twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Dev review: ஸ்டைலிஷ் கார்த்தி... ரெமாண்டிக் ரகுல்... ஊர் சுற்றிக்காட்டும் 'தேவ்'! விமர்சனம்

    நேர் எதிர் குணாதிசயங்களை கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வாழ்வில் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும் எனபது தான் தேவ் படத்தின் கதை.

    |

    Rating:
    3.0/5
    Star Cast: கார்த்தி, ரகுல் பிரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக் முத்துராம்
    Director: ராஜாத் ரவிஷங்கர்

    சென்னை: வாழ்வை தனது சந்தோஷத்துக்காக வாழும் ஒரு ஆணும், பணம் மட்டுமே உலகம் ஆண்கள் எல்லாம் மோசம் என நினைக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் வந்தால், அது எப்படி இருக்கும். அது தான் தேவ்.

    படத்தை பற்றி சொல்லுவதற்கு முன்னால், தேவ் நமக்கு தரும் அனுபவத்தை பற்றி பேச வேண்டும். நாம் பார்த்திராத பல விஷயங்களை தேவ் நமக்கு காட்டுகிறது. இது போன்ற இடங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன என்ற வியப்பை தருகிறது. ஒருமுறையாவது அங்கு போய்வரமாட்டோமா என்ற ஏக்கத்தை உண்டாக்குகிறது.

    Dev movie review

    சாகசப்பிரியரான கார்த்தி, தனக்கு பிடித்தது போல் சுதந்திரமாக வாழ்க்கையை வாழும் பணக்கார வீட்டு பையன். அவருடைய பால்ய நண்பர்கள் ஆர்ஜே விக்னேஷும், அம்ரிதாவும். எங்கு சென்றாலும் மூவரும் இணைந்து செல்வதே வழக்கம். கார்த்திக்கு நேர் எதிரான கேரக்டர் ரகுல் ப்ரீத்சிங்கினுடயது. தன்னையும் தனது தாய் ரம்யா கிருஷ்ணனையும் தனியாக தவிக்கவிட்டு சென்ற தந்தையினால், ஆண் குலத்தையே வெறுக்கிறார். சுயமாக உழைத்து முன்னேறி பெரிய தொழிலதிபராக உயர்கிறார்.

    இப்படி இருக்கும் ரகுல் மீது கார்த்திக்கு காதல் வருகிறது. ஆனால் ஆண் என்றாலே அருவருப்பாக பார்க்கும் ரகுல், கார்த்தி மீதும் வெறுப்பையே காட்டுகிறார். கார்த்தி எப்படி ரகுலின் மனதை மாற்றுகிறார் என்பது தான் படம்.

    Dev movie review

    படம் துவங்குவதே இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து தான். அப்படியே, உக்ரைன், சான் பிரான்சிஸ்கோ, லண்டன், சென்னை, மும்பை என பயணித்து மீண்டும் எவரெஸ்டில் போய் முடிகிறது. உக்ரைனில் உள்ள மில்கிவே காட்சிகள், அதிகாலையில் பறவைகள் கூட்டமாக பறந்து செல்லும் காட்சி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் பனிபுயல் என ஒரு பிரம்மிப்பான பயணம் மேற்கொண்ட உணர்வையே படம் தருகிறது. குறிப்பாக படம் முழுவதும் பாசிடிவாக இருப்பதை பாராட்ட வேண்டும்.

    கார்த்தி - ரகுல் இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது. படத்தில் வில்லனோ, பெரிய திருப்பங்களோ எதுவும் இல்லை. இந்த படத்திற்கு அது தேவையும் இல்லை. ஆனால் படத்தை சுவாரஸ்யமாக தர தவறிவிட்டார் இயக்குனர் ரஜத் ரவிஷங்கர். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை வசனங்களினால் தான் பெரும்பாலும் நிரம்பி இருக்கிறது படம். ஆனால் அந்த வசனங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் இல்லாததால், ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக படத்தின் திரைக்கதை தான் மிகவும் சொதப்பல்.

    Dev movie review

    கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்திருக்கும் படம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அதனை படம் பூர்த்தி செய்யவில்லை. கார்த்தியை பொறுத்த வரை இந்த படத்தில் மிகப் பொலிவுடன் அழகாக தோற்றமளிக்கிறார். வழக்கம் போல் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். ஆனால் ஒரு நடுத்தர குடும்பத்து பையனாகவே கார்த்தியை பார்த்துவிட்டு, இப்படி ஒரு பணக்கார வீட்டு சீமபுத்திரனாக பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருக்கிறது.

    Dev movie review

    ரகுலுக்கு இது முக்கியமான படம். இதன் ரிசல்ட் என்னவாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் ரகுல் வெற்றி பெற்றிருக்கிறார். கதையோட்டத்துடன் சும்மா பயணிக்காமல், தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.

    Dev movie review

    காமெடிக்கு நான் கேரன்டி என ஆர்ஜே விக்னேஷ் களம் இறங்கியுள்ளார். ஆனால் ஸ்டான்டப் காமெடி என ஆரம்பித்து, நண்பனின் கதையை அவர் சொல்லத் தொடங்கிவிடுவதால் சிரிப்பு வரமறுத்துவிடுகிறது. ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைத்தும், பல காட்சிகளில் எரிச்சல் வரவைத்தும் ரசிகர்களை ரணகளப்படுத்துகிறார் விக்னேஷ்.

    கார்த்தியின் தோழியாக வரும் அம்ரிதா நல்ல சாய்ஸ். தோழிப்பெண்ணாக வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். ரம்யா கிருஷ்ணனையும், பிரகாஷ் ராஜையும் இன்னும் கூட நிறைய காட்சிகளில் பயன்படுத்தி இருக்கலாம். அதுபோல தான் ரேணுகா ரோலும்.

    Dev movie review

    வெகு நாட்கள் கழித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு படம். அனங்கே சினுங்குதே, ஒரு நூறு முறை, எங்கடி நீ போன என எல்லா பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கின்றன. பின்னணி இசையில் வழக்கமான ஹாரிஸ் முத்திரை.

    ஓரு டிராவல் போட்டோகிராபர் போலவே படத்தை படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். எல்லோரையுமே அழகாக காட்டியிருக்கிறார். இந்த படத்தின் எடிட்டர் ரூபன் என்று சொன்னால் அவரே நம்பமாட்டார். அந்த அளவுக்கு தான் இருக்கிறது படத்தொகுப்பு.

    Dev movie review

    படத்தில் எல்லாமே பாசிவிடிவாக இருப்பதால், சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும் படம் மெதுவாக நகர்வதும், எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதும் சலிப்பை தான் தருகிறது. இதுபோன்ற காதல் கதைகள் பலமுறை தமிழில் வந்துவிட்டன என்பதையும் இயக்குனர் நினைவில் கொள்ள வேண்டும்.

    இருப்பினும் எளிதில் பார்க்க முடியாத பல இடங்களை சுற்றி காண்பித்ததற்காக தேவ் படக்குழுவுக்கு மிக்க நன்றி. 'தேவ்' ஒரு சுகமான, அதேசமயம் பொறுமையை சோதிக்கும் மெதுவான பயணம்.

    English summary
    Karthi, Rakul starring, Rajath Ravishankar directorial 'Dev' is travel movie with lots of positivity and love.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X