்கப்படுகிறது.
இதனால் சரக்கு அடிக்க முடியாமல் திணறும் வினுவின் நண்பர்கள், அவரிடம் அதிக விலைக்கு மது பாட்டில்கள் கேட்டு கெஞ்சுகின்றனர். ஆனால், வினுவோ யாருக்கும் மது பாட்டில்களை கொடுக்காமல் தொடர்ந்து பதுக்கி வைக்கிறார். இறுதியாக அந்த 30 மது பாட்டில்களும் என்ன ஆனது, வினுவின் காதல் கை கூடியதா என்பது தான் கொரோனா தவான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கொரோனா ஊரடங்கின் போது மது கிடைக்காமல் அவதிப்பட்ட மது பிரியர்களின் கதை தான் இந்தப் படம். லோக்கல் ரவுடியின் தம்பி (ஸ்ரீநாத் பாசி) மது கிடைக்காத விரக்தியில் செய்யும் அட்ராசிட்டிகள், கண்காணிப்புக்காக போலீஸார் பறக்கவிட்ட ட்ரோனை சரக்கு பாட்டிலால் அடித்து நொறுக்குவது, வயதான பப்பன் மது கிடைக்காமல் ஹீரோ வினுவிடம் கெஞ்சுவது என பல காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
அதேபோல், ட்ரோனை பறிகொடுத்துவிட்டு சின்ன குழந்தையாக போலீஸாரிடம் அழுது அடம் பிடிக்கும் காட்சியும் ரசிக்க வைக்கிறது. வினு பதுக்கி வைத்திருந்த 30 மது பாட்டில்களும் இறுதியாக என்ன ஆனது என்பது ஹைலைட்டான காமெடி. ஒட்டுமொத்தமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மது பிரியர்கள் பட்ட கஷ்டங்களை காமெடியாக அடுக்கியுள்ளார் இயக்குநர் நிதின். அதேநேரம் பல காட்சிகளில் நடிகர்கள் மாஸ்க் இல்லாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நடிக்க வைத்தது கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடக்கும் கதை என்பதை நம்ப முடியவில்லை.
இப்படியாக சில பல குறைகள் இருந்தாலும் காமெடியாக ரசிக்கும் படி உருவாகியுள்ளது கொரோனா தவான். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள கொரோனா தவான் ஓடிடி ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட்டாக இருக்கும். மலையாள சினிமா ரசிகர்களுக்கும் கொரோனா தவான் சிறப்பான அனுபவமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











