17 வயது பெண்ணும் 19 வயது ஆணும் காதலித்தால் தவறா.. நேர்கொண்ட பார்வை போல ஒரு தெலுங்கு சினிமா
ஹைதராபாத்: சினிமா ரசிகர்களை பொறுத்தவரை படம் நல்ல படமாக இருந்தால் அதற்கு மொழி தேவையில்லை. ஸ்டார் நடிகர்களை காட்டிலும் சிறு பட்ஜெட்டில் ரசிகர்களை கவரும் படங்கள் ஏராளம் உள்ளன. குறிப்பாக அப்படத்தின் டிரைலர் அல்லது டீசர் ரசிகர்களை கவர்ந்திருந்தால் போதுமானது அப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆவலும் அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த வாரம் தெலுங்கில் வெளியான கோர்ட் திரைப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.
தெலுங்கு நடிகர் நானி தயாரிப்பில் உருவாகியுள்ள கோர்ட் படம் வெளியாகி 10 நாட்களில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரம்மாண்ட செலவில் இல்லாத சாதாரண கதைதான். சிவாஜி, ரோகினி, சாய்குமார், பிரியதர்ஷி போன்ற நடிகர்களே இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை புதுமுக இயக்குநர் ராம் ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் விழாவில் பங்கேற்ற நானி, கோர்ட் படத்தை பார்க்காதவர்கள் ஹிட் 3 படத்தையும் பார்க்க வேண்டாம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர், அவர் கூறியது போலவே தெலுங்கு திரையுலகில் இப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்திருக்கிறது. பிரம்மாண்ட நடிகர்களும் பாராட்ட தொடங்கிவிட்டனர். மார்ச் 14ஆம் தேதி வெளியான கோர்ட் திரைப்படம் 3 நாளில் 8 கோடி வசூலித்தது. பின்னர், 100 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து மெய்சிலிர்த்து போன சிரஞ்சீவி சிவாஜியை அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்ட சிவாஜி நன்றி அண்ணா என தெரிவித்திருந்தார். அதை போன்று பல பிரபலங்களும் சிவாஜியின் நடிப்பை பாராட்டி பேசினர்.
போக்சோ வழக்கு: அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்களுக்கு இப்படத்தை பார்க்க ஆர்வம் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை போன்ற கதைக்களம் கிடையாது. ஆனால், படம் முழுக்க கோர்ட் காட்சிகள் இடம்பெறும். போக்சோ சட்டத்தை தவறாக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கதைக்கரு. முதல் பாதி ஜனரஞ்சகமான காதல் கதையாகவும் ,பின் பாதி லீகல் டிராமாவாகவும் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல திரைக்கதையால் கவனம் பெற்றிருக்கிறது.

காதல்: நாயகி 17 வயது ஆன மைனர் பெண். நல்ல வசதியான பெண்ணாகவும் இருக்கிறார். சலைவைத் தொழிலாளியின் மகனாக இருக்கும் கதாநாயகனுக்கு வயது 19. பணக்கார பெண்ணும், கூலித்தொழிலாளியின் மகனும் காதலிக்கிறார்கள். நாயகியின் அப்பா தான் வில்லன் (சிவாஜி). தன் மகளை கடத்தி மிரட்டியதாக போக்சோ சட்டத்தில் புகார் பதிவு செய்கிறார். ஒரு கட்டத்தில் தன் மகளை வன்கொடுமை செய்ததாக பொய்ப்புகார் தருகிறார். இந்த வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. வில்லனாக நடித்திருக்கும் சிவாஜி இளைஞனின் தரப்பு வக்கீலை விலைக்கு வாங்கி விடுகிறான். இதனால். நாயகன் பக்கம் கேஸ் நிற்கவில்லை. இன்னும் 3 நாட்களில். தீர்ப்பு என நீதிபதி சொல்லி விடுகிறார்.
இந்த வழக்கை ஒரு புது வழக்கறிஞர் தன் முதல் வழக்காக இதை எடுத்து நடத்துகிறார். வில்லன் உருவாக்கி வைத்த பொய் சாட்சிகளை அந்த வக்கீல் எப்படி முறியடித்து நாயகனுக்கு நீதி வாங்கிக்கொடுத்தான் என்பது மீதிக்கதை வழக்கறிஞராக வரும் பிரியதர்ஷி புலிகொண்டா நடிப்பில் அசத்திவிட்டார். ஜூனியர் வக்கீல் ஆகவே எத்தனை நாட்கள் இருப்பது என்ற அவரின் ஏக்கமும், தனது முதல் வழக்கில் திறம்பட செயல்பட வேண்டும் என்ற தனித்துவம் பாராட்டுதலை பெறுகிறது. நாயகனாக வரும் ஹர்ஸ் ரோசன் அப்பாவித்தனத்துடன் காதல் வரும் போது இளமை ததும்ப காட்சியளிக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 19 வயது. அவரை காதலிக்கும் பெண்ணின் வயது 17. தற்செயலாக மொபைல்போனில் பேசத் தொடங்கும் இருவரும் தங்களது காதலை உணர்கின்றனர். கல்வியறிவு இல்லாத 19 வயது இளைஞன் சாலையில் மொபைல் போன் விற்பது, பார் அட்டெண்டர் என்று பல வேலைகளைச் செய்கிறான். அந்தப் பெண்ணோ ஒரு கல்லூரியில் இண்டர்மீடியட் கோர்ஸை படிக்கிறார். காதலிக்கும் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து செல்லும் இளைஞனை பார்த்து அவரது தாயும், சகோதரியும் பதறுகிறார்கள். தந்தையிடம் காதலை சொல்லாமல் இருப்பதால் இருவரையும் சிக்கலில் மாட்ட வைக்கிறது.
சிரஞ்சீவி, பவன் கல்யாண், ரவி தேஜா போன்ற ஸ்டார் நடிகர்களுடன் துணை நடிகராக வந்த சிவாஜி, இப்படத்தில் முழு திறமையும் காட்டி மிரட்டி விடுகிறார். ஒரு அப்பாவாக தனது மகள் ஒரு கூழி மகனை காதலிப்பதை ஏற்க முடியாமல் செய்யும் அடுத்த அநீதி என கதை தொடரும் நேரத்தில் சிவாஜி நடிப்பு அற்புதம். ரோகினி சிவாஜியின் மனைவியாக வந்து தன்னால் முயன்றவரை பாத்திரத்திற்கு தேவையான நடிப்பை தந்திருக்கிறார். அதனோடுசாய் குமார், ஹர்சவர்தன்,சுபலேகா சுதாகர் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர். முதல் பாதி கமர்சியலாகவும் ,பின் பாதி விறுவிறுப்பான கோர்ட் ரூம் டிராமாவாகவும் இருக்கிறது கோர்ட் திரைப்படம்.
இரண்டாம் பாதியில் போக்சோ குற்றச்சாட்டில் சிக்கியவரை விடுவிக்கும் விதமாக நடக்கும் விசாரணை விறுவிறுப்பாகவும் மனதை கல்லாக்கும் சில காட்சிகளும் இடம்பெறுகின்றன. முதல் பாதியில் காதலை அள்ளித் தந்தாலும் இரண்டாம் பாதியில் நல்ல கதையை பார்த்த திரை அனுபவத்தை தந்திருக்கிறார் ராம் ஜகதீஷ். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு கதை சொல்கிறது. காெஞ்சம் கமர்ஷியல் பேக்கேஜ் இருந்தாலும் செயற்கைத்தனம் இல்லாத நல்ல பீல் குட் படம் பார்த்த அனுபவம் கிடைக்கும். கோர்ட் காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் பார்ப்பவர்களுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். செய்யாத குற்றத்திற்காக ஒரு இளைஞன் அவனது குடும்பங்கள் என்ன மன வேதனை அடையும் என்பதை தெளிவுப்பட காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

மகனுக்காக ஒரு தந்தை அவதிப்படும் காட்சிகளாக இருக்கட்டும், ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்கும் காட்சிகள் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. தெலுங்கில் வெளியான s/o kancharapalem, கலர் போட்டோ, மிடில் கிளாஸ் மெலோடிஸ், பேப்பர் பாய், மெயில் வகை படங்களை ரசித்தவர்களுக்கு இப்படமும் கண்டிப்பாக பிடிக்கும். எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமல் கமர்ஷியல் மசாலாக்களை விரும்பாத ரசிகர்களை கவரும் வகையில் மிக எதார்த்த படைப்பாக இருக்கிறது. எங்கோ ஒரு இடத்தில் போக்சோ வழக்கால் ஒரு இளைஞன் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறான். அதிகார வர்க்கம் பணம் இருந்தால் எதையும் செய்யும் என்பதையும் புரிய வைத்திருக்கிறது கோர்ட். தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படத்தை பார்த்து சிலாகிக்க தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











